செக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்

செக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

படத்தில் பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டயனா எரப்பா, அதிதி ராவ், தியாகராஜன், மன்சூரலிகான் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – மணிரத்னம், சுபாஷ்கரன், இயக்கம் – மணிரத்னம், எழுத்து – மணிரத்னம், சிவ ஆனந்த்,  இசை – ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன், பாடல்கள் – வைரமுத்து, படத் தொகுப்பு - ஷ்ரிகர் பிரசாத், தயாரிப்பு வடிவமைப்பு – ஷர்மிஸ்தா ராய், உடை வடிவமைப்பு – ஏகா லகானி, சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், ஒலிப்பதிவு – எஸ்.சிவக்குமார், ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, ஒப்பனை – ஷெரினா டிக்ஸிரா, ஸ்டில்ஸ்- சி.ஹெச்.பாலு, விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, கலரிஸ்ட் – கென் மெட்ஸ்கர், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், லைன் புரொடியூஸர் – கே.சின்னத்துரை, நிர்வாகத் தயாரிப்பு – சிவ ஆனந்த்.

இந்தியாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியிருக்கும் 26-வது திரைப்படம் இது. 18-வது நேரடி தமிழ்ப் படம் இதுவாகும். இதற்கு முந்தைய படமான ‘காற்று வெளியிடை’ சரியாகப் போகவில்லை என்பதால் இந்த முறை இன்றைய இளம் இயக்குநர்களுக்குப் போட்டியாக அவர்களுக்கு நிகராக இறங்கி அடித்திருக்கிறார் மணிரத்னம். அடித்ததன் விளைவு, இப்போதும் தியேட்டர்களில் கூட்டம் அள்ளிக் கொண்டிருக்கிறது. படத்தின் கதை அப்படிப்பட்டது.

சென்னையில் மிகப் பெரிய பணக்காரர் சேனாதிபதி என்னும் பிரகாஷ்ராஜ். கட்டுமானம், மணல் மாபியா, சுரங்கம் என்று அனைத்துத் தொழில்களையும் கைவசம் வைத்துக் கொண்டு கூடவே அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை என்று மாபியா வேலையையும் செய்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.

இவருடைய மனைவி ஜெயசுதா. இவருக்கு மூன்று பையன்கள், ஒரு பொண்ணு. இவர்களில் ‘வரதன்’ என்னும் அரவிந்த்சாமி மூத்தவர். ‘தியாகு’ என்னும் அருண் விஜய் இரண்டாமவர். ‘எத்திராஜ்’ என்னும் சிம்பு மூன்றாவது கடைசிப் பையன். பொண்ணுக்கு இப்போதுதான் திருமணம் முடிந்து அவரும் கர்ப்பிணியாக உள்ளார்.

அரவிந்த்சாமியின் மனைவி ‘சித்ரா’ என்னும் ஜோதிகா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஆனாலும் ஒரு சேனலின் கிரைம் நியூஸ் ரிப்போர்ட்டரான  ‘பார்வதி’ என்னும் அதிதி ராவ்வை கீப்பாக வைத்திருக்கிறார் அரவிந்த்சாமி. இது ஜோதிகாவுக்கும் தெரியும். அருண் விஜய்யின் மனைவி 'ரேணு' என்னும் ஐஸ்வர்யா ராஜேஷ். ஈழத்து தமிழச்சி. இவர்களுக்கும் இரண்டு பிள்ளைகள். கடைசி பையனான சிம்பு இப்போதுதான் ‘சாயா’ என்னும் டயனா எரப்பாவை லவ்விக் கொண்டிருக்கிறார்.

அரவிந்த்சாமியின் உயிர் நண்பரும், அவரது குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்தவருமான ‘ரசூல் இப்ராஹீம்’ என்ற விஜய் சேதுபதி ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். ஒரு குற்றவாளியை அடித்து, உதைத்து காயப்படுத்தியதற்காக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதற்காக அரவிந்த்சாமியின் தயவை நாடி வருகிறார். அரவிந்த்சாமியும் செய்வதாக ஒத்துக் கொள்கிறார்.

