இப்படியெல்லாமா நடக்கும் என்று சிந்திக்க வைத்திருக்கிறார்கள் சில வியாபாரிகள்..!
தங்களது அனுமதியில்லாமல் விஜய் நடித்த சில படத்தின் பாடல்களை மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பயன்படுத்தியதற்காக ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர் விஜய் நடித்த சில திரைப்படங்களின் இசை உரிமையை வைத்திருக்கும் நிறுவனத்தினர்.
பொதுவாக விஜய் நடிக்கும் திரைப்படங்களின் பாடல் உரிமைகள் மிக அதிக விலைக்கு விற்கப்படும். பாடல் உரிமைகளை வாங்கியிருக்கும் நிறுவனங்கள் இந்தப் பாடல்கள் பாடல் மற்றும் இசையை பொது மேடைகளில் பயன்படுத்த ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகக் கேட்கின்றன. இந்தத் தொகை பல லட்சங்களைத் தொடும்.
இசையை விற்பனை செய்துவிட்டதால் அதை ஒரே ஒரு முறை மேடையில் நடனமாடுவதற்கு இத்தனை பெரிய கட்டணத்தைக் கட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் திரையுலகத்தினர்.
இதனால்தான் இப்போதெல்லாம் திரைப்பட விழாக்களில்கூட காமா, சோமா என்று அதிகம் புகழ் பெறாத பாடல்களுக்கு மட்டுமே நடனக் கலைஞர்கள் ஆடுகிறார்கள்.
இதே நிலைமைதான் தற்போது விஜய்க்கும் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அவரது சொந்தப் படம் போன்ற ‘மாஸ்டர்’ பட விழாவிலேயே விஜய்க்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்பட விழாவில் அவர் நடித்த முந்தைய படங்களில் சில திரைப்படப் பாடல்களுக்கு நடனக் கலைஞர்கள் ஆடுவது போலவும், சில பாடல்களைப் பாடுவது போலவும் நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த நிகழ்ச்சிகள் சன் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகின.
இப்போது “இந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பட்ட பாடல்களை பயன்படுத்த எங்களிடத்தில் அனுமதி பெறவில்லை…” என்று சம்பந்தப்பட்ட இசை வெளியீட்டு நிறுவனம் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவினைக் கேட்டு ‘மாஸ்டர்’ படக் குழுவே அதிர்ச்சியடைந்துள்ளது.
விஜய் படத்தின் பாடல்கள் மிக அதிக விலைக்கு விற்பனையாவது விஜய் என்ற மனிதருக்கு உள்ள பிராண்ட்டினால்தான். ஆனால், அதே விஜய் நடித்த படத்தின் விழாவில் முந்தைய படங்களின் பாடல்களையும், இசையையும் ஒளிபரப்ப அதிகக் கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்றெல்லாம் சொல்வது நகை முரணாக இருக்கிறது..!
இனிமேலாவது இது போன்ற மிகப் பெரிய நடிகர்களின் நடித்த படங்களின் இசை உரிமங்களை விற்பனை செய்யும்போது சில நிகழ்ச்சிகளுக்கு விதிவிலக்கு கேட்டு ஒப்பந்தம் செய்வது அவர்களுக்கும் நல்லது.. சினிமா துறைக்கும் நல்லது.









