ஆசியாசின் மீடியா நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மதியழகன் முனியாண்டி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன், பால சரவணன், இமான் அண்ணாச்சி, சூப்பர் சுப்பராயன், சோனா, யமுனா மற்றும் பலர் நடித்துள்ளனர். தயாரிப்பாளரான மதியழகன் முனியாண்டியும் இந்தப் படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார்.
இசை – தஷி, ஒளிப்பதிவு – கிருஷ்ணசாமி, வசனம் – பொன் பார்த்திபன், எழுத்து, இயக்கம் – கே.வீரக்குமார்.
படத்தின் நாயகியான வரலட்சுமி காவல்துறை அதிகாரி. அன்றைய நாளில் உயரதிகாரியின் மகள் ஒருவரை ஒரு கடத்தல் கும்பல் கடத்துகிறது. இந்தக் கடத்தலை முறியடித்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றி அவரது தந்தையான தனது உயரதிகாரியிடம் ஒப்படைக்கிறார் வரலட்சுமி.
இதனால் மகிழ்ச்சியடையும் உயரதிகாரியான ராஜா, அது ஒரு போதை மருந்து கடத்தல் மற்றும் பெண்களைக் கடத்தும் கும்பல் என்பதை அறிந்து அந்தக் கும்பலைப் பிடிக்க வரலட்சுமியின் தலைமையிலேயே ஒரு தனிப் படையை அமைக்கிறார்.
தனக்கான டீமை போலீஸ் பயிற்சிக் கல்லூரியில் படித்து முடித்து வெளியில் வர தயாராக இருக்கும் காவலர்களைக் கொண்டு தேர்வு செய்கிறார் வரலட்சுமி.
இதன் பின்பு அந்தக் கொலைகார டீமில் ஒவ்வொருவரையும் ஸ்கெட்ச் போட்டுத் தூக்க முனைகிறார். ஆனால் கடைசி நேரத்தில் அவர்களைச் சுட்டுக் கொலை செய்கிறார் வரலட்சுமி. டீமில் இருக்கும் மற்றவர்களுக்கு இது ஏன் என்று புரியவில்லை.
சென்னையில் சூப்பர் சுப்பராயனை போட்டுத் தள்ளிய கையோடு மலேசியாவுக்குப் பயணமாகிறது இந்த காவல்துறை டீம். அங்கே அந்தக் கும்பலின் தலைவனையும், அவனது தம்பியையும் பிடிக்க முயல்கிறார் வரலட்சுமி.
அந்தத் தலைவன் கடைசி நிமிடத்தில் உஷாராகி வரலட்சுமியின் டீமையே கடத்திச் செல்கிறான். அதே நேரம் வரலட்சுமியின் தேடுதல் வேட்டையில் ஏதோ ஒரு உள் நோக்கம் இருப்பதையறியும் உயரதிகாரியான ராஜா, அவரை உடனடியாக இந்தியத் தூதகரகத்தில் சரண்டராகச் சொல்கிறார்.
ஆனால், அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வரலட்சுமி தனது டீமை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற முனைகிறார். அதில் வெற்றி பெற்றாரா இல்லையா.. வரலட்சுமி ஏன் அவர்களை உயிருடன் பிடிக்காமல் சுட்டுக் கொல்கிறார். அவருக்கு இந்த வழக்கில் இருக்கும் உள் நோக்கம் என்ன என்பதுதான் படத்தின் திரைக்கதை.
ஒட்டு மொத்தப் படத்தையும் வரலட்சுமியின் தலையிலேயே கட்டிவிட்டார்கள். அவரும் தன்னால் முடிந்த அளவுக்கு தனது ஆக்சன் திறமையையும், நடிப்பு திறமையையும் காட்டியிருக்கிறார்.