தன்னுடைய திருமண நாளன்று கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பும் பிரகாஷ்ராஜையும் அவரது மனைவி ஜெயசுதாவையும் ஒரு கும்பல் கொலை செய்ய முயல்கிறது. கொலை முயற்சித் தாக்குதலில் இருவரும் உயிர் தப்பினாலும் சீரியஸான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

துபாயில் ஷேக்குகளுடன் பிஸினஸ் பேசிக் கொண்டிருந்த அருண்விஜய் தனது மனைவி, பிள்ளைகளுடன் அலறியடித்துக் கொண்டு ஓடி வருகிறார். செர்பியாவில் தனது காதலியுடன் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டிருக்கும் சிம்புவும் சென்னை திரும்புகிறார். சென்னையிலேயே இருக்கும் அரவிந்த்சாமியும் மருத்துவமனைக்கு ஓடி வருகிறார்.

அம்மாவுக்கு முகத்தில் காயங்கள். அப்பாவும் உயிர் பிழைக்கிறார். வீட்டுக்கு வருகிறார்கள். தங்களது தந்தையை கொலை செய்ய முயற்சித்தது தங்களது அப்பாவின் பரம எதிரியான ‘சின்னப்பதாஸ்’ என்ற தியாகராஜன்தான் என்று உறுதியாய் சொல்கிறார் அரவிந்த்சாமி.

இதனால் தியாகராஜனை சந்தித்து மூன்று பிள்ளைகளும் அவரை எச்சரிக்கிறார்கள். தியாகராஜன் தான் இதை செய்யவில்லை என்று உறுதியாகச் சொல்கிறார். ஆனால் பழி வாங்கும் மனப்பான்மையில் இருந்து பின்வாங்காத அரவிந்த்சாமி, தியாகராஜனின் மருமகனை கொலை செய்கிறார்.

இதையடுத்து தியாகராஜனின் ஆட்கள் அரவிந்த்சாமியை கொலை செய்ய முயல்கிறார்கள். இந்தக் குழப்பத்திற்கிடையில் பிரகாஷ்ராஜின் மகளுக்கு குழந்தை பிறக்கிறது. இந்த வைபவத்திற்கு வரும் சின்னப்பதாஸ் தான் பிரகாஷ்ராஜூவுக்கு எதிராக எதையும் செய்யவில்லை என்று உறுதியாகச் சொல்கிறார். இதனை பிரகாஷ்ராஜுவும் ஏற்றுக் கொள்கிறார்.

இப்போது மூன்று மகன்களுக்குள்ளும் ஒரு எண்ணம் தீவிரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. அப்பாவுக்கு அடுத்து யார் தலைவராவது என்று..! இந்தக் குழப்பத்தில் தன்னைக் கொலை செய்ய முயற்சித்ததே தனது மகன்களில் ஒருவர்தான் என்று உறுதியாக நம்புகிறார் பிரகாஷ்ராஜ். அது யாரென்றும் தெரிந்து வைத்திருக்கிறார். ஆனால் இதனை ஜெயசுதாவால் நம்ப முடியவில்லை.

இந்த நிலையில் திடீரென்று பிரகாஷ்ராஜ் தன் வீட்டில் இயற்கையாகவே இறந்து போகிறார். அருண் விஜய்யும், சிம்புவும் வேலையில் பிஸி என்று சொல்லி அப்பாவின் மரணத்திற்கு வராமல் தட்டிக் கழிக்கிறார்கள். சிம்பு வெளிநாட்டில் தனது காதலியை அவர்களது குடும்பத்தினர் மத்தியில் திருமணம் செய்து கொள்கிறார்.

இப்போது பிரகாஷ்ராஜின் இடத்தில் யார் உட்கார்வது என்கிற அதிகாரப் போட்டி உடனேயே துவங்குகிறது. மூன்று மகன்களும் ஆளுக்கொரு பக்கமாக கொடி தூக்குகிறார்கள்.

ஹனிமூன் கொண்டாடி வரும் வேளையில் சிம்புவின் மனைவி டயானா எரப்பாவை யாரோ துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்கிறார்கள். அது யாரென்று தெரியாமல் தவிக்கிறார் சிம்பு.

இன்னொரு பக்கம் துபாயில் இருக்கும் அருண் விஜய் கேட்கும் பணத்தை வங்கியில் போட மறுக்கிறார் அரவிந்த்சாமி. இது தொடர்பாக அருண் விஜய்க்கும், அரவிந்த்சாமிக்கும் இடையில் வார்த்தை மோதல்கள் வெடிக்கின்றன.

