‘புரூஸ்லீ’ இன்றைய இளைஞர்களுக்கான படமாம்..!

‘புரூஸ்லீ’ இன்றைய இளைஞர்களுக்கான படமாம்..!

‘டார்லிங்’ என்கிற பேய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். முதல் படமே முதலுக்கு மோசமில்லாமல் லாபகரமான வசூல் ஆனதால் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளர் – நடிகர் என்று இரட்டை வேடங்களில் பயணிக்க தொடங்கினார்.

புதிதாக படம் எடுக்க வரும் தயாரிப்பாளர்கள், அறிமுக இயக்குநர்களுக்கு எளிதில் கால்ஷீட் கொடுக்கும் கதாநாயகனானார் பிரகாஷ். குறைந்த நஷ்டம் என்றால்கூட தப்பித்துவிடும்வகையில் இருப்பதால் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் விரும்பும் கதாநாயகனாகவும் மாறிய ஜி.வி.பிரகாஷின் கையில் இன்றைக்கு 10 படங்கள் இருக்கின்றன.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களான பாலா, வெற்றிமாறன், ராஜீவ் மேனன் ஆகியோர் இயக்கும் படங்களில் பிரகாஷ் நடிக்க விருப்பதால் நாளை வெளிவர உள்ள ‘புரூஸ்லீ’ படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் ரீலீஸ் தேதியில் குழப்பங்கள் தொடர்ந்து நீடித்து வந்ததால், ‘புரூஸ்லீ’ படம் மூன்று முறை தேதி மாற்றம் செய்யப்பட்டு இறுதியாக நாளை மார்ச் 17 அன்று தமிழகத்தில் 180 தியேட்டர்களில் வெளியாகிறது.

“ஒரு நடிகனுக்கு முதல் மூன்று நாட்கள் வசூல் தற்போது முக்கியமாக உள்ளது. அதனை அடிப்படையாக கொண்டே படத்தின் பட்ஜெட், நடிகர்களின் சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது.

தற்போது காமெடி படங்கள் ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருவதால் அது போன்ற கதைகளில்தான் நடித்து வருகிறேன். என் தோற்றத்துக்கும் பொருத்தமாகவும் அது மாதிரி கதைகளே வசதியாக இருக்கின்றது.

நான் இதுவரை நடித்து வெளியான படங்களில் இந்த ‘புரூஸ்லீ’ படம்தான் முழு நீள காமெடி படம். மேலும் இது இளைஞர்களுக்கான படமாகவும் இருக்கும்…” என்கிறார் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார்.

இவர் நடித்த படங்களில் ‘திரிஷா இல்ல நயன்தாரா’ படம் தமிழ்நாட்டில் சுமார் 10 கோடிவரை வசூல் செய்த படம். இதுவே பிரகாஷ் நடித்த படங்களில் அதிக வசூலான படமும்கூட.

இதன் பின் வந்த ஜி.வி.பிரகாஷின் படங்கள் சரியாக ஓடவில்லை. ஆகவே இந்த புரூஸ்லீ படத்தின் வெற்றிதான் பிரகாஷின் அடுத்தக் கட்ட வளர்ச்சியை தீர்மானிக்கும் படமாக இருக்கும். எனவே, தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், திரையுலகத்தினரும் இந்தப் படத்தின் முடிவை ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

Our Score