full screen background image

விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை

விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்திற்கு பிரபல நடிகரான உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். படம் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி காத்திருக்கிறது.

தற்போது இப்படத்தை ரீலீஸ் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விஜய் ஆண்டனி நடித்து சென்ற ஆண்டு வெளியான ‘அண்ணாதுரை’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை பிக்சர் பாக்ஸ் கம்பெனியின் உரிமையாளரான விநியோகஸ்தர் அலெக்சாண்டர் வாங்கி ரீலீஸ் செய்தார்.

“படம் நன்றாக வந்துள்ளது…” என விஜய் ஆண்டனி கூறியதை நம்பி அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளார் அலெக்சாண்டர். படம் ரீலீஸ் ஆகும் நாள்வரையிலும் படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு விஐய் ஆண்டனி ‘அண்ணாதுரை’ படத்தை திரையிட்டு காண்பிக்கவில்லை.

படம் வெளியான பின்பு முதல் மூன்று நாட்களில் ‘அண்ணாதுரை’ படத்திற்கு சுமாரான   வசூல்தான் கிடைத்தது. திரையிட்ட தியேட்டர்களில் முதல் வாரமே படத்தை எடுத்து விட்டு வேறு படத்தை திரையிட்டு விட்டனர்.

இதனால் ‘அண்ணாதுரை’ படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை வாங்கி வெளியிட்ட பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டருக்கு 4 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது.

அலெக்சாண்டர் இது குறித்து படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியிடம் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் இருவருக்குமிடையே உடன்பாடு ஏற்படவில்லை.

“பணத்தைத் திருப்பித் தருவதற்கு பதிலாக தற்போது நான் நாயகனாக நடித்து வரும் ‘காளி’ படத்தை குறைந்த விலைக்கு தருகிறேன். அதை விற்பனை செய்து கடனை அடைத்துக் கொள்ளுங்கள்…” என விஜய் ஆண்டனியும் அவரது மனைவி பாத்திமாவும் அலெக்சாண்டரிடம் கூறியுள்ளார்கள்.

.அதற்கு உடன்பட்ட அலெக்சாண்டர் ஐம்பது லட்ச ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து காளி படத்தின் தமிழ்நாடு தியேட்டர் உரிமைக்கு அக்ரிமெண்ட் போட்டு உள்ளார்.

எதிர்பாராதவிதமாக திரையுலகில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி நடை பெற்று வருவதால் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் புதிய படங்களை வாங்க தயக்கம் காட்டியதால் ‘காளி’ படத்திற்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையை, பிக்சர் பாக்ஸ் கம்பெனி உரிமையாளர் அலெக்சாண்டரால் உரிய நேரத்தில் செலுத்த முடியவில்லை.

இதையடுத்து ஒப்பந்தபடி பாக்கித் தொகை செலுத்தத் தவறியதால் ‘காளி’ படத்தின் விநியோக ஒப்பந்தத்தை ரத்து செய்ய போவதாக விஜய் ஆண்டனி அலெக்சாண்டருக்கு கடிதம் அனுப்பினார்.

இந்தச் சர்ச்சையால் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர் அலெக்சாண்டர் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

“அண்ணாதுரை’ படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை கேட்டு போனபோது, ‘காளி’ படத்தை கட்டாயப்படுத்தி எங்களை வாங்க வைத்தது விஜய் ஆண்டனியும், அவரது மனைவியும்தான்.

இப்போது ஒப்பந்தத்தை காரணம் காட்டி ‘அண்ணாதுரை’ படத்தில் எனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஒப்புக் கொண்டபடி கொடுக்காமல் ஏமாற்றப் பார்க்கிறார்கள்.

எனவே எனக்கு ‘அண்ணாதுரை’ படம் மூலம் ஏற்பட்ட நஷ்டத்தை கொடுத்துவிட்டுத்தான் ‘காளி’ படத்தை வெளியிட வேண்டும்..” என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விநியோகஸ்தர் அலெக்சாண்டர் வழக்கு தொடுத்தார்.

கடந்த 9-ம் தேதி இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி “வரும் ஏப்ரல் 11-ம் தேதிக்குள் 4 கோடியே 73 லட்சத்தை அலெக்சாண்டர் அவர்களுக்காக நீதிமன்றத்தில் விஜய் ஆண்டனி செலுத்தி விட்டு ‘காளி’ படத்தை ரீலீஸ் செய்ய வேண்டும். இல்லையெனில் படத்திற்கான தடை தொடரும்…” என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Our Score