இந்தச் சூழலில் அருண் விஜய்யின் துபாய் வீட்டில் ஐஸ்வர்யாவின் ஹேண்ட் பேக்கில் ஹெராயின் போதை பொருள் இருந்ததாகச் சொல்லி ஐஸ்வர்யாவை துபாய் போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது. இப்போது சிம்புவும் துபாய்க்கு வந்து அருண் விஜய்யிடம் “அடுத்தத் தலைமைப் பொறுப்பை நீ ஏற்றுக் கொள்…” என்று அட்வைஸ் செய்கிறார்.

தனது மனைவி சிறைக்குப் போனதற்கு நிச்சயமாக அரவிந்த்சாமிதான் காரணம் என்று நினைக்கும் அருண் விஜய் சிம்புவைத் துணைக்கு அழைத்துக் கொண்டு நேபாளம் வழியாக இந்தியா திரும்புகிறார். ஆனால் நேபாள போலீஸை வைத்து அவர்களைத் தூக்கும் அரவிந்த்சாமி அவர்களை அடித்துத் துவைக்க ஆட்களை ஏற்பாடு செய்து, அதனை லைவ்வாக வீடியோவில் பார்த்தும் ரசிக்கிறார்.

இது எல்லாமே அரவிந்த்சாமியின் வேலைதான் என்பதை அறியும் சிம்பு, அருண் விஜய் இருவரின் கோபமும் எல்லை தாண்டுகிறது. நேபாளத்தில் இருந்து அதிரடியாய் தப்பிக்கும் அவர்கள் சென்னை வந்து சேர்கிறார்கள்.

அவர்கள் சென்னை வந்துவிட்டதை அறியும் அரவிந்த்சாமி தனது தாயார், மனைவி ஜோதிகாவுடன் அவர்களிடமிருந்து தப்பித்து ஓடுகிறார். சிம்பவும், அருண் விஜய்யும் அவர்களை விடாமல் துரத்துகிறார்கள். இடையிடையே இந்த மூவருக்குமே உதவிகள் செய்து நல்லவராக நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி.

கடைசியில் சகோதரர்களின் போர் முடிந்ததா..? இறுதியில் யார்தான் உயிருடன் மிஞ்சுகிறார்கள் என்பதுதான் இந்தச் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் திரைக்கதை.

2013-ல் வெளி வந்த ‘New World’ என்கிற கொரியப் படத்தின் கதைக் கருவைக் கொண்டுதான் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

ஒரு மிகப் பெரிய தாதாவின் சாம்ராஜ்யத்தை சீர்குலைக்க போலீஸ் துறை சதி செய்கிறது. இந்தச் சதியில் தாதாவும், அவரது மூன்று மகன்களும் எப்படி சிக்கிச் சின்னா பின்னமாகிறார்கள் என்பதுதான் ‘New World’ என்கிற கொரிய படத்தின் கதைக் கரு. இதுதான் இந்தச் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் கதைக் கருவும்கூட..!

கதைக் கருவை மட்டுமே கொரிய படத்தில் இருந்து எடுத்துக் கொண்ட மணிரத்னம், சிற்சில காட்சிகளைத் தவிர மற்றவைகளை தமிழுக்கென்று புதிதாய் அமைத்திருக்கிறார். அத்தனையும் நல்முத்துக்கள்.

திரைக்கதையாளரும் இந்தப் படத்தின் இணை தயாரிப்பாளரும், இந்தப் படத்தில் ஜோதிகாவின் அப்பாவாக நடித்தவருமான சிவ ஆனந்துடன் இணைந்து மணிரத்னம் அமைத்திருக்கும் சுவையான திரைக்கதைதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு அடிப்படையான காரணம்.

அடுத்த காரணம் கேஸ்டிங். கேரக்டர்களுக்கு ஆட்களை மிகப் பொருத்தமாகத் தேடிப் பிடித்துப் போட்டிருக்கிறார். சிம்புவும், விஜய் சேதுபதியும் இப்போதைக்கு தமிழ்ச் சினிமாவில் ஓப்பனர்ஸ் என்று சொல்லப்படும் லிஸ்ட்டில் இருப்பவர்கள். இவர்கள் இருப்பதினாலேயே ரசிகர்கள் கூட்டம் முதல் நாள் விழுந்தடித்து ஓடி வரும் என்று எதிர்பார்த்தார் மணிரத்னம். அது அப்படியே நடந்தேறியது.