போலீஸ் டிரெஸ்ஸில் மாய்ந்து, மாயந்து சண்டையிடுகிறார் வரலட்சுமி. கோபமாகப் பேசுகிறார். துணிச்சலுடன் பல காட்சிகளில் நடித்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சூப்பர் வில்லனாக பதைபதைக்க வைக்கிறார். இவருடன் ஒப்பிடுகையில் மலேசிய வில்லனும், அவரது தம்பியும் பரவாயில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
கலக்கலானா போதை மருந்து கடத்தல்காரியாக சோனா சில காட்சிகளில் நடித்து பாதியிலேயே பரிதாபமாக உயிரை விடுகிறார்.
இவரது டீமில் பால சரவணன் அவ்வப்போது ஏதாவது கேள்வி கேட்டு சிரிப்பை வரவழைக்க முயன்றிருக்கிறார். ஆனால் முடியவில்லை. மற்றவர்களும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இல்லை. ஏனெனில் கதாபாத்திர வடிவமைப்பே அப்படித்தான் இருக்கிறது.
அதோடு நடிப்பைக் கொட்டும் அளவுக்கான திரைக்கதையும் இதில் இல்லாததால் இவர்களைக் குற்றம் சொல்லிப் புண்ணியமில்லை என்றே சொல்லலாம்.
படத்தின் 2-ம் பகுதி முழுக்க, முழுக்க மலேசியாவில் படமாகியிருப்பதால், அந்தக் காட்சிகள் மட்டும் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. மலேசியாவின் எழிலை கேமிராவுக்குள் அடக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். தஷியின் இசையில் பாடல்கள் ஒலித்திருக்கின்றன. ஆனால் திரும்பத் திரும்பக் கேட்பது போல் இல்லை என்பது வருத்தமான விஷயம். ஆனால், பின்னணி இசை கொஞ்சம் விறுவிறுப்பைத் தந்திருக்கிறது என்றே சொல்லலாம்.
முதலில் இது போன்ற போலீஸ் படங்களில் அவர்களுடைய பதவி, அதிகாரம் இதையெல்லாம் தெளிவாகச் சொல்ல வேண்டும். கடைசிவரையிலும் வரலட்சுமி என்ன பதவியில் இருக்கிறார் என்பதைச் சொல்லவேயில்லை. அவர் போலீஸ் பயிற்சிக் கல்லூரியிலும் பயிற்சியளிக்கிறார். பின்பு இந்தக் கயவர்களைக் கண்டுபிடிக்கவும் செல்கிறார். இது எப்படி என்று தெரியவில்லை.
இவரை அனுப்பி வைக்கும் உயரதிகாரியான ராஜாவும் எந்தப் பதவியில் இருக்கிறார் என்பதைச் சொல்லவில்லை. இப்படி அரைகுறையாகச் செய்தால் எப்படி இயக்குநரே..?
வரலட்சுமிக்கு ஒரு பிளாஷ்பேக் கதை இருக்கிறது என்பதை சரியான இடத்தில் எதிர்பாராதவிதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இது ஒன்றுதான் மிகச் சரியாக இருக்கிறது.
அலட்சியமாகக் கொலை செய்து தூக்கியெறிந்துவிட்டுப் போவது சென்னையில் சரி.. மலேசியாவிலும் இப்படித்தான் என்று சொல்லியிருப்பது கொஞ்சம் ஓவர்தான்.
சண்டை காட்சிகள் என்பதே கற்பனை என்பதாலும், அதிலும் ஒரு பெண் ஆணைப் போல சண்டையிட்டு காப்பாற்றுவது என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத உயரம் என்பதால் அதனை உண்மைபோல் நம்ப வைக்க இயக்குநர் பெரிதும் முயற்சிக்கவில்லை. அல்லது படத்தின் பட்ஜெட் அதற்கு இடம் கொடுக்கவில்லை என்பது மட்டும் புரிகிறது.
இயக்குநரின் கதை, திரைக்கதை, இயக்கத் திறமைகளில் தரம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்திருந்தால் படத்தை இன்னமும் அதிகமாகவே ரசித்திருக்கலாம்..!