full screen background image

எறும்பு – சினிமா விமர்சனம்

எறும்பு – சினிமா விமர்சனம்

டி.ஜி.வி.எஸ்.புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்துள்ள புதிய படம்தான் இந்த ‘எறும்பு’.

இந்தப் படத்தில் சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், ஜார்ஜ் மரியான், பேபி மோனிகா, மாஸ்டர் சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், ஜெகன், பரவை சுந்தராம்பாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே.எஸ்.காளிதாஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். தயாரிப்பாளரான சுரேஷ் குணசேகரனே இந்தப் படத்தை எழுதி, இயக்கியிருக்கிறார்.

இந்தியக் குடும்பங்களுக்கு பெரிதும் பொருளாதார ரீதியாக உதவி செய்வது தங்கம்தான். அதிலும் ஒரே ஒரு கிராம் தங்கத்தை மையப்படுத்திதான் இப்படத்தின் கதை உருவாகி இருக்கிறது. ஒரு கிராம் தங்கத்தை முன் வைத்து அக்கா – தம்பி பாசம்… அப்பா – மகன் உறவு… என பல விசயங்களை பேசியிருக்கிறார் இயக்குநர்.

நாம் சிறிய வயதில் ஏதேனும் ஒரு பொருளை தொலைத்திருப்போம். அதனை எப்படி பெற்றோர்களிடத்தில் சொல்வது என அச்சம் கொண்டிருப்போம். அப்போது நாம் என்ன செய்திருப்போம்.. அப்படியொரு நிகழ்வை திரும்பவும் நினைவுபடுத்துகிறது இந்த எறும்பு திரைப்படம்.

வீட்டில் ஒரு கிராம் மோதிரம் தொலைந்துவிட்டது. அப்பா, அம்மா வெளியூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இதனை தேடி கண்டுபிடிக்க ஒரு அக்காவும், தம்பியும் முயல்கிறார்கள். அவர்கள் வருவதற்குள் இவர்கள் என்ன முயற்சி எடுத்தார்கள்.? கடைசியில் மோதிரம் கிடைத்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

கடலூர் அருகேயிருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஏழ்மை தொழிலாளி ‘அண்ணாதுரை’ என்ற சார்லி. முதல் மனைவி மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளான மகள் பச்சையம்மா’ என்ற மோனிகா, மற்றும்  மகன் ‘முத்து’ என்ற மாஸ்டர் சக்தி ரித்விக், தாய் ‘பொம்மி’ என்ற பரவை சுந்தராம்பாள் மற்றும் இரண்டாம் மனைவியான  ‘கமலம்’ என்ற சூசன் ஜார்ஜ், கடைசியாக பிறந்திருக்கும் ஒரு கைக் குழந்தை என்ற 5 உறுப்பினர்களுடன் வாழ்கிறார் சார்லி.

குழந்தைகள் இருவருக்கும் அப்பா, பாட்டி இருவரின் அரவணைப்பு கிடைத்தாலும், சித்தியின் பாசம் மட்டும் கிடைக்காமல் இருக்கின்றனர். சித்தி எப்போதும் சிடுமூஞ்சியுடனும், கண்டிப்புடனும் இருப்பது குழந்தைகளுக்குப் பிடிக்காமல, சித்தி மேல் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் சார்லி கறார் வட்டிக்காரரான சுறா’ என்ற எம்.எஸ்.பாஸ்கரிடம் வட்டிக்குக் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியால் சிரமப்படுகிறார். குறிப்பிட்ட தேதியில் வட்டி கட்டாததால் வீடு தேடி வரும் எம்.எஸ்.பாஸ்கர், சார்லி குடும்பத்தினரை ஊர்க்காரர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார்.

அடுத்த மாதம் 1-ம் தேதியன்று கடனை திருப்பி செலுத்துவதாக கூறிவிட்டு சார்லியும், அவரது மனைவியும் கரும்பு வெட்டும் கூலி  வேலைக்காக அருகில் உள்ள கிராமத்திற்கு செல்கிறார்கள்.

இந்த நேரத்தில் கடைசியாகப் பிறந்த குட்டிப் பையனின் முதல் பிறந்த நாளுக்காக அவனது தாய் மாமன் போட்டிருந்த தங்க மோதிரத்தை, தன் பேரன் ரித்விக்கிடம் எடுத்துக் கொடுத்துப் போடச் சொல்கிறார் பாட்டி.

பேரனோ இரண்டாவது நாளே அந்த மோதிரத்தைத் தொலைத்து விடுகிறான். அக்காவிடம் அவன் இதை சொல்ல, இருவரும் சித்தி வந்தால் என்ன ஆகுமோ என்றெண்ணி பயப்படுகிறார்கள்.

இதனால் பாட்டியிடம்கூட மோதிரம் தொலைந்து போன விஷயத்தை சொல்லாமல் மறைத்துவிட்டு, அக்காவும் தம்பியும் அப்பா, சித்தி வருவதற்குள் அதே மாதிரி ஒரு மோதிரத்தை வாங்கத் திட்டமிடுகிறார்கள்.

இதற்காக இருவரும் தங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் சிட்டு என்ற ஜார்ஜ் மரியனின் உதவியுடன் பல சிறு, சிறு வேலைகளை செய்து பணம் சம்பாதிக்கத் தொடங்குகிறார்கள்.

