பூமராங் – சினிமா விமர்சனம்

பூமராங் – சினிமா விமர்சனம்

மசாலா பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ஆர்.கண்ணனே இந்தப் படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் அதர்வா நாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், இந்துஜா இருவரும் நடித்துள்ளனர். மேலும், உபன் பட்டேல், சுஹாசினி மணிரத்னம், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – பிரசன்னா எஸ்.குமார், இசை – ரதன், படத் தொகுப்பு – ஆர்.கே.செல்வா, கலை இயக்கம் – சிவா யாதவ், ஒப்பனை – ப்ரீத்திஷீல் சிங், மார்க் ட்ராய் டிஸோசா. தயாரிப்பு – மசாலா பிக்ஸ் நிறுவனம், எழுத்து, இயக்கம், தயாரிப்பு – ஆர்.கண்ணன்.

முகம் மாற்று அறுவை சிகிச்சை மூலமாக முகம் மாறிய ஒருவரின் வாழ்க்கைக் கதைதான் இத்திரைப்படம்.

காட்டுக்குள் நடைப் பயிற்சிக்காக சென்ற இடத்தில் இளைஞர் ஒருவர் தீ விபத்தில் சிக்கிவிட்டார். ஆபத்தான நிலைமையில் மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு வருகிறார்கள். உயிரைக் காப்பாற்றிவிட்டாலும், அவரது முகம் தீயில் பொசுங்கிவிட்டது. உருக்குலைந்த நிலையில் இருக்கும் அவரது முகம், அவரது பெற்றோர்களுக்கே கோரமாகத் தெரிகிறது.

இந்த நிலையில் முகம் மாற்று அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர்கள் அந்த இளைஞரின் பெற்றோரிடம் சொல்கிறார்கள். அதே மருத்துவமனையில் ஒரு விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய நிலையில் சேர்க்கப்பட்டிருக்கும் அதர்வா கொஞ்சம், கொஞ்சமாக தனது உடல் உறுப்புக்களை இழந்து கொண்டே வருகிறார். இறக்கும் தருவாயில் இருக்கும் அவரிடத்தில் முகத் திசுக்களைத் தானமாக பெற்று இந்த ஆபரேஷனை செய்யலாம் என்று அந்த இளைஞனின் பெற்றோரிடம் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.

அவர்களும் ஒத்துக் கொள்ள.. அதர்வாவின் அம்மாவான சுஹாசினியிடம் இதற்காகக் கையொப்பம் பெற்று அதர்வாவை கருணைக் கொலை செய்கிறார்கள். பின்பு அந்த இளைஞருக்கு முகம் மாற்றும் அறுவை சிகிச்சை செய்கிறார்கள் மருத்துவர்கள். இப்போது வேறு உடல்.. ஆனால் முகம் மட்டுமே அதர்வா என்கிற நிலையில் அந்த இளைஞர் இருக்கிறார். இனிமேல் குழப்பத்தைத் தவிர்க்கும் பொருட்டு இவரை “அதர்வா…” என்றே அழைப்போம்.

விஸ்காம் படித்து வரும் நாயகி மேகா ஆகாஷ் தான் எடுக்கப் போகும் குறும் படத்திற்காக ஹீரோ தேடி அலைந்து கொண்டிருக்கிறார். அப்போது மேகாவின் கண்களில் அதர்வா படுகிறார். உடனேயே அதர்வாவை தனது குறும் படத்தில் நடிக்க வைக்க கேட்கிறார். அதர்வாவும் கொஞ்சம் முரண்டு பிடித்து கடைசியாக அந்தக் குறும் படத்தில் நடித்துக் கொடுக்கிறார். இதையடுத்து மேகாவுக்கு அதர்வா மேல் காதலாக இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.

இந்த நேரத்தில் திடீரென்று அதர்வாவை யாரோ கொலை செய்ய முயல்கிறார்கள். முதலில் இதனை விபத்து என்று கருதிய அதர்வா பின்பு இது தன்னைக் கொலை செய்யும் முயற்சி என்பதை அறிந்து தன் முகத்தின் ஒரிஜினல் மனிதர் யார், அவரை எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார்.

