கார் விபத்து – நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு..!

கார் விபத்து – நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் செங்கல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் செங்கல்பட்டு அருகேயிருக்கும் சூளேரிக்கேடு என்னும் பகுதியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்து தற்போது அடையாறில் போர்ட்டீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில்தான் இந்த சாலை விபத்திற்குக் காரணமாக இருந்ததாக யாஷிகா ஆனந்த் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

யாஷிகா ஆனந்த் நேற்று தனது தோழியான வள்ளிச்செட்டி பவானி மற்றும் இரண்டு ஆண் நண்பர்களுடன் மகாபலிபுரம் அருகே நடந்த ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்.

அந்தப் பார்ட்டியை முடித்துவிட்டு இரவில் சென்னைக்குத் திரும்பும்போது யாஷிகாவே காரை ஓட்டி வந்திருக்கிறார். அப்போதுதான் சாலையின் நடுவில் இருக்கும் செண்டர் மீடியாவின் மீது கார் மோதி அருகில் இருக்கும் பள்ளத்திற்குள் விழுந்துள்ளது.

சில நிமிடங்கள் கழித்து அந்தப் பக்கமாக காரில் சென்ற சிலர் இதைப் பார்த்து அவர்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அருகில் இருக்கும் பூஞ்சேரி மருத்துவமனைக்கு இவர்களைக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும்போதே யாஷிகாவின் தோழியான பவனி இறந்துவிட்டார்.

யாஷிகாவும், அவரது ஆண் நண்பர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அடையாறில் போர்ட்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் நடிகை யாஷிகாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்த விபத்துக்குக் காரணமாக இருந்ததாக யாஷிகாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் (279,337,304 A, அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர் சேதம் ஏற்படுத்தும்விதமாக காரை ஓட்டியது ஆகிய பிரிவின் கீழ்) செங்கல்பட்டு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 
Our Score