full screen background image

போட் – சினிமா விமர்சனம்

போட் – சினிமா விமர்சனம்

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு நாயகனாக நடித்து பெரும் வெற்றி பெற்றஇம்சை அரசன் 23-ம் புலிகேசிமற்றும் விஜய், ்ரீ தேவி, சுதீப் நடித்தபுலிஉள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய சிம்புதேவனின் புதிய பான்இந்தியா படம்தான் இந்த போட்.

மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் சார்பில் பிரபா பிரேம்குமாரின் பிரமாண்ட தயாரிப்பில் முழுக்க முழுக்க கடலில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது இந்தபோட்திரைப்படம்.

யோகி பாபு, கௌரி ஜி கிஷன், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், குள்ளம்பள்ளி லீலா, சாரா, சாம்ஸ், மதுமிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஜிப்ரான் இசையமைக்க, ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் கையாண்டுள்ளார். படத் தொகுப்புக்கு தினேஷும் தயாரிப்பு வடிவமைப்பினை டி.சந்தானமும் பொறுப்பேற்றுள்ளனர்.

இத்திரைப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.

முற்றிலும் வித்தியாசமான இந்த போட்திரைப்படத்தின் கதை 1940-ம் ஆண்டின் பின்னணியில்  நடைபெறுகிறது.

இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் சென்னை மீது ஜப்பானிய கப்பலான எம்டனில் இருந்து குண்டு வீசியபோது உயிருக்கு பயந்து 10 பேர் ஒரு சின்ன படகில் ஏறி கடலுக்குள் சென்று தப்பிக்கிறார்கள். எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் அந்த படகு நகர முடியாமல் நின்று விடுகிறது.

அந்த பரபரப்பான சமயத்தில் படகு ஓட்டையாகி கொஞ்சம் கொஞ்சமாக மூழ்க, ஒரு பெரிய சுறாவும் படகை சுற்றி வர, படகில் உள்ளவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

முழுக்க, முழுக்க கடலில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் திரில்லர், ஆக்ஷன், பொலிட்டிக்கல் காமெடியாக தயாராகியுள்ளது.

1943-ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது ஹிட்லரின் நேச நாடான ஜப்பான், பிரிட்டனின் ஆளுமைக்குட்பட்ட நாடு என்பதால் இந்தியா மீது தாக்குதல் தொடுத்தது.

ஜப்பானிய போர் விமானங்களும், ஜப்பானிய போர்க் கப்பலான எம்டனும் சென்னை மீது படையெடுத்து வந்து குண்டுகளை வீசுகின்றன. அந்த நாளில் சென்னை கடற்கரைப் பகுதியில் பொதுமக்களுக்கான மருத்துவ முகாமும், வெள்ளையர்களின், நீதிமன்றமும் செயல்பட்டு வருகிறது.

அந்த நேரத்தில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கும் தனது தம்பியை மீட்க, சென்னை கலெக்டரிடமிருந்து கடிதம் வாங்கி வருகிறார் யோகிபாபு. உடன் அவரது அம்மாவான லீலாவும் வந்திருக்கிறார்.

அந்த நேரம் ஜப்பானிய விமானங்கள் மீண்டும் குண்டு வீச வர.. கூட்டத்தினர் சிதறி ஓடுகின்றனர். அப்படியோடும்போது யோகிபாபு தனது அம்மாவையும், தம்பியையும் அழைத்துக் கொண்டு தனது படகிற்கு வருகிறார். படகில் ஏறி கடலுக்குள் சென்றுவிட்டால் வெள்ளையர்களும் நம்மைத் தேட மாட்டார்கள் என்று நினைத்து படகை கடலுக்குள் செலுத்துகிறார்.

அவருடைய துரதிருஷ்டம்.. தப்பியோடி வந்த யோகிபாபுவின் தம்பி மீண்டும் போஸீடம் மாட்டிக் கொள்ள.. சம்பந்தமேயில்லாத வேறு சிலர் அந்தப் படகில் ஏறிக் கொள்கிறார்கள்.

கர்ப்பிணியான மதுமிதாவும் அவரது மகனும், சின்னி ஜெயந்தும், அவரது மகளான கெளரி கிஷனும், ராஜஸ்தான் மார்வாடியான சாம்ஸ், வெள்ளையர்களால் தேடப்படும் தீவிரவாதியான எம்.எஸ்.பாஸ்கர், சாரா என்று யோகிபாபுவுடன் கொஞ்சமும் சம்பந்தமேயில்லாத இவர்கள் படகில் இருக்க.. கரைக்கு வந்தால் போலீஸிடம் மாட்டிக் கொள்ள வேண்டி வருமே என்பதால் படகை கடலுக்குள் செலுத்துகிறார் யோகிபாபு.

திடீரென்று கடலுக்குள் ஒரு பிரிட்டிஷ் அதிகாரி தான் வந்த படகு விபத்துக்குள்ளாகிவிட்டதாகச் சொல்ல  இவர்களின் படகில்  ஏறிக் கொள்கிறார்.