முதலில் சுஹாசினியைத் தேடிச் செல்கிறார் அதர்வா. “அந்த உண்மையான அதர்வாவின் தாய் நானில்லை. அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. ஒரு நாள் ரோட்டில் அடிபட்டு மயங்கிக் கிடந்தார். நான்தான் அவரை மருத்துவமனையில் சேர்த்தேன். அவரைப் பார்க்க யாருமே வரவில்லை என்பதால் நான் அவருக்கு அம்மாவாக நடித்தேன்..” என்கிறார் சுஹாசினி.

தற்செயலாக கிடைக்கும் ஒரு தகவலின் அடிப்படையில் திருச்சி பக்கத்தில் இருக்கும் கிராமம்தான் ஒரிஜினல் அதர்வாவின் சொந்த ஊர் என்பது இந்த அதர்வாவுக்குத் தெரிய வர.. அங்கே செல்கிறார்.

அப்போது தற்செயலாக அங்கே சந்திக்கும் இந்துஜா, அதர்வாவை ஒரிஜினல் என்று நினைத்து ஓடி வந்து கட்டிப் பிடிக்கிறார். இப்போது அவரிடத்தில் உண்மையைச் சொல்லி விஷயத்தைக் கேட்க உண்மையான அதர்வாவின் கதையைச் சொல்கிறார் இந்துஜா.

உண்மையான அதர்வா ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறார். இவருடன் ஆர்.ஜே.பாலாஜியும், இந்துஜாவும் வேலை பார்க்கிறார்கள். திடீரென்று இவர்களோடு 100-க்கும் மேற்பட்டோரை வேலையைவிட்டு தூக்குகிறார்கள் நிர்வாகத்தினர். இதனால் கோபமடையும் அதர்வா சொந்த ஊர் திரும்புகிறார்.

வந்த இடத்தில் மக்கள் குடி தண்ணீருக்கு அல்லல்படுவதைப் பார்த்து பரிதாபப்படுகிறார். ஊரிலேயே இருந்து சொந்த நிலத்தில் விவசாயம் செய்யப் போவதாகச் சொல்கிறார் அதர்வா. அவரது குடும்பத்தினர் இதை எதிர்த்தாலும், தன் கொள்கையில் உறுதியாக இருக்கிறார் அதர்வா.

விவசாயத்திற்கு தண்ணீர் அவசியம் தேவை என்பதால் தன் கிராமத்திற்கு அருகில் ஓடும் கல்யாணி நதியை திசை திருப்பி அதற்காக 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்கால் வெட்டி அந்தத் தண்ணியை சுற்றுப்புறத்தில் இருக்கும் அனைத்து விவசாய நிலங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டி இதற்கு அரசின் அனுமதியைக் கேட்கிறார் அதர்வா.

ஆனால் அனுமதி தர மறுக்கிறார்கள். இதனால் “கால்வாயை நாங்களே வெட்டிக் கொள்கிறோம்…” என்கிறார் அதர்வா. இதற்கும் அனுமதி கிடைக்காமல் போக.. ஊர் மக்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துகிறார்கள். பின்பு கலவரம், அடிதடி என்றான பின்புதான் அனுமதி கிடைக்கிறது.

இதையடுத்து ஊர் மக்களின் ஒத்துழைப்போடு கால்வாயை வெட்டத் துவங்குகிறார் அதர்வா. ஆனால் சில நாட்களிலேயே திடீரென்று மண் சரிவு ஏற்பட்டு 20 பேர் அந்த இடத்திலேயே மண் சரிவில் சிக்கி உயிரிழக்கிறார்கள். இதனால் அந்தத் திட்டம் அப்போதைக்கு நிறுத்தப்படுகிறது.

ஆனால் அந்த மண் சரிவு இயற்கையானது அல்ல.. திட்டமிட்டு செய்யப்பட்ட சதி என்பதை அறிகிறார் அதர்வா. இது குறித்து மேல் விவரங்களை அவர் ஆராயத் துவங்குவதற்குள்ளாக அரசியல்வாதிகள், அதிகாரிகள் முதற்கொண்டு அனைவரும் ஒன்று சேர்ந்து அவரைக் கொலை செய்ய பார்க்கிறார்கள். இதில்தான் அவர் சிக்கிவிட்டார் என்கிற உண்மை இரண்டாவது அதர்வாவுக்குத் தெரிய வருகிறது.

இந்தக் கதையைக் கேட்டு அதிர்ச்சியாகும் தற்போதைய அதர்வா என்ன செய்கிறார் என்பதுதான் படத்தின் கிளைமாக்ஸ்..!

