full screen background image

பொம்மை நாயகி – சினிமா விமர்சனம்

பொம்மை நாயகி – சினிமா விமர்சனம்

தமிழ் சினிமாவின் தற்போதைய திசை வழியில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் ஒரு புதிய அத்தியாயம். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு அல்லாமல் தரமான, அழுத்தமான படைப்புகளை தருவதிலும் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு வருகிறது.

பரியேறும் பெருமாள்’, ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’, ரைட்டர்’ ஆகிய மூன்று படங்களின் வெற்றியினைத் தொடர்ந்து தற்போது நான்காவது படமாக இந்த ‘பொம்மை நாயகி’ படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.

இந்தப் படத்தில் யோகி பாபுவோடு இணைந்து சுபத்ரா, ஜி.எம்.குமார், ஹரி, விஜய் டிவி ஜெயச்சந்திரன், லிஸி ஆண்டனி, இயக்குநர் ஸ்டான்லி உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படத்தில் டைட்டில் பெயான பொம்மை நாயகி’ கதாப்பாத்திரத்தில் சிறுமி ஸ்ரீமதி நடித்துள்ளார்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – ஷான், ஒளிப்பதிவு  – அதிசயராஜ்,  இசை – சுந்தரமூர்த்தி, படத் தொகுப்பு – செல்வா R.K., கலை இயக்கம் –  ஜெய ரகு, பாடல்கள் – கபிலன், அறிவு , லோகன், சித்தன் ஜெயமூர்த்தி, ஒலிப்பதிவு – அந்தோனி ஜே.ரூபன், சண்டை பயிற்சி இயக்கம் – ஸ்டன்னர் சாம், உடைகள் – ஏகாம்பரம், தயாரிப்பு – நீலம் புரொடக்சன்ஸ் பா.இரஞ்சித்,  யாழி பிலிம்ஸ் –  மனோஜ் லியோனல் ஜேசன், இணை தயாரிப்பு – வேலன், லெமுவேல், பத்திரிகை தொடர்பு – குணா.

மகளுக்காக நீதி கேட்டு போராடும் ஒரு ஏழை தந்தையின் கதையே இந்த ‘பொம்மை நாயகி’ படம். கடலூரில் டீக்கடையில் வேலை பார்த்து வருபவர் வேலு என்ற யோகிபாபு. இவரது தந்தை ஜி.எம்.குமார். இவரது இரண்டாவது மனைவியின் மகன் யோகிபாபு. யோகிக்கு மனைவி மற்றும் ஒரு பெண் பிள்ளையும் உண்டு. பெயர் பொம்மை நாயகி.

ஜி.எம்.குமாரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகனான அருள்தாஸ்தான் அந்த ஊர் பஞ்சாயத்து  போர்டு தலைவர். ஆனால் யோகிபாபுவின் தாய் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் அப்பாவுடன் அருள்தாஸ் பேசுவதில்லை. ஜி.எம்.குமார் யோகிபாபுவுடனேயே தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

பக்கத்தில் இருக்கும் கோவிலின் திருவிழா நடக்கும் சமயத்தில் 9 வயது சிறுமியான பொம்மை நாயகி அதே ஊரைச் சேர்ந்த இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்.

ஜி.எம்.குமாரின் ஜாதியைச் சேர்ந்த அந்த 2 கயவர்களையும் காப்பாற்ற அதே ஜாதிக்காரர்கள் சமாதான முயற்சியில் ஈடுபட்டு பணத்தைக் கொடுத்து யோகிபாபுவின் வாயை அடைக்கப் பார்க்கிறார்கள்.

காவல்துறைக்குப் போக அங்கேயும் நீதி கிடைக்காமல் கேஸை திசை திருப்புகிறார் போலீஸ் இன்ஸ்பெக்டர். இதன் பின்பு தனது மகளின் முகத்தையும் காட்டாமல், தன்னையும் மிரட்டி அடிக்கப் பார்க்கும் கூட்டத்தைப் பார்த்து கோபப்படும் யோகிபாபு, தனது நெடுநாளைய நண்பர்களான பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் சிலரின் துணையுடன் நீதிமன்றத்தை நாடுகிறார்.

அங்கே பெரும் பிரயத்தனத்திற்குப் பிறகு,. நீதிபதியின் கருணையும் கிடைத்ததினால் குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைக்கிறது. பின்பு மேல்முறையீடு செய்து ஜாமீனில் வெளியே வரும் குற்றவாளிகளால் மீண்டும் கொலை வெறியான பிரச்சினை  யோகிபாவுக்கு ஏற்படுகிறது.

கோர்ட், போலீஸ் என்று யாராலும் சரி செய்ய முடியாத இந்தப் பிரச்சினையில் இருந்து யோகிபாபு மீண்டாரா? இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட யோகிபாபு எடுத்த முடிவுதான் என்ன என்பதுதான் இந்த ‘பொம்மை நாயகி‘ படம்.

