full screen background image

“தம்பி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்” – நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..!

“தம்பி’ படம் ரசிகர்களுக்கு நிச்சயம் புதிய அனுபவமாக இருக்கும்” – நடிகர் கார்த்தியின் எதிர்பார்ப்பு..!

வயாகம்18 ஸ்டுடியோஸ் & பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தம்பி.’

இந்தப் படத்தில் ஜோதிகா அக்காவாகவும், தம்பியாக கார்த்தியும் நடித்துள்ளது சிறப்பு மிகுந்தது. இது போக கார்த்தி சுறுசுறுப்பான இளைஞர் வேடத்தில் நடித்துள்ளார். கார்த்தி-ஜோதிகாவின் அப்பா, அம்மாவாக சத்யராஜூம், சீதாவும் நடித்துள்ளார்கள். கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

மேலும் இளவரசு, ஆன்சன் பால், பாலா, சௌகார் ஜானகி, அம்மு அபிராமி, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நடனம் – ஷோபி, பிரசன்னா சுஜித், சண்டை இயக்கம் – சில்வா, பாடல்கள் – விவேக், கார்த்திக் நேத்தா, கலை இயக்கம் – பிரேம் நவாஸ், படத் தொகுப்பு – வி.எஸ்.விநாயக், வசனம் – கே.மணிகண்டன், இசை – கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், தயாரிப்பு – சூரஜ் சாதனா, வயாகம்18 ஸ்டுடியோஸ்.

த்ரில்லர், காமெடி, ஃபேமிலி, ஆக்‌ஷன் என எல்லா ஜானர்களிலும் படங்களை இயக்கி வெற்றி பெற்ற மலையாள இயக்குநரான ஜீத்து ஜோசப், நேரடி தமிழ்ப் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படம் வரும் டிசம்பர் 20-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்தப் படத்தை SDC நிறுவனம் வெளியிடுகிறது.

இதையொட்டி நடிகர் கார்த்தி இந்தத் ‘தம்பி’ படம் பற்றியும், அதில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், தனது அண்ணி ஜோதிகா, இயக்குநர் ஜீத்து ஜோஸப் பற்றியும் பல விஷயங்களைப் பத்திரிகையாளர்களிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

actor karthi-2

நடிகர் கார்த்தி ‘தம்பி’ படம் பற்றிப் பேசுகையில், “இந்தப் படத்தின் கதையை என்னிடம் முதலில் ஒரு வரியில்தான் கூறினார்கள். அதன் பிறகு கதையை விரிவாக எழுதி சொன்னபோது மிகவும் ஆர்வமாக இருந்தது.

அக்கா, தம்பி கதை என்று கூறியதால் அக்கா பாத்திரத்திற்கு ஜோதிகா அண்ணி நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியதால், அவரிடம் ஆலோசித்திருக்கிறார்கள். அண்ணியும் கதையைக் கேட்டுவிட்டு சம்மதம் தெரிவித்துள்ளார்.

எனக்கு முன்பேயே அண்ணி இந்தக் கதையைக் கேட்டுவிட்டு இதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். என்னிடம் அதைக் கூறும்போது எனக்கும் உற்சாகமாக இருந்தது. நாங்கள் இருவரும் பணியாற்ற வேண்டுமென்பதால் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்குமா என்று யோசித்துதான் முடிவெடுத்தோம்.

மேலும், ஜீத்து ஜோசப் சாரின் இயக்கம் என்றதும் இன்னும் சிறப்பு கூடியது. ஏனென்றால், அவருடைய ‘த்ரிஷ்யம்’ பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு படமும் ஒவ்வொரு பாணியில் இருக்கும்.

actor karthi-jeethu joseph-2

அதேபோல், அவர் கதை கூறும் பாணியும், நேர்த்தியும் உறுதியாக இருக்கும். அவர் இந்தக் கதைக்குள்ளே வந்த பிறகு கதையை இன்னும் மெருகேற்றினார்.