அடுத்தது என்ன என்று எதிர்பார்க்க வைக்கும் திரைக்கதையில், தன்னுடைய மேஜிக் இயக்கத்தை வைத்து படத்தை சிறப்பு செய்திடலாம் என்று நினைத்த மணிரத்னத்தின் எண்ணம் நிச்சயமாக பலித்தேவிட்டது. படத்தின் வேகமான ஓட்டமும், எதிர்பார்ப்பும், நடிக்க வைக்கப்பட்டிருக்கும் நடிகர்களின் ஆக்சனும் படத்தை வெற்றிப் படமாக்கிவிட்டன.

முதல் பாதியில் ஜெட் வேகத்திலும் இரண்டாம் பாகத்தில் சற்றே குறைவான ஜெட் வேகத்தில் படம் பறந்தாலும், இத்திரைப்படம் இந்தாண்டுக்கான சிறந்த கமர்ஷியல் ஹிட் படத்தில் முதலிடத்தைப் பிடித்தேவிட்டது.

நிறைய முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும் அனைவருக்கும் சமமான அளவில் நடிக்க வாய்ப்பு இருக்கும் அளவுக்கு திரைக்கதையை அமைத்திருக்கிறார். யாரும் சோடை போகவில்லை. ஆனால் கடைசியில் காணாமலே போய்விட்டார்கள். ஜெயசுதா கடைசியில் என்ன ஆனார் என்றே தெரியவில்லை.

அரவிந்த்சாமி மிகப் பெரிய கொடூரனாகவும், யார், எவர் என்று பார்க்காத தன்மை உடையவராகவும் முதல் காட்சியிலேயே அறிமுகப்படுத்தி வைக்கப்படுகிறார். அடுத்தடுத்து அவர் செய்யும் செயல்களெல்லாம் நமக்குப் பயத்தை ஊட்டினாலும், ஒரு தாதாவால் பெற்றெடுக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட பிள்ளை… வேறு எப்படியிருப்பான் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

அப்பாவை கொலை செய்ய முயற்சிப்பவர், கூடவே அம்மாவும் இருக்கிறாரே என்று ஏன் யோசிக்கவில்லை என்கிற கேள்வியும் அங்கே எழுகிறது. உடன் பிறந்த தம்பிகள் இருவரும் தர்ம அடி வாங்குவதை நேரலையில் பார்க்கும் அந்தக் கொடூர மனப்பான்மையுடைவராக இவர் காட்டியிருப்பதால் இடைவேளைக்கு பின்பு வரும் காட்சிகளில் இவர் மீது ஒரு வருத்தமோ, பரிதாபமோ, அனுதாபமோ பார்வையாளருக்கு வரவேயில்லை. இதனாலேயே ஜோதிகா மரணிக்கும் தருவாயில் அது எந்தவிதத் தாக்கத்தையும் தியேட்டரில் ஏற்படுத்தவில்லை. மாறாக இதுவொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் என்றே ஜீரணிக்க வைத்துவிட்டார் மணிரத்னம்.

அரவிந்த்சாமியின் தோற்றமும், நடையும், பார்வையுமே ஒரு டானுக்குரியதாகவே அமைந்திருக்கிறது. விஜய் சேதுபதியிடம் அவர் முதலில் காட்டும் பாசமும், கடைசியில் காட்டும் வெறுப்பும், தம்பிகள் மீது கொள்ளும் சந்தேகமும் கச்சிதமாகவே இருக்கிறது. மனைவியிருக்கும் நிலையில் சின்ன வீட்டை வைத்துக் கொண்டு அங்கேயும் போய் சமையல் வேலை செய்யும் கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சம் சுவாரஸ்யமானதுதான்.  

ஜோதிகாவுக்கு மூத்த மருமகள் கேரக்டர். பொறுப்பான தலைவியாகவும் இருப்பவர் தனது கணவரின் அட்டூழியங்களைத் தட்டிக் கேட்கிறார். ஆனால் தடு்க்க முடியாமல் தவிக்கிறார்.

