இத்திரைப்படத்தை ஜாய் மூவி புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனத்தின் சார்பில் டாக்டர் அஜித் ஜாய் தயாரித்திருக்கிறார்.
இதில் ஊர்வசி, பாலு வர்கீஸ், கலையரசன், குரு சோமசுந்தரம், சுஜித் சங்கர், அபிஜா சிவகலா, மணிகண்டன் ஆச்சாரி, பானு, மிருதுளா மாதவ், சுதீர் பரவூர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்வரூப் பிலிப் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே.வி.சுப்பிரமணியன் மற்றும் அசோக் பொன்னப்பன் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநரான சுபாஷ் லலிதா சுப்ரமணியன் இயக்கியிருக்கிறார்.
அப்பா, அம்மா, தாய், தங்கை.. என பல உறவுகளின் மீது கட்டாயமாக அன்பு செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதற்கென எழுதப்படாத சட்டங்களும் நிறைய உண்டு. ஆனால் நட்பு அப்படியல்ல. நட்புக்கு எந்த மொழியும் இல்லை. எந்த ஜாதியும் இல்லை. எந்த மதமும் இல்லை. எந்த நாட்டு எல்லையும் இல்லை. அத்தகைய விலை மதிக்க இயலாத உயர்ந்த நட்பின் மூலம் அவன் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது.
காதல்தான் உலகில் சிறந்த உணர்வு என சொல்பவர்கள் உண்டு. ஆனால் நட்பு என்பது ஆயுள் உள்ளவரை உடன் வரும். இதுதான் இப்படத்தின் ஹைலைட்டான விசயம்.
தங்களுடைய பசியைக் கூட வெளியில் காட்டிக் கொள்ளாமல் கௌரவத்திற்காக வாழ்ந்து வரும் ஒரு நடுத்தர குடும்பம்.
அந்தக் குடும்பத்தில் ஒரு மடத்தனமான… மூடத்தனமான.. நம்பிக்கை கொண்ட அம்மா கதாபாத்திரம். அந்த அம்மாவிற்கு மாலை ஆறு மணிக்கு மேல் பார்வையில் தடுமாற்றம் உள்ள மகன் ஒருவன் இருக்கிறான். அவன் உலகத்தில் உள்ள மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என அந்த தாய் விரும்புகிறாள். அதனால் அந்த மகனுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை விதிக்கிறாள். இந்த கட்டுப்பாடுகள்… அந்த மகனின் தன்னம்பிக்கையை பறித்து விடுகிறது.
இந்த அம்மாவின் கணவனோ.. சிறந்த கலைஞனாக வேண்டும் என்ற ஆசையில், அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். கணவனும் மனைவியும் வீட்டில் ஒன்றாக இருந்தாலும் மனமொத்து இல்லாததால் இந்தப் பையன், தமிழ் பேசும் பகுதிக்கு சென்று.. அங்கிருக்கும் கலையரசனிடம் நட்பு கொள்கிறார். அந்த நட்பினால் விளையும் விளைவுகள்தான் இந்தப் படம்..!
தன் கணவரான ‘குமாரசாமி’ என்ற குரு சோமசுந்தரத்திடமிருந்து பிரிந்து வாழ்கிறார் ‘கோமதி‘ என்ற ஊர்வசி. இவருக்கு ஒரேயொரு மகன் ‘ரவி’ என்ற பாலு வர்கீஸ். இவருக்கு மாலைக் கண் நோய் இருக்கிறது. இதனால், இவரது திருமணம் தடைப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
ஊர்வசி தனது குடும்பத்திற்குச் சொந்தமான கோயிலில் அனாதையாக இருந்த ஒரு விநாயகர் சிலையை தன் வீட்டிற்கு எடுத்து கொண்டு வைத்து அதற்கு தினமும் பூஜை செய்து வணங்கி வருகிறார், புதிய கோவில் ஒன்றைக் கட்டி அதில் அந்தச் சிலையை வைக்க வேண்டும் என்று ஊர்வசி விரும்புகிறார்.
தனக்குத் திருமணம் தடைபடுவதால் பெரிய அளவுக்குப் பணம் சேர்த்தால் வரன்கள் தானாக வரும் என்று நினைக்கிறார் ஊர்வசியின் மகனான ரவி. இதற்காகப் புதிதாகத் தொழில் தொடங்க நினைக்கிறார் ரவி. அதற்குப் பெரிய அளவில் பணம் தேவைப்படுகிறது.
பணம் தேடியலையும்போது அவர் வீட்டில் இருக்கும் அந்த விநாயகர் சிலை புராதனமானது என்றும், அதை விற்றால் பெரும் பணம் கிடைக்கும் என்பதும் ரவிக்குத் தெரிய வருகிறது. அதேபோல் அந்த நேரத்தில் ஒரு கும்பல் அந்த விநாயகர் சிலையை விலை பேசுகிறது.