இப்படம் குடும்பக் கதையை மையப்படுத்தியது என்பதால், மனித உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் ஜீத்து ஸார். ஆகையால், ஏதோ ஒரு விஷயம் பிடித்ததால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன்.

இக்கதையைப் பற்றி நான் கூறினால் முழு படத்தையும் வெளியிடுவது போல் ஆகிவிடும். என்னுடைய முந்தைய படங்களுக்கும், இந்தப் படத்திற்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கும்.

எனது அண்ணியை படப்பிடிப்பில் பார்க்கும்போது வீட்டில் எப்படியோ.. அப்படித்தான் தோன்றினார். எந்த வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால், அவர் நடிக்கும்போது நான் பார்த்ததில்லை. இந்தப் படத்தின்போதுதான் பார்த்தேன்.

Thambi-Movie-Stills-1

படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்பே அன்றைக்கு உடுத்த வேண்டிய உடைகள், சிகை அலங்காரம் என்று முன்பே திட்டமிட்டு தயார் செய்து வைத்துவிடுவார். என்ன வசனம் பேச வேண்டும் என்பதை முன்பே வாங்கி மனப்பாடம் செய்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்குத் தயாராகத்தான் வருவார் ஜோதிகா.

அவருடைய முனைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில், அவர் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள பெரிய காட்டிய உழைப்பு தெரிந்தது. மேலும், இப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. என்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை வேறு. ஆகையால், என்னுடைய சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறேன்.

இந்தப் படத்தில் நான் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் என்னுடைய நிஜ கேரக்டரோடு கிட்டத்தட்ட ஒன்றுபோல் இருந்ததால், இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் சுலபமாக இருந்தது.

இப்படத்தின் கதை கோவாவில் ஆரம்பிக்கும். அங்கிருக்கும் மக்களுக்கேற்ப பார்வையை மட்டும் சிறிது மாற்றினோம். அங்கிருந்து கதை மாறும்போது என்னுடைய கதாபாத்திரமும் மாறும்.

Thambi-Movie-Stills-7

இப்படத்தின் பலமே படத்தில் நடித்திருக்கும் நடிகர், நடிகையர்கள்தான். ‘சௌகார்’ ஜானகி அம்மாவும் இதில் நடித்திருக்கிறார். அவருக்கு இப்போது 88 வயதாகிறது. இதுவரையிலும் கிட்டதட்ட 400 படங்களில் நடித்துவிட்டார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தத் ‘தம்பி’ படத்தில் நடித்திருக்கிறார்.

அவருக்கும் எனக்கும் நிறைய காட்சிகள் இருக்கும். அனைத்துமே சுவாரஸ்யமான காட்சிகளாக இருக்கும். இத்தனை வயசானாலும் மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறார் ஜானகியம்மா. ஒரு சில தோல்விகளிலேயே நாம் துவண்டு விடுகிறோம். ஆனால், அவர் இத்தனை ஆண்டு அனுபவத்தில் எத்தனை தோல்விகளைச் சந்தித்திப்பார்…? இருப்பினும், துவண்டுவிடமால் கொள்ளு பேரப் பிள்ளைகள்வரை அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

இன்றும் தானே சமைத்து சாப்பிடுகிறார். அதுமட்டுமல்லாமல், படக் குழுவிற்கு இரண்டு நாட்கள் சமைத்துக் கொடுத்திருக்கிறார். வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார். பணி என்று வந்துவிட்டால் நேர்மையாக இருக்கிறார் செளகார் ஜானகியம்மா.

Thambi-Movie-Stills-4

சத்யராஜ் சார் இத்தனை படங்களில் நடித்துவிட்டோம். நமக்கு எல்லாம் தெரியும் என்றில்லாமல், இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். முதல் படம் மாதிரி இன்னும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று நினைக்கிறார். இத்தனை ஆண்டுகள் நடித்தாலும் சிறிதும் சலிப்படையாமல் ஆர்வத்துடன் ரசித்து செய்கிறார்.