கணவனைப் பார்க்க அவனது கள்ளக் காதலியின் வீட்டுக்கே வந்து கணவனை எச்சரிக்கும் காட்சியில் லாஜிக் எல்லை மீறல்கள் இருந்தாலும், 'போய்த் தொலையட்டும்' என்கிற அவரது உணர்வைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தன் வீட்டில் எதுவும் செய்யாதவன், சின்ன வீட்டில் சமையல் வேலைகூட செய்வதை அறிந்து அவர் காட்டும் ரியாக்ஷனும், சக்களத்தி எந்தக் கவலையும் இல்லாமல் அவளிடம் சகஜமாக பேசுவதை ஏற்றுக் கொள்ளும் நடிப்பும் ‘ஜோ‘ என்று சொல்ல வைத்திருக்கிறது.

ஆனாலும் இந்தக் காட்சியில்  ஜோதிகாவிடம் “சாப்பிட்டுட்டுப் போங்க. உங்க வீட்டுக்காரர் சமைச்சது. நல்லாயிருக்கும்..” என்று கலாய்க்கும் காட்சியில் அதிதி ராவ் நடிப்பில் ஒரு ஸ்டெப் மேலேயே போய்விட்டார்..!

குழந்தைகளைத் தனது பிறந்த வீட்டிற்கு அனுப்பிவிட்டு கணவருடனேயே ஓடி, ஓடி கடைசியில் பரிதாபமாய் உயிரை விடுகிறார் ஜோதிகா. குளோஸப் காட்சிகளில் அற்புதமாக மிளிர்கிறார் ஜோ. இன்னும் எத்தனை ரவுண்டு வேண்ணாலும் வரலாம் ஜோ. வெல்கம்..!

அட்டகாசமான ஆரவாரமான நடிப்பைக் காட்டியிருக்கிறார் அருண் விஜய். அமைதியானவராக முகமெடுத்து இடைவேளைக்கு பின்பு தனது தந்தையின் வீட்டுக்குள் பெருங்குரலெடுத்து பந்தாவாய் வந்து தாவிக் குதித்து தன் அப்பாவின் சீட்டில் அமரும் அவரது ஸ்டைலான நடிப்பும், ஆக்சனும் பெரிதும் கவர்கிறது.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பெரிதான வாய்ப்பில்லை என்றாலும் ஜெயிலில் தன்னைச் சந்திக்கும் கணவரிடம் “நீ இருக்க வேண்டிய இடத்துல நான் இருக்கேன். நான் இருக்க வேண்டிய இடத்துல நீ இருக்க…” என்று தன் கணவரிடம் சொல்லுமிடத்தில் அனைத்து அனுதாபங்களையும் சேர்த்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

சிம்புவின் காதலியான டயனா எரப்பா முதல் காட்சியில் சிக்கென்ற சின்ன டிரெஸ்ஸில் வருபவர், சாகப் போகும்போது ஹனிமூன் டூரில் உள்ளாடைகூட அணியாமல் வெறும் சட்டையை மட்டுமே போட்டுக் கொண்டு தன் பின்புற அழகைக் காட்டியிருக்கிறார். ஆனால் பொசுக்கென்று உயிரையும் விட்டுவிட்டார். காதலையும், கல்யாணத்தையும், உறவுகளையும் மிக அலட்சியமாக நினைக்கும் இந்தக் கால இளைஞிகளுக்கு டயானாவை ஒரு உதாரணமாகக் காட்டலாம்.

சிம்புவுக்கு உடம்புதான் பெரிதாக இருக்கிறதே தவிர, உடல் உழைப்பு இல்லாமலேயே வெறும் ஆக்சனிலேயே நடிப்பைக் கொட்டிவிட்டுப் போகிறார். அவருடைய உடம்பும் ஊதிப் போய் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அதற்கான ஸ்கோப் இல்லாமல் அவரை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். இதற்காக ஒரு ஸ்பெஷல் பாராட்டு மணிக்கு..!

அண்ணனின் சின்ன வீடான அதிதி ராவ்வை கட்டிப் பிடித்தபடியே, “பிடிச்சிருந்தால் யாரை வேண்ணாலும் தூக்குவேன்…” என்று சிம்பு தனது ஒரிஜினல் குணத்தைக் காட்டுமிடத்தில் தியேட்டரில் கை தட்டல்கள் அள்ளுகிறது..!

விஜய் சேதுபதி அறிமுகமாகும் காட்சியை மிக அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். தான் எந்தச் சூழலில் அந்தக் குற்றவாளியை அடித்து உதைத்தேன் என்பதைக் கிண்டலாக பதில் சொல்லி சூட்டைக் கிளப்பும் விஜய் சேதுபதி கடைசிவரையிலும் அப்படியேதான் இருக்கிறார்.

