full screen background image

“எங்கப்பா என்னை பாராட்டினதுதான் எனக்கு பெரிய விஷயம்..” – நடிகர் அருண் விஜய் பேச்சு..!

“எங்கப்பா என்னை பாராட்டினதுதான் எனக்கு பெரிய விஷயம்..” – நடிகர் அருண் விஜய் பேச்சு..!

‘குற்றம்-23’ படத்தின் வெற்றி விழா இன்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் படத்தில் பங்கு கொண்ட அனைத்து கலைஞர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் கலைத்துறையில் செய்த சேவைக்காக டாக்டர் பட்டம் பெறப் போகும் நடிகர் விஜய்குமாரை அனைவரும் பாராட்டினார்கள்.

IMG (52)

முதலில் பேசிய நடிகர் அரவிந்த் ஆகாஷ், “இந்தப் படம் உண்மையான வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இதுவரையில் நான் நடித்த ‘மங்காத்தா’, ‘கோவா’, ‘சென்னை-28’ ஆகிய படங்களை ‘வெங்கட் பிரபு படம்’ என்றுதான் அனைவரும் சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்தில்தான் முதல்முதலாக நானே தனியாக தெரிகிறேன். இந்த அளவுக்கு எனக்கு நடிப்பதற்கான வாய்ப்பு கொடுத்த இயக்குநர் அறிவழகனுக்கும், ஹீரோ அருண் விஜய்க்கும், தயாரிப்பாளருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்..” என்றார்.

vijayakumar

நடிகர் விஜயகுமார் பேசும்போது, “இந்தப் படம் ரிலீஸாகுறதுக்கு மூணு நாளைக்கு முன்னாடி திடீர்ன்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு.. எடுத்த எடுப்பிலேயே ‘வாழ்த்துகள்’ என்றார். ‘எதுக்கு ஸார்?’ என்றேன். ‘அதான் தம்பி படம் ரிலீஸாகப் போகுதுல்ல. பேப்பர்ல பார்த்தேன். அதுக்குத்தான் விஷ் பண்றேன்’னு சொன்னார். அதேபோல் படம் வெற்றி பெற்ற பின்பும் படத்தைப் பார்த்துட்டு மொத்த டீமையும் நேரில் வரவழைத்து பாராட்டி அனுப்பி வைத்துள்ளார். அவ்வளவு நல்ல மனசு அவருக்கு.

அவருடைய வாழ்த்தை போலவே இந்தப் படமும் அமோக வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதற்கு மீடியாக்கள்தான் முதல் காரணம்.. உங்களுக்கு எனது நன்றி. அதோட இந்தப் படத்துலதான் என் பையன் அருண் விஜய் உண்மையாகவே நன்றாக நடித்திருக்கிறார். பல காட்சிகளில் நான் என்னையறியாமலேயே கண் கலங்கிவிட்டேன்.. இந்த அளவுக்கு அவரை நடிக்க வைத்திருக்கும் இயக்குநர் அறிவழகனுக்கும் எனது நன்றி..!” என்றார்.

indher kumar

தயாரிப்பாளர் இந்தர்குமார் பேசும்போது, “இந்தப் படத்தின் மூலமாக என்னையும் தமிழ் சினிமாவுலகத்தில் நன்கு தெரிந்த ஒரு தயாரிப்பாளராக மாற்றிவிட்டார் அருண் விஜய். அவருக்கு எனது நன்றி. விஜயகுமார் ஸார்.. என்னுடைய வெல்விஷர். இப்படியொரு நல்ல படத்தைத் தயாரிப்பதற்கு எனக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கும் எனது நன்றிகள்..” என்றார்.

படத்தை வாங்கி வெளியிட்ட அக்ராஸ் பிலிம்ஸ் வெங்கடாச்சலம் பேசுகையில், “இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்கிற நம்பிக்கையுடன்தான் படத்தை வாங்கி வெளியிட்டேன். எதிர்பார்த்தது போலவே வெற்றி பெற்றிருக்கிறது. படத்தைப் பார்த்த ஒரு குழந்தையில்லாத தம்பதிகள்.. எதற்கு மருத்துவமனைக்கு போய் செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்..? பேசாமல் அனாதை ஆசிரமத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்திருப்பதாக என்னிடம் போனில் சொன்னார்கள். இதுதான் இந்தப் படத்தின் மூலமாக எங்களுக்குக் கிடைத்த உண்மையான வெற்றி..” என்றார் பெருமையோடு..!

arivazhagan

இயக்குநர் அறிவழகன் பேசுகையில் படத்தில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் பாராட்டினார். நல்ல படங்களை ஊக்குவித்து தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் மீடியாக்களை பெரிதும் பாராட்டியவர், ஒரு சில பத்திரிகைகள் நல்ல படங்களை கவிழ்த்துவிடுவதை போல எழுதுகின்றன என்று குறைபட்டுக் கொண்டார்.

“இந்தக் கதையைக் கேட்டவுடன் கதைக்காகவே காத்திருந்து தயாரிப்பில் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாமல் கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்து படத் தயாரிப்புக்கு உறுதுணையாய் இருந்த நடிகர் அருண் விஜய்க்கு எனது நன்றிகள்…” என்றார்.

IMG (15)

இறுதியாக பேசிய நடிகர் அருண் விஜய், “இந்தப் படம் என்னுடைய கேரியரில் மிக மிக முக்கியமான படம். இந்தப் படத்தைப் பார்த்திட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி ஸார் எங்களை அழைத்து பாராட்டியது எங்களை பெரிதும் மகிழ்ச்சியாக்கியது.

இதைவிடவும் என்னோட அப்பா முதல்முறையாக மனம் திறந்து நான் நல்லா நடிச்சிருக்கேன்னு என்னை பாராட்டியதை நினைத்தால் எனக்கு ரொம்பவும் பெருமையாய் இருக்கு. இதுவரைக்கும் அப்பா என்னை இதுமாதிரி என்னிக்கும் பேசினதில்லை. இன்னிக்குத்தான் முதல் முறையா பேசியிருக்கார். இதுக்கான வாய்ப்பை எனக்குக் கொடுத்த இயக்குநர் அறிவழகனுக்கு எனது நன்றி.. இனிமேல் எனது நடிப்பு கேரியர் எப்படியிருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் எனக்கு உணர்த்தியிருக்கிறது. இதனை உணர்ந்து நான் செயல்படுவேன்..” என்று நெகிழ்ச்சியோடு பேசி விடைபெற்றார்.

இயக்குநர் அறிவழகன் அடுத்து ‘அக்ராஸ் பிலிம்ஸ்’ வெங்கடாசலம் தயாரிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்று தெரிகிறது.

Our Score