5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகியிருக்கும் இந்த ‘வாஸ்கோடகாமா’ படத்தை மலேசிய தொழிலதிபரான டத்தோ பி.சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் நாயகனாக நகுல் நடித்திருக்கிறார். அர்த்தனா பினு நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்தராஜ், முனிஸ்காந்த், வம்சி கிருஷ்ணா, பிரேம்குமார், ரமா, மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி, மதன் பாப், நமோ நாராயணா, ஆர்.எஸ்.சிவாஜி, லொள்ளு சபா சேஷு, பயில்வான் ரங்கநாதன், படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – என்.வி.அருண், ஒளிப்பதிவு – வாஞ்சிநாதன், இவர் ‘நான் சிரித்தால் ‘ போன்று சில படங்களில் ஒளிப்பதிவு செய்துள்ளவர். சண்டை இயக்கம் – விக்கி. கலை இயக்கம் – ஏழுமலை. படத் தொகுப்பு – தமிழ்க்குமரன், நடன இயக்கம் – சாண்டி. இந்தப் படத்திற்கு கதை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர்.ஜி.கே. என்ற ஆர்.ஜி.கிருஷ்ணன்.
குரங்கிலிருந்து வந்த மனிதன் படிப்படியாக நாகரிக வளர்ச்சி அடைந்தான். இன்னும் எதிர்காலத்தில் என்னவாக ஆவான்..? அவனது மனநிலையும், குணங்களும் இன்னும் சில நூறு ஆண்டுகளுக்குப் பின் எப்படி மாறும் என்பதை சொல்லும் படம்தான் இந்த ‘வாஸ்கோடகாமா’.
நாட்டில் நன்மைகள் குறைந்து தீமைகள் பெருகுவதை நினைத்து ‘கலிகாலம் முற்றிவிட்டது’ என்பார்கள். அநியாயம் அதிகரிக்கின்ற இந்த யுகத்தையே ‘கலியுகம்’ என்று கூறுகிறார்கள். இதில் விரோதங்களும், குரோதங்களும், துரோகங்களும் அதிகரித்து இருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதைய நிலைமை எப்படி மாறி இருக்கும் என்கிற ஒரு கற்பனைதான் இந்தப் படம்.
ரிலீஸுக்கு முன்பாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லரில் இடம் பெற்ற, “நாட்டின் மதுப் பிரியராகத் தொடர்ந்து நீடித்து நாட்டிற்கு வருவாய் ஈட்டப் பாடுபடுவேன்” என்றும், “சாதி மதம் இனம் மொழி போன்ற பாகுபாட்டைக் கொண்டு வந்து மனிதர்களைப் பிரித்து நாட்டின் அமைதியைச் சீர்குலைப்பேன் என்றும் உளமார நான் உறுதி கூறுகிறேன்..” என்ற உறுதிமொழி பலராலும் கரணிக்கப்பட்டது. இதுவே இந்தப் படத்தின் கதையைக் கூறும்.
இப்போதைய காலக்கட்டத்தில் கலியுகம் முற்றிவிட்டது. நாட்டில் நல்லவர்கள் எல்லாம் நன்மை செய்ததற்காக தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கிறார்கள். தீயவர்கள் எல்லாம் சிறைக்கு வெளியே இருந்து கொண்டு அநியாயங்கள் செய்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் நாட்டில் இருக்கும் மனிதர்களின் வாழ்க்கை முறையும், நாட்டு நடப்பும் எப்படி இருக்கும் என்பதன் பின்னணியில்தான் இந்தப் படம் உருவாகியுள்ளது.
கதாநாயகி அர்த்தனா பினு ஒரு நல்லவரை விரும்பி, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இருப்பவர். ஆனால், அவருடைய அப்பாவான ஆனந்தராஜ், தனது பெண்ணுக்கு ஒரு அக்மார்க் அயோக்கியனையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஏனென்றால் நாட்டில் நல்லவர்களுக்கு இடம் இல்லை. அனைவரும் ஜெயிலுக்குத்தான் போக வேண்டும். ஆனால் நல்லவரான நகுலை, அர்த்தனா விரும்புகிறார். தந்தை சொற்படி கேட்பதுபோல் அவரை நம்ப வைத்து இவர்களின் திருமணமும் நடந்தேறுகிறது.
ஆனால் நல்லவர் என்பது தெரிந்ததால் நகுல் சிறைக்குச் செல்கிறார். அங்கே சிறையில் அநியாயக்காரர்களுக்கும் நல்லவர்களுக்கும் நடக்கும் முரண்பாடுகளையும் தர்ம, அதர்மங்களையும் கலந்து ஏதோ ஒரு திரைக்கதையை அமைத்து காட்சிகளை வைத்து முழுப் படமாக எடுத்து ஒப்பேத்தியிருக்கிறார்கள்.