“நண்பா.. என் உயிர் நண்பா.. உன்னைத் தேடி வந்திருக்கேன். உதவி செய்…” என்று மிக அழகான தமிழில் அரவிந்த்சாமியிடம் உதவி கேட்டு வரும் விஜய் சேதுபதி இதேபோல் பல காட்சிகளில் வித்தியாசமான டோன்களில் வசனத்தை உச்சரித்து தனது நடிப்பைக் காட்டியிருக்கிறார். குறிப்பாக தனது வீட்டுக்குள் தனது சித்தியைத் தேடியலையும் காட்சியைச் சொல்லலாம். இதேபோல் கிளைமாக்ஸில் சிம்புவுடன் பேசும்போது ஒரு கண்ணில் தண்ணீரைத் தேக்கி வைத்தபடியே தன் கதையைச் சொல்லி முடிக்கும் தருணம் மிக நெகிழ்வானது. இயக்குநராக இப்படி பல இடங்களில் மணிரத்னம் நம்மை அசரடித்திருக்கிறார்.

அவர் நல்லவரா, கெட்டவரா என்பதையே யூகிக்க முடியாமல் கொண்டு போய் கடைசியாக உண்மையை உடைத்திருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய பலம். சஸ்பென்ஸை உடைக்கும் தருணமும் மிக அழகு. அப்படியொரு சாவை கொடுத்தால்தான் படம் நிறைவடையும் என்பதே படம் பார்த்தவர்களின் கருத்தும்கூட. அதை உணர்ந்து செய்திருக்கிறார் இயக்குநர் மணி.

“இதுவரையிலும் முஸ்லீம்களை கெட்டவர்களாகவே காட்டி வைத்திருக்கும் அய்யர்…” என்கிற பெயரை சம்பாதித்திருக்கும் மணிரத்னம் அதைத் துடைக்க வேண்டி, இந்தப் படத்தில் நாட்டிற்காக சேவை செய்யும் உண்மையான போலீஸ் இன்ஸ்பெக்டர் ரசூல் என்கிற கேரக்டரில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்திருக்கிறார் போலும்..!

பிரகாஷ்ராஜின் அந்த அழகான அறிமுகக் காட்சியே அசத்தல். மென்மையாக அவர்களது வாழ்க்கைக் கதையைப் பேசும்போதே அவரது கேரக்டர் ஸ்கெட்ச் புரிகிறது. அதை அவரது மனைவி ஜெயசுதாவே உடைப்பதும்கூட இயக்குநரின் டச்சுதான்.

தன்னைக் கொலை செய்ய முயற்சித்தது தனது மகன்களில் ஒருவர்தான் என்பதை அறிந்த கொண்ட அந்த வலியை தனது மனைவியிடம் அந்த விஷயத்தைச் சொல்லும்போது முகத்தில் காட்டுகிறார் பிரகாஷ்ராஜ். தியாகராஜனிடம் இயல்பாகப் பேசும்போதும் தனது பழைய பகையையும் மறக்காமல் அவரை எச்சரிக்கும்விதமாய் பேசும் தொனி அழகு. சட்டென்ற அவரது மரணம் மட்டுமே இந்தப் படத்தில் பார்வையாளனுக்கு வருத்தத்தைக் கொடுத்த விஷயம்.

சின்னப்பதாஸாக நடித்திருக்கும் தியாகராஜன் தனது கணீர் குரலால் தன் பங்களிப்பை நிறைவாகவே செய்திருக்கிறார். 'செந்தில்வேலவா', 'முருகா', 'செந்தில் ஆண்டவா' என்றெல்லாம் முருகப் பெருமானை அழைத்தபடியே தன் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு பேசும் சுவையான கேரக்டர் ஸ்கெட்ச்சை சுமந்திருக்கிறார் தியாகராஜன்..!

படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ற வகையில் சற்றே வித்தியாசத்தைத் தரும்வகையில் பின்னணி இசையைக் கொடுத்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

பாடல்கள் கேட்கும் ரகம் இல்லையென்றாலும் பாடல்களை பார்க்கும் மூடிலும், கேட்கும் மூடிலும் ரசிகர்களும் இல்லையென்பதாலும் இசை இங்கே பெரிதாக தேடப்படவில்லை. ஆனால் பின்னணி இசை அமர்க்களம். அதிலும் அருண் விஜய் வீட்டுக்குள் தனது அண்ணனைத் தேடி வரும் காட்சியிலும் சிம்பு கிளைமாக்ஸில் துப்பாக்கியால் அருண் விஜய்யை கதம்-கதம் செய்யும் காட்சியிலும் அழகாக உதவியிருக்கிறார் ரஹ்மான்.

சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மணிக்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். முதல் காட்சியில் துவங்கி கடைசிவரையிலும் ஒளிப்பதிவின் துணையால் கண்களை அகற்ற முடியாத அளவுக்கு ஈர்க்கிறது படம்.

துபாயின் அழகு.. செர்பியாவின் விளைநிலத் தோட்டங்கள்.. சிம்பு தப்பிக்கும் காட்சிகள்.. நேபாளத்தில் அருண் விஜய்யும், சிம்புவும் சண்டையிடும் காட்சிகள்.. அரவிந்த்சாமி அண்ட் கோ-வை பள்ளியில் வைத்து ரவுண்டு கட்டும் வில்லன்கள்.. கடைசியான கிளைமாக்ஸ் காட்சி.. சிம்புவின் மரணம் நிகழும் அந்தத் தருணம் என்று முக்கியமான இடங்களிலெல்லாம் சந்தோஷ் சிவனின் கேமிரா வித்தைகளைச் செய்திருப்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் காட்சிகளை கச்சிதமாக நறுக்கி, செதுக்கிக் கொடுத்திருக்கிறார். துப்பாக்கிச் சூடு காட்சிகளிலும், மன்சூரலிகான் கோஷ்டியுடன் அரவிந்த்சாமி சண்டையிடும் காட்சிகளிலும் வெட்டுதல் திறமையை நிறையவே பயன்படுத்தியிருக்கிறார் படத் தொகுப்பாளர்.  

கலை இயக்குநருக்கும் மிகப் பெரிய பாராட்டு. பல்வேறுவிதமான லொகேஷன்களிலும் அந்த இடத்திற்கேற்றாற்போல் கண்ணை உறுத்தாத வண்ணம் கலையமைப்புகளை வைத்து படமாக்க உதவியிருக்கிறார்.

மணிரத்னத்தின் படங்களிலேயே இந்தப் படத்தில்தான் முதல் முறையாக ஒலிப்பதிவு மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. முந்தைய படங்களிலெல்லாம் நடிகர்கள் அனைவரும் உதடு பிரிக்காமலேயே பேசிவிட்டுப் போவார்கள். ஆனால் இந்தப் படத்தில்தான் அனைவரும் பூத்தாம்பட்டி தியேட்டரில்கூட கேட்கும் அளவுக்கு ஒலி அமைத்து இணைத்திருக்கிறார் மணி. இதனாலேயே இந்தப் படத்தின் கதை அனைவருக்கும் புரிந்து படம் ஹிட்டாகியிருக்கிறது என்றும் சொல்லலாம். தப்பேயில்லை.

கேங்ஸ்டர் படங்களில் இது போன்ற வேகமான காட்சிகளை வைத்து வேகமாக படத்தை ஓட விடுவதுதான் வெற்றி்கான பார்முலா. இதைத்தான் இந்தப் படத்திலும் செய்திருக்கிறார் மணிரத்னம். வெற்றியும் பெற்றிருக்கிறார்.

இதற்கு முந்தைய படமான ‘காற்று வெளியிடை’ படத்தில் அவர் செய்த தவறுபோல் இதில் செய்யாமல்… இன்றைய இளம் இயக்குநர்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் அவர் செய்திருக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளும், திரைக்கதையும்தான் இந்தப் படத்தை வெற்றியடைய வைத்திருக்கின்றன.

என்ன ஒரேயொரு வருத்தம் எனில், டைட்டிலில் ஒரிஜினல் கதைக் கருவை எழுதிய ‘NEW WORLD’ படத்தின் கதாசிரியருக்கு ஒரு நன்றியையாவது மணிரத்னம் தெரிவித்திருக்கலாமே என்பதுதான்..!

‘செக்கச் சிவந்த வானம்’ – ரத்தம் தெறிக்க தெறிக்க நடக்கும் போர்க்களம்..!

நிச்சயமாக ஒரு முறை பார்க்கக் கூடிய திரைப்படம்..!