யோகி பாபு இதுவரையிலும் எத்தனையோ திரைப்படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும், அவரிடம் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படங்கள் ஒன்றிரண்டுதான் வந்துள்ளன. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள இந்த ‘பொம்மை நாயகி’யையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வேலுவாக யோகி பாபு, தன்னால் கனமான பாத்திரங்களை தாங்க முடியும் என்பதை இப்படத்திலும் நிரூபித்துள்ளார். படம் முழுவதும் எங்குமே அவரும் சிரிக்கவில்லை. நம்மையும் சிரிக்க வைக்கவில்லை. ஒரு பெண் குழந்தையின் பாசமுள்ள தந்தையை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார்.

தன்னுடைய அண்ணனே அந்தக் கயவர்களுக்கு உடந்தையாக இருக்கிறார் என்பதை அறிந்த பின்பு தோழர்களிடத்தில் வந்து வழக்கை ஒப்படைக்கும் போதும் அவர் காட்டும் முகபாவனைகளும், நடிப்பும் உருக வைக்கிறது, குழந்தை  காணாமல் போய்விட்டாள் என்ற பிரச்சினையில் ஒரு திடமான முடிவை எடுத்துவிட்டு கடைசியாக அவர் கேட்கும் கேள்விகளும் சிம்ப்ளி சூப்பர்ப்..!

யோகி பாபுவின் மனைவியாக சுபத்ரா. “மாமா”, “மாமா” என்ற பேச்சோடு, மகளது நிலைமை  பற்றி அறிந்த பின்பு கணவருடன் ஒத்துப் போயும், பயந்தும், நடுங்கியும், “அமைதியாக வாழ நமக்கு உரிமையில்லையா?” என்று கேட்கும் இடத்திலும் தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

‘பொம்மை நாயகி’யாக நடித்துள்ள சிறுமி ஸ்ரீமதி தன் அருமையான நடிப்பை கொடுத்துள்ளார். அப்பாவியாய், “நான் எதுவும் தப்பு பண்ணிட்டேனாப்பா?” என்று அவர் கேட்கும்போது மொத்த நாட்டையும் செருப்பால் அடித்ததுபோல இருக்கிறது. யோகி பாபுவுக்கும் இவருக்குமான பாசப் பிணைப்பு திரையில் ரசிக்க வைக்கிறது.

யோகிபாபுவின் அப்பாவான ஜி.எம்.குமார் யோகிபாபுவுக்காக, அண்ணன் அருள்தாஸிடம் பேச்சுவார்த்தைக்குப் போன இடத்தில் “உன்னையும் நான்தாண்டா பெத்தேன். அவன் ரத்தமும் ஒண்ணுதானடா” என்று சொல்லி செவிட்டில் அறைந்துவிட்டுப் போவது நிஜமான, யதார்த்தமான காட்சியாக அமைந்துவிட்டது.

தாழ்த்தப்பட்ட சாதியில் தனது தந்தையின் இரண்டாம் தாரத்து மகனாக பிறந்த தனது தம்பி யோகிபாபுவை எடுபுடி போல நடத்தும் அருள்தாஸ் பின்பு உண்மையறிந்து திருந்திவிடுவது எதிர்பாராதது.

ராக்ஸ்டார் ரமணியம்மாள் அவ்வப்போது சொல்லும் டைமிங்கான வசனங்கள் நாட்டில் இருக்கும் அனைத்துவித அமைப்புகளையும் பதம் பார்த்து நம்மையும் சிரிக்க வைக்கிறது.

“பொம்மை நாயகினு சாமி பேர வெச்சுட்டு ஏன் தாத்தா என்னை கோயிலுக்கு கூட்டிட்டு போக மாட்டேங்குற,..?”, “தப்பு செஞ்சவன் எல்லாம் சந்தோஷமா இருக்கான்; பாதிக்கப்பட்டவன், போற உயிரு போராடியே போகட்டும் சார்..” போன்ற வசனங்கள் படத்தின் கதையையே சொல்லிவிட்டன.

நீதிமன்ற காட்சிகள் பல படங்களில் பார்த்த சாயலில் இருந்தாலும் அதிலெல்லாம் இல்லாத யதார்த்தத்தை இதில் காட்டுகின்றன. நீதிமன்றத்தால் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரத்தான் முடியுமே தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு தர முடியாது என்ற கசப்பான உண்மையை இந்தப் படத்தின் மூலமாக உணர வைத்துள்ளார் இயக்குநர். சட்டத்தில் உள்ள ஓட்டைகள் யாருக்கெல்லாம் சாதகமாக இருக்கிறது என்பதையும் இயக்குநர் பட்டியலிட்டு சொல்லியுள்ளார்.

படத்தில் வரும் வசனங்கள் நமது நாட்டில் இருக்கும் ஜாதி, அதிகார வர்க்கம், ஆட்சியாளர்களின் ஆட்சி முறை, காவல்துறையின் ஏவல் பணிகள், நீதிமன்றத்தின் கேள்விக் கணைகள் என்று கள யதார்த்தத்தை நமக்கு உணர்த்துகின்றன.

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பாளர் என்றாலே நம்பி திரையரங்குகளுக்கு போகலாம் என்பதை இந்த ‘பொம்மை நாயகி’ படமும் உறுதி செய்துள்ளது.

அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

 RATING : 4.5 / 5

 

Our Score