full screen background image

மூத்தப் பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

மூத்தப் பின்னணி பாடகி வாணி ஜெயராம் காலமானார்

தமிழ்ச் சினிமாவின் மூத்த பின்னணி பாடகியான வாணி ஜெயராம் இன்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 78. அண்மையில் அவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

1000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்தவர் பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம். அண்மையில் குடியரசு தினவிழாவையொட்டி அவருக்கு உயரிய விருதான பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று அவர் காலமானார்.

வாணி ஜெயராம் தனது வீட்டின் படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு அவர் உயிரிழந்ததாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானது என்று போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை – ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் இசைக் குடும்பத்தில் பிறந்த வாணி ஜெயராம், ஹிந்துஸ்தானி இசை கற்றுக்கொண்டு பாலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர். பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ள இவர், பல்வேறு மொழிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

1971-ம் வருடப் புத்தாண்டு தினத்தில் வெளிவந்த ‘குட்டி’ (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசை அமைப்பில் ‘போலே ரே பப்பி ஹரா’ என்ற ‘மியான் மல்ஹார்’ ராகப் பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம்.

வாணி ஜெயராமின் குரல் அறிமுகமும், அந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமான ஜெயா பாதூரியின் (பின்னாளில் அமிதாப் பச்சனின் மனைவி ஆனார்) குடும்பப் பாங்கான தோற்றமும் இணைந்து பெரும் மாயத்தை செய்ய ரசிகர்கள் கிறங்கிப் போனார்கள். அறிமுகப் பாடலே அபார வரவேற்பைப் பெற்றது. அந்த ஒரு பாடலே வாணி ஜெயராமை முன்னணிப் பாடகியரின் வரிசையில் இடம் பெறச் செய்தது.

தமிழில் எஸ்.எம் சுப்பையா நாயுடு இசையில் ‘தாயும் சேயும்’ என்ற வெளிவராத படத்துக்காக ‘பொன் மயமான காலம் வரும்’ என்ற பாடலைப் பாடினார். அதனைத் தொடர்ந்து ‘வீட்டுக்கு வந்த மருமகள்’ படத்துக்காக சங்கர் கணேஷ் இசையில் டி.எம்.செளந்தரராஜனுடன் ஒரு பாடலைப் பாடினார். 
 
இதன் பின்னர் 1974-ல் ‘தீர்க்கசுமங்கலி’ ௭ன்ற படத்தில் இவர் பாடிய, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’ பாடல்தான் இவரை தமிழ்நாடெங்கும் கொண்டு சென்றது.
 
இதன் பின்பு தமிழில் பி.சுசிலா, எஸ்.ஜானகிக்குப் பின்பு மூன்றாவது பாடும் குயிலாக இடம் பிடித்த வாணி ஜெயராம் பாடிய தமிழ்ப் பாடல்கள் சாகாவரம் பெற்றவையாக இன்றும் போற்றப்படுகின்றன.
 
அப்பொழுது தொடங்கிய அவருடைய இசைப் பயணம் 19 மொழிகளில் பாடி 10,000 பாடல்கள்வரை பாடி மூன்று முறை தேசிய விருதுகளும், மற்ற மாநில மொழி விருதுகளைப் பெற்று பெரும் சாதனைப் படைத்த இசையரசி ஆனார்.

இவர் பாடிய பாடல்களில் பலவும் அடிக்கடி கேட்டு மகிழக் கூடிய, மன உளைச்சலையெல்லாம் போக்கக் கூடிய மருந்தாக அமைந்தன. 

1. மல்லிகை என் மன்னன் மயங்கும் – தீர்க்க சுமங்கலி

2. யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போனது – நெஞ்சமெல்லாம் நீயே

3. ஏழு ஸ்வரங்களுக்குள் – அபூர்வ ராகங்கள்

4. கேள்வியின் நாயகனே – அபூர்வ ராகங்கள்

5. மேகமே…. மேகமே – பாலைவனச்சோலை

6. பொங்கும் கடலோசை – மீனவ நண்பன்

7. மல்லிகை முல்லை பூப்பந்தல் – அன்பே ஆருயிரே

8. நாதமெனும் கோயிலிலே – மன்மதலீலை

9. என்னுள்ளில் எங்கோ – ரோசாப்பூ ரவிக்கைக்காரி

10. எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது – அவன்தான் மனிதன்

11. இது இரவா பகலா – நீல மலர்கள்

12. ஆலமரத்துக் கிளி – பாலாபிஷேகம்

13. அன்பு மேகமே, இங்கு ஓடிவா -எங்கம்மா சபதம்

14. என் உள்ளம் அழகான வெள்ளித்திரை – சினிமா பைத்தியம்

15. இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே – வைதேகி காத்திருந்தாள்

16. ஒரே நாள் உனை நான் – இளமை ஊஞ்சலாடுகிறது

17. நானே.. நானா.. – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

18. என் கல்யாண வைபோகம் உன்னோடுதான் – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

19. நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன் – இளமை ஊஞ்சலாடுகிறது

20. கவிதை கேளுங்கள் – புன்னகை மன்னன்

21. என்னுள்ளில் எங்கோ – ஜானி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட 19 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம்.
 
கே.வி.மகாதேவன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியவர்.

இன்று ரசிகர்களால் ‘வாணி அம்மா’ என்று அழைக்கப்படும் அவரது திரையிசைப் பயணம் எழுதி முடிக்க முடியாத சாதனைகளை உள்ளடக்கியது. ஏனெனில் அவர் பாடாத இந்திய மொழிகளே இல்லை எனும் அளவுக்குச் சாதனைகள் படைத்திருக்கிறார். மதங்களைக் கடந்து பக்திப் பாடல்களையும் தனி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார்.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் இடம் பெற்ற ‘ஏழு ஸ்வரங்களுக்குள்’ பாடல், ‘சங்கராபரணம்’ படத்தில் இடம் பெற்ற ‘மானஸ ஸஞ்சரரே’ பாடல், ‘ஸ்ருதிலயாலு’ தெலுங்குப் படத்தில் இடம் பெற்ற ‘ஆலோகயே ஸ்ரீ பாலகிருஷ்ணம்’ ஆகிய பாடல்களுக்காக 3 முறை அகில இந்திய சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றவர்.

கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம். எந்த மொழியில் பாடினாலும் அவரது உச்சரிப்பு துல்லியமாக இருக்கும். “எல்லா மொழிகளிலும் அவற்றினுடைய த்வனி தவறாமல் உச்சரிக்கும் வல்லமை பெற்ற வாணி ஒரு ஆயுட்கால பாடகியே” – என்று கவியரசு கண்ணதாசனால் பாராட்டப்பட்டவர்.

காற்றில் கலந்து விட்ட இசையரசி தனது குரலால் என்றென்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருப்பார்.

Our Score