முதலில் இதை செய்ய மறுக்கும் ரவி, ஒரு கட்டத்தில் தனது நண்பனான ‘சார்ல்ஸ்’ என்ற கலையரசனின் உதவியுடன் அம்மா ஊர்வசிக்குத் தெரியாமல் விநாயகர் சிலையைத் திருடி, விற்க முடிவு செய்கிறார்.
அது நிறைவேற்றியதா..? பணம் கிடைத்ததா… ரவியால் நினைத்தபடி தொழில் தொடங்க முடிந்ததா..? ஊர்வசியின் கோயில் கனவு என்னவானது என்பதெல்லாம்தான் இந்தப் படத்தின் மீதிக் கதை.
அப்பாவியான முகத்துடன், பார்வை குறைபாட்டுடன் அதற்கான மன வலியுடன் கூடிய நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ரவியாக நடித்திருக்கும் பாலு வர்கீஸ். பணம் சம்பாதிக்க நினைத்து சொந்த வீட்டிலேயே திருடவும் துணியும் ஒரு சாதாரண இளைஞனை அச்சு அசலாக தன் நடிப்பில் மூலமாகக் காண்பித்திருக்கிறார்.
படத்தின் தலைப்பில் வரும் ‘சார்ல்ஸ்’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கலையரசன், திரைக்கதையை பெரிதும் நகர்த்தியிருக்கிறார். இவரும், நாயகனும் சந்திக்கும் காட்சிகள் சுவாரஸ்யமானவை. அதேபோல் இவர்கள் இருவருக்குமான வசனங்களும் சிறப்பு.
நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஊர்வசி தனது வழக்கமான படபடப்பு, துடிதுடிப்புடன் கூடிய நடிப்பில் படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறார். சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் புன்னகைக்க வைக்கிறார். ஆனால், ஊர்வசி வரும் காட்சிகளிலெல்லாம் நம் பார்வையை அகலவிடவில்லை.
ஊர்வசியின் கணவரான குரு சோமசுந்தரம் தனக்கான கதாப்பாத்திரத்தைக் கச்சிதமாக செய்திருக்கிறார். ஆனால் பெரிய அளவில் இல்லை என்பது வருத்தமான விஷயம்.
விநாயகர் சிலையை வாங்க விரும்பி வரும் அபிஜா சிவகலா, அவரது உதவியாளரான மணிகண்டன் ஆச்சாரி, கலையரசனுக்கு ஜோடியாக நடித்திருக்கும் மிருதுளா மற்றும் சில சின்னச் சின்ன கேரக்டர்களும்கூட கவனம் ஈர்த்துள்ளனர்.
ஸ்வரூப் பிலிப்பின் ஒளிப்பதிவு சிறப்பு. அதிலும் இரவு நேர காட்சிகளை பார்க்கும்வகையில் படமாக்கியிருக்கிறார். இசையமைப்பாளர் கே.வி.சுப்பிரமணியனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். அளவான பின்னணி இசை படத்தினை டிஸ்டர்ப் செய்யாமல் ரசிக்க வைத்திருக்கிறது.
ஊர்வசி, குரு சோமசுந்தரம் இருவரும் இருப்பதால் தமிழிலும் ஏதோ கால் பதிக்கலாம் என்று நினைத்து மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்திருக்கிறார்கள் போலும்.
ரவி பார்வை சரியாகத் தெரியாத சூழலில் இரவில் தடுமாற்றத்துடன் சிலையைத் திருடுவது, நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிற்கும் கார், அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் சிலை, தெருவுக்குள் புதிதாக வரும் சிசிடிவி கேமரா என்று இரண்டாம் பாதியில் சிறிதளவு பதற்றத்தைக் கூட்டினாலும் மலையாள மண்ணுக்கே உரித்தான திரைக்கதையின் ஸ்லோ நமது பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது.
முதல் 45 நிமிடத்தில் கதை திடீர், திடீரென்று எங்கெங்கோ பயணப்படுகிறது. பின்பு விநாயகர் சிலை, அதை வாங்க வரும் கும்பல் என்ற திரைக்கதை வந்தவுடன் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்கிறார்கள். ஆனால் அடுத்து நடப்பவையெல்லாம் மிகச் சாதாரணமானதாக போய்விட நமக்குள் பெருத்த ஏமாற்றம்..!
கதை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாததாலும், நமது நட்சத்திரங்களின் நடிப்பும், பாத்திரப் படைப்பும்கூட உற்சாகக் குறைவாக இருப்பதால் படம் அதிகம் நம்மைக் கவரவில்லை.
சின்ன சின்ன சுவாரஸ்யங்களைப் படம் கொண்டிருந்தாலும், அதை இன்னும் அதிகப்படுத்தி இருக்கலாம்.
RATING : 2.5 / 5