அதர்வாவின் நடிப்பு என்பது படத்தின் பிற்பாதியில்தான் நிறையவே காணக் கிடைக்கிறது. முற்பாதியில் மேகாவுடனான காதல் மோதலிலும், சதீஷுக்கு கவுண்ட்டர் கொடுப்பதிலுமே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது.

பிற்பாதியில் அரசியல்வாதிகளுக்கு எதிராக குரல் எழுப்புவதிலும், அதிகாரிகளிடத்தில் பேசுவதிலுமே திரைக்கதை இருப்பதால் அதிகம் நடிக்க வாய்ப்பில்லாமல் இருக்கிறது. ஆனால் இவருக்கும் சேர்த்து வைத்து நடித்திருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இவருடைய டயலாக் டெலிவரி பல இடங்களில் சிரிக்கவும் வைத்திருக்கிறது. ரசிக்கவும் வைத்திருக்கிறது. அரசியல் போராட்டக் களத்தில் பாலாஜியின் பேச்சுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படமாக்கியிருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனம்.

மேகா ஆகாஷுக்கு ஒரு ஷொட்டு. அழகாக தெரிகிறார். அழகாகவும் நடித்திருக்கிறார். ஆனால் கோ-இன்ஸிடெண்ட்டாக திரைக்கதையில் உதவியிருக்கிறார் என்பதும் உண்மைதான். இந்துஜாவுக்கும் ஒரு வெயிட்டான ரோல்தான். ஆனால் நிஜமாகவே வெயிட் போட்டிருக்கிறார் இந்துஜா. கொஞ்சம் குறைத்தால் நல்லது. இவருடைய நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காட்சிகள் அதிகம் இல்லை. இருந்தும் இவரை அழகற்றவராக ஆக்கியிருக்கும் கேமிராமேனை வன்மையாகக் கண்டிக்கிறோம். நிஜமான கிராமத்து மக்களையும் சில வேடங்களில் நடிக்க வைத்திருக்கிறார்கள். இதனாலேயே கிராமத்துக் காட்சிகள் மனதைக் கவர்கின்றன.

பிரசன்னா குமாரின் ஒளிப்பதிவு முதற்பாதியைவிடவும் இரண்டாம் பாதியில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. கால்வாய் வெட்டும் காட்சிகளை மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள். அதேபோல் இரவு நேர சண்டை காட்சிகளையும் மின்னல் வேகத் தாக்குதலாய் இருக்கும்வகையில் படமாக்கியிருக்கிறார்கள். பாராட்டுக்கள்..!

முக மாற்று அறுவை சிகிச்சை என்று சொல்லி அதற்கு ஒப்பனை என்றும் சொல்லி ஒன்றைக் காட்டுகிறார்கள். டிவி சீரியலில்கூட நன்றாக இருக்கும். இதற்கு எதற்கு மிகப் பிரபலமான ஒப்பனையாளர்கள்..?

ரதனின் இசையில் ‘முக யாழி’ பாடல் மெலடியாக ரசிக்க முடிகிறது. பாடலைவிடவும் பாடல் காட்சிகளும், லொகேஷனும் மிக அருமை. ‘தேசமே’ பாடல் உணர்ச்சியைத் தூண்டுகிறது. இதற்கு பாடலின் காட்சிகளும் ஒரு காரணமாக உள்ளன.

முதற்பாதியில் காதல், சஸ்பென்ஸாக செல்லும் கதை பிற்பாதியில்தான் விவசாயம், நதி நீர் இணைப்பு, அரசு, அதிகாரிகளின் லஞ்சம், ஊழல் என்று திசை மாறுகிறது.

நமது நாட்டில் நதி நீர் இணைப்பு மிகவும் அவசியம் என்பதை இந்தப் படத்தில் மிகவும் ஆழமாக வலியுறுத்தியிருக்கிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். அந்த வகையில் இத்திரைப்படம் பாராட்டுக்குரியதுதான்.

உள்ளூர் மக்களே விரும்பி முன் வந்து செய்யும்போது அரசும் இதில் கலந்து கொண்டு ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர,  இப்போதும் அதைத் தடுக்கக் கூடாது என்பதே அனைவரின் விருப்பம். இதைத்தான் இயக்குநர் ஆர்.கண்ணனும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்.

பாராட்டுக்கள்..!

Our Score