‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
“தனுஷ் நடித்த ‘வேலையில்லா படட்தாரி’ திரைப்படத்தில் ராமகிருஷ்ணா பள்ளிகளை தரக்குறைவாக விமர்சித்து வசனம் இருப்பதால் அந்த வசனங்களை நீக்க வேண்டும். இல்லாவிடில் அந்தப் படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்..” என்று கூறி ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த எஸ்.துரைராஜ், எஸ்.பாண்டுரங்கன், ஏ.பழனிவேலு, கே.அருணாசலம் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன், “இந்த வழக்கில் இதற்கு மேல் விசாரிக்க முகாந்திரம் ஏதுமில்லை. படத்தை புறக்கணிப்பது ஒன்றுதான் மனுதாரர்கள் தங்களது எதிர்ப்பை காட்டும் சரியான வழி…” என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்தார்.
நீதிபதி தன் தீர்ப்பில் மேலும் கூறுகையில், “1893-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச மத மாநாட்டில் பேசிய சுவாமி விவேகானந்தர், பொறுமை மற்றும் சகிப்புத் தன்மையின் சிறப்புகளை உலகுக்கு கற்றுக் கொடுக்கும் நாட்டிலிருந்து தான் பிரதிநிதியாக வந்திருப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.
இந்த மனுவை விசாரிக்கும் நானும், மனுவை தாக்கல் செய்துள்ள மனுதாரர்களும் உண்மையிலேயே விவேகானந்தரை பின்பற்றுபவர்களாக இருந்தால், அந்தத் திரைப்படத்தில் வரும் சர்ச்சைக்குரிய அந்த வசனத்தை புறக்கணித்துவிட வேண்டும்.
சில விஷயங்களை எதிர்ப்பதைவிட அவற்றை புறக்கணிப்பதன் மூலம் மக்கள் மனதில் இருந்து விரைவில் அது தொடர்பான நினைவுகளை அகற்றிவிட முடியும்.
மனுதாரர்கள் குறிப்பிடும் படம் ஏற்கெனவே தியேட்டர்களில் ஓடி முடிந்து விட்டது. இந்த மனுவை ஏற்றுக் கொண்டு, நோட்டீஸ் அனுப்புவதன் மூலம் மீண்டும் அந்த படம் தியேட்டரில் ஓடுவதற்கான வசதியை செய்து கொடுக்க நான் விரும்பவில்லை…” என்று நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இது போலவே அனைத்து வழக்குகளிலும் “மறந்திருங்க.. புறக்கணிச்சிருங்க”ன்னு சொல்லிட்டுப் போயிரலாமா..? வர வர நீதிமன்றங்களும் மரத்தடி பஞ்சாயத்து மாதிரி ஆயிருச்சு..!