படத்தின் முதல் பாதியில் நகுல் அவரது குடும்பம், அர்த்தனா பின் அவரது குடும்பம் என்று காட்சிகளால் நகர்த்துகிறார்கள். படத்தின் இரண்டாவது பாதியில் வாஸ்கோடகாமா சிறைச்சாலையில் காட்சிகள் விரிகின்றன.
நன்மை செய்தவர்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள். சிறையில் உள்ள நல்லவர்களுக்கும் அவர்களை கெட்டவர்களாக மாற்றும் முயற்சியில் இருக்கும் சிறைத்துறை அதிகாரிகள் கொண்ட அரசாங்கத்திற்கும் நடக்கும் போராட்டத்தைக் காட்டுவதாகச் சொல்லி எதையோ எடுத்து வைத்திருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் இப்படிப்பட்ட கற்பனைகள் மிகை போல் தோன்றினாலும், அதற்குப் பிறகான காலங்களில் நிகழ்வதைப் பார்த்திருக்கிறோம். இன்று சொன்னால் நம்ப முடியாத ஆனால், அப்படியே எதிர்காலத்தில் நிகழ இருக்கும் சில அநியாயங்களும் ஓவரான கற்பனையாக இதில் காட்டப்பட்டுள்ளன.
நல்ல மனிதர்கள் எல்லாம் நல்லது செய்து அதற்காக தண்டனை பெற்றுச் சிறைக்குள் நுழையும்போது பெயர்கள் மாற்றி வேறு வித ஆட்களாக மாற்றப்படுகிறார்கள். அப்படி கப்பர், மார்கோ, ஜாக், பினு, பீட்டர் இன்றைய ஏகப்பட்ட பாத்திரங்கள் வருகின்றன.
படத்தில் ஏராளமாக நடிகர்கள் வருகிறார்கள். அனைவருக்குமே பளிச்சிடும்படியான பாத்திர வாய்ப்புகள் இல்லாததால் மேலோட்டமாக நடித்திருக்கிறார்கள்.
சாக்லேட் பாயாக அறியப்பட்ட நகுல் இதில் நல்லவர் போலவும் முரட்டுத் தோற்றத்திலும் வருகிறார். சிறைக்கு வெளியே அவருக்கு வாசுதேவன் என்பது பெயர். உள்ளே சென்றதும் ஜாக் ஆகிறார். அழகான தோற்றம் அப்பாவித்தனமான சிரிப்பு என்று லட்சணா பாத்திரத்தில் வரும் நாயகி அர்த்தனா பினுவுக்குப் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை. அதேபோல் எதிர்மறையான பாத்திரத்தில் வம்சி கிருஷ்ணா சாமியார் வேடத்தில் வந்து வில்லத்தனம் செய்கிறார்.
படத்தின் பட்ஜெட்டுக்கும் கதைக்கு ஏற்ற சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் அருணின் இசையும் அமைந்துள்ளதைக் குறை சொல்ல ஒன்றுமில்லை.
‘பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என்று பாரதி சொன்னது போல் தீயவர்கள் கைக்கு ஆட்சி போனால் என்ன நடக்கும் என்கிற கற்பனை சுவாரஸ்யமானது.
படத்தின் முதல் பாதியில் அசட்டுத்தனமான காட்சிகளால் நெளிய வைப்பவர்கள், இரண்டாம் பாதியிலும் அதைவிட கொடுமை செய்திருக்கிறார்கள். இதே கதையை சீரியஸாகவும் எடுத்திருக்கலாம். அதிரடி நகைச்சுவையாகவும் மாற்றி இருக்கலாம். ஆனால் இந்தப் படத்தின் இயக்குநர் ரெண்டுங்கெட்டானாக படத்தை எடுத்து வைத்து நம்மை இம்சை செய்துள்ளார்.
இயக்குநரின் இயக்குதல் திறமை என்னவென்று இந்த ஒரு படத்திலேயே தெரிந்துவிட்டது. இனிமேலும் இயக்குநர் வேறொரு படத்தை எடுப்பதாகச் சொல்லி யாராவது ஒரு தயாரிப்பாளரை மொட்டையடிக்காமல் இருக்க வேண்டுமாய் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கிறோம்..!
வாஸ்கோடகாமா – வராமலேயே இருந்திருக்கலாம்..!
RATING : 1.5 / 5