ஜீத்து ஜோசப் படம் என்றால், அவர் கதையை நேர்த்தியாக நகர்த்திக் கொண்டுபோகும் விதம், கதாபாத்திரங்கள், அனைத்து நடிகர்களுக்கும் நடிப்பதற்கான சந்தர்ப்பம், இப்படி அனைவரும் என்ன எதிர்பார்த்து வருவார்களோ, அது அனைத்தும் இப்படத்தில் இருக்கிறது.

முக்கியமாக, செண்டிமெண்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கின்றது. இது மாதிரி நிறைவான படம் அரிதாகத்தான் வருகிறது. மலையாளத்தில் கலைஞர்களுக்கு நடிப்பதற்கான இடமும், சந்தர்ப்பமும் நிறைய இருக்கும். அதை எங்களுக்கும் கொடுத்தார்.

Thambi-Movie-Stills-3

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்த அனுபவம், பெரிய இயக்குநரிடம் நடிக்கிறோம் என்றில்லாமல் இயல்பாக இருந்தது. அனைவரும் இணைந்துதான் இப்படத்தை எடுக்கிறோம். அனைவரும் ஒரே குடும்பமாக செயலாற்றி இப்படத்தை முடித்திருக்கிறோம்.

மேலும், படப்பிடிப்பு தளத்திற்கு வந்ததும் என்னிடம் மட்டுமல்லாமல், உதவி இயக்குநர், நடிகர் நடிகைகள், அண்ணி என்று எல்லோருடனும் கலந்து ஆலோசிப்பார். இந்த காட்சியை இதைவிட இன்னும் சிறிது மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறினால், அதையும் ஏற்றுக் கொள்வார். அதேபோல், அன்று வர வேண்டிய நடிகர், நடிகைகள் யாரேனும் வர இயலாமல் போனால் படப்பிடிப்பை ரத்து செய்ய மாட்டார். உடனே முடிவெடுத்து வேறு காட்சிகளை படமாக்குவார்.

Thambi-Movie-Stills-5

வசனங்களுக்கு மணிகண்டனிடமும், மேலும் இரண்டு இணை இயக்குநர்களிடமும் கலந்தாலோசித்து அன்றைக்குத் தேவையான வசனங்கள் அர்த்தம் மாறாமல் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்வார்.

‘திரையரங்கிற்கு வந்து 2-1/2 மணி நேரம் பொறுமையாக அமர்ந்து படம் பார்ப்பவர்கள் மன நிறைவோடு திரும்பிச் செல்ல வேண்டும். அதுதான் எனது விருப்பம்..’ என்றார் ஜீத்து ஜோஸப். அதை அவர் செவ்வனே செய்திருக்கிறார்.

‘96’ படத்திற்குப் பிறகு கோவிந்த் வசந்தா இசையமைக்கும் படம் இது. இப்படத்திற்காக வித்தியாசமான, பலவிதமான இசையை முயற்சி செய்திருக்கிறார். ஒரு காதல் பாடல் இருக்கிறது. சின்மயி பாடியிருக்கிறார். திரில்லர் படம் என்பதால் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அதை கோவிந்த் வசந்தா சிறப்பாக கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு உணர்வையும் தன் இசையின் மூலம் மேலெடுத்துக் கொடுத்திருக்கிறார். இவரின் இசை இப்படத்திற்கு பெரிய பலம்.

வரும் டிசம்பர் 20-ம் தேதி ‘தம்பி’ படம் வெளியாகிறது. இப்படம் எனக்கு புது அனுபவமாக இருந்தது. 2019 வருட கடைசியில் பண்டிகை தருணத்தில் அனைவரும் கொண்டாடக் கூடிய படமாகவும், சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் புது அனுபவமாகவும் இருக்கும் என்று நம்புகிறேன்…” என்றார் நடிகர் கார்த்தி.

Our Score