நேரம் ஆக, ஆக.. படகு அதிக எடையைத் தாங்க முடியாமல் தள்ளாடத் துவங்குகிறது. இருப்பவர்களில் 2 பேர் படகில் இருந்து இறங்கினால்தான் படகு பிழைக்கும் என்ற நிலைமை. அதோடு படகைச் சுற்றி சுறா மீன் ஒன்று வலம் வருகிறது. அதிலிருந்தும் தப்பித்தாக வேண்டும் என்ற நிலைமை.

பயணிகள் என்ன செய்யப் போகிறார்கள்..? கடலுக்குள் குதிக்கப் போவது யார்..? சுறா மீனிடமிருந்து தப்பித்தார்களா..? இல்லையா..? இவர்கள் கரைக்குத் திரும்பி வந்தார்களா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘போட்’ படத்தின் திரைக்கதை.

முழுக்க, முழுக்க கடலிலேயே.. அதுவும் ஒரு படகிலேயே 75 சதவிகிதக் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதால் நடிகர்களின் நடிப்புக்கும், ஆக்ஷனுக்கும் அதிகம் முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் வசனங்களால் மட்டுமே காட்சிகளை நகர்த்தியிருக்கிறார்கள்.

மீனவரான யோகிபாபு, ஐயர் குடும்பத்தைச் சேர்ந்த சின்னி ஜெயந்த், மதுமிதாவின் சோகக் கதை, சாராவின் தனித்த இளைஞனின் கதை, எம்.எஸ்.பாஸ்கரின் போராளி கதை.. பிரிட்டிஷ் அதிகாரியின் அதிகாரப் பற்று என்று அனைவரின் குணாதியத்திற்கும் தீனி போடுவதைப் போல காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

சென்னை மாநகரம் யாருக்குச் சொந்தம்..? யார் இங்கே பூர்வகுடிகள்..? மீனவர்களுக்கு இல்லாத உரிமை அய்யர்களுக்கும் மற்றவர்களுக்கும் உண்டா..? பிரிட்டிஷாருக்கு சாமரம் வீசுவது யார்..? சுதந்திரப் போராட்டத்திற்குத் தடைக்கல்லாக இருக்கும் இந்தியர்கள் யார்..? யார்..? சைவம், அசைவம் எது சிறந்தது..? காந்தியா.. நேதாஜியா..? யார் உண்மையான தலைவர்..? இந்தச் சர்ச்சைகளுக்கெல்லாம் விடை கிடைப்பதுபோல பல காட்சிகளிலும் இந்த விஷயங்களே பேசப்பட்டு ஒட்டு மொத்தமாய் படத்தின் கதை என்ன என்ற கேள்விக்கு மட்டும் விடை கிடைக்காமல் போய்விட்டதுதான் உண்மை.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் பெரிய பிரமிப்பு இல்லை. கடலை  மட்டுமே பிரம்மாண்டமாக்க் காட்ட முயற்சித்துள்ளனர். சுறா மீனின் கிராபிக்ஸ் காட்சிகள்கூட நம்மை பயமுறுத்தவில்லை என்பது வருத்தமான விஷயம்.

பின்னணி இசையைக் கவனிக்கக்கூட நமக்குத் தோணாத அளவுக்குக் கடல், படகு காட்சிகள் நம்மை அலைக்கழிக்க வைக்கின்றன. ஜிப்ரானின் பாடல்கள் மட்டுமே பரவாயில்லை ரகம் என்று சொல்லலாம்.

நன்றாக இயக்கம் செய்திருந்தாலும், நம் மனதைத் தொடும் அளவுக்கான கதைக் கருவும், கதையம்சமும், திரைக்கதையும் இல்லாதது இந்தப் போட் படத்திற்கு மிகப் பெரிய மைனஸாகிவிட்டது. சுறா மீனை வைத்து செய்த சில பரபரப்புக் காட்சிகளில்கூட நமக்கு பதைபதைப்பாகும் அளவுக்கான இயக்கமும், சி.ஜி.யும் இல்லாததால் அதுவும் தோல்வியாகிவிட்டது.

சமூகத்தின் கடைநிலையில் இருப்பவர்கள்தான் எப்போதும் விட்டுக் கொடுத்துப் போவார்கள் என்பதை நிரூபிக்கும்வகையில் படகையும், பயணிகளையும் காப்பாற்ற யோகிபாபுவும், அவரது அம்மாவும் கடலில் குதிப்பது அந்த மீனவர்களுக்குப் பெருமை சேர்த்த செயலாக இருந்தாலும் காலம் காலமாக இருக்கும் அடிமைத்தனத்தை சொல்வதாகவே தெரிகிறது.

இது பற்றிய ஒரு வசனத்தைக்கூட படத்தில் வைக்காமல் அனைவரையும் காப்பாற்றியதற்கான பாராட்டும், பரிசும் யோகிபாபுவுக்குக் கிடைப்பது சமூக நோக்கில் சொல்லப்படாமல் சினிமாத்தனமாகச் சொல்லப்பட்டிருப்பது வருத்தத்திற்குரியது..!

மொத்தத்தில் சிம்புதேவனின் படம் என்ற எதிர்பார்ப்போடு சென்றால் யானைப் பசிக்குச் சோளப் பொரியை கொடுத்து நம்மை ஏமாற்றிவிட்டார்..!

போட் – மூழ்கவில்லை. ஆனால் தத்தளிக்கிறது..!

RATING : 2.5 / 5

Our Score