கடைசியில் என்னவாகிறது..? குழந்தைகள் இருவரும் பணத்தை சம்பாதித்தார்களா..? புதிய மோதிரத்தை வாங்கினார்களா..? அல்லது சித்தியிடம் குழந்தைகள் மாட்டிக் கொண்டார்களா..? தொலைந்த மோதிரம் கிடைத்ததா..? என்பதுதான் இந்தக் கதையின் முடிவு.

அக்கா, தம்பியாக நடித்திருக்கும் மோனிகா மற்றும் மாஸ்டர் சக்தி ரித்விக் இருவரின் நடிப்புதான் படத்தின் பலமே. குழந்தைத்தனத்தையும், குறும்புத்தனத்தையும் சேர்ப்பித்து நடித்திருக்கிறார் சக்தி ரித்விக். அதபோல் அக்காவான மோனிகா பொறுப்பான அக்காவாகவும், பிரச்சினையை தானே முடித்துக் கொள்ள நினைக்கும் குணத்துக்கான நடிப்பை மிகையில்லாமல் காட்டியிருக்கிறார்.

தம்பி மீதான பாசம், தம்பி செய்த தவறை ஏற்காமல் அவனை தண்டிப்பது, அது தப்பு என்று சொல்லி திருத்துவது.. பணத்தை சேமித்து வைத்து அவ்வப்போது காலண்டரில் தேதியை பார்த்து பயப்படுவது என்று திரைக்கதையில் மிகப் பெரிய ஆதிக்கத்தைக் காட்டியிருக்கிறார் சிறுமி மோனிகா.

பக்கத்து வீட்டுக்காரராக இருக்கும் சிட்டு’ என்ற ஜார்ஜ் மரியன் தனது வெள்ளெந்தித்தனமான பேச்சால் பல இடங்களில் சிரிக்க வைத்திருக்கிறார். செல்போனில் அவர் பேசும்விதமும், குழந்தைகளுக்கு உதவும்போதும், உண்டியல் காணாமல் போன பிரச்சினையை சுமூகமாக முடித்து வைக்கும்விதமும் ரசனையானவை. மிகச் சிறந்த நடிப்பைக் காண்பித்திருக்கிறார் ஜார்ஜ் மரியான்.

தமிழ்ச் சினிமாவின் தற்போதைய முன்னணி குணச்சித்திர நடிகர்களான எம்.எஸ்.பாஸ்கர், சார்லி  இருவருமே ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுக்க முடியாமல் தவிப்பதும், மனைவியையும் கண்டிக்க முடியாமல், குழந்தைகளையும் அதட்ட முடியாமல் பரிதவிக்கும் அப்பாவாக சார்லி வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

பார்வையாலேயே மிரட்டிம் சித்தியாக சூசன் ஜார்ஜ், பாசமான  பாட்டியாக பரவை சுந்தராம்பாள், மற்றும் படத்தில நடித்திருக்கும் பல கிராமத்து முகங்களும் சிறப்பாக நடித்துள்ளனர். அதிலும் அந்த உண்டியல் காணாமல் போன வீட்டுக்காரம்மா செய்யும் அலப்பறை நடிப்பு மிகச் சிறப்பு.

ஒளிப்பதிவாளர் காளிதாஸ் கிராமத்து சூழலை மிக அழகாகப் படம் பிடித்துள்ளார். சின்ன வீட்டிற்குள்ளேயே புழங்கும் காட்சிகளில் பல்வேறு கோணங்களில் படம் பிடித்து நமக்கு ஆர்வத்தை உண்டு செய்திருக்கிறார்.

கிராமத் தெருக்களின் அழகையும், நெருக்கடியில்லாத சூழலையும் காண்பித்திருக்கிறார். இரண்டு குழந்தைகளின் கள்ளமில்லா நடிப்பினை சற்றும் குறைவில்லாமல் கேமிராவில் சுட்டிருக்கிறார்.

படத்தில் இருக்கும் 5 பாடல்களுமே சிறப்புதான். மிக எளிய தமிழில் காதில் கேட்கும் அளவுக்கான இசையில் இசையமைப்பாளர் அருண்ராஜ் இசையமைத்திருக்கிறார். அதிலும் ‘நடந்தால் குறையாத தூரம் எங்கே’ பாடல் இனிமைதான்..!

எறும்பு என்ற தலைப்பு இந்தப் படத்திற்கு மிகவும் பொருத்தமானதுதான். எறும்பைப் போலவே இந்தக் குழந்தைகளும் சிறுக, சிறுக சம்பாதித்து சேர்த்து வைத்த பணம்தான் தக்க சமயத்தில் அந்தக் குடும்பத்தையே காப்பாற்றுகிறது.

சிறந்த கதையில் திரைக்கதையில், சிறந்த கதாபாத்திர தேர்வுடன் கிராமத்து பின்னணியில் நினைத்தால் குழந்தைகளும் குடும்பத்தைக் காப்பாற்றுவார்கள் என்ற மெஸேஜை அழுத்தமாக, உணர்ச்சிப்பூர்வமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ்.ஜி.

இந்த எறும்பு’ குடும்பத்துடன் கண்டு களிக்க வேண்டிய குழந்தைகளின் பாடம்.!

RATING : 3.5 / 5

Our Score