full screen background image

பயாஸ்கோப் – சினிமா விமர்சனம்

பயாஸ்கோப் – சினிமா விமர்சனம்

பெரிதும் பாராட்டப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், தனது அடுத்த படைப்பாக உருவாக்கியுள்ள படம் ‘பயாஸ்கோப்’.

இந்தப் படத்தை 25 டாட்ஸ் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சந்திர சூரியன், பிரபு சுப்பிரமணி, பெரியசாமி தயாரித்துள்ளனர்.

சினிமா குறித்து எதுவும் தெரியாத கிராமத்து மக்கள் திரைப்படம் எடுக்கும் கலகலப்பான உண்மைக் கதையை திரையில் சொல்லும் ‘பயாஸ்கோப்’ திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, சங்ககிரி ராஜ்குமார், சங்ககிரி மாணிக்கம் முக்கிய பாத்திரங்களில் தோன்றுகின்றனர். மேலும், இந்த உண்மைக் கதையில் அசலான கதை மாந்தர்களே அவரவர் வேடங்களை ஏற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் ராச்குமாரின் உறவினர்களான வெள்ளையம்மாள், முத்தாயி, முத்துசாமி, குப்புசாமி, இந்திராணி, எஸ்.எம்.மாணிக்கம், இந்திராணி, எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, மோகனபிரியா, தங்கராசு, தர்மசெல்வன், நமச்சிவாயம்,  ராஜேஷ் கிருஷ்ணன், ரஞ்சித், நிலா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

இந்த ‘பயாஸ்கோப்’ திரைப்படத்திற்கு தாஜ்நூர் இசையமைக்க, முரளி கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டுக்காக புரொடியூசர் பஜார் நிறுவனத்துடன் சங்ககிரி ராஜ்குமார் கை கோர்த்துள்ளார். படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை ஆஹா ஓடிடி தளம் பெற்றுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘வெங்காயம்’ திரைப்படம் பத்திரிகையாளர்கள், திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்களால் பெரிதும் பாராட்டு பெற்றது.  

மூட நம்பிக்கைகளை எதிர்த்தும், ஜோதிடத்தையும், ஜோதிடம் சொல்பவர்களையும் கடுமையாக விமர்சித்தும் அந்த வெங்காயம் திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

அந்த சமயத்தில் தனது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தனது சொந்தக் கிராம மக்களை அந்தப் படத்தில் நடிக்க வைத்து முழு படத்தையும் எடுத்து வெளியிட்டிருந்த இயக்குநர் சங்ககிரி ராச்குமாரை பலரும் பாராட்டியிருந்தனர்.

அதில், ”இவர்கள் படம் எடுத்த கதையையே ஒரு படமாக எடுக்கலாம்” என்று பிரபல வார இதழான ஆனந்த விகடன் குறிப்பிட்டிருந்தது. இதையே தூண்டுகோலாக்க் கொண்டு அந்த வெங்காயம் படத்தைத் தான் எப்படி எடுத்து வெளியிட்டேன் என்பதையே இந்த பயாஸ்கோப் என்ற முழு நீளத் திரைப்படமாக எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார்.

அதன்படி, ‘வெங்காயம்’ என்ற கதை எழுத தூண்டுதலாக இருந்த சம்பவம் தொடங்கி, அந்தக் கதைக்கான குறும்படம் எடுப்பதற்கான பணம் கேட்டு தனது தந்தையிடம் நச்சரித்து.. அவர் தர மாட்டேன் என்று சொன்னவுடன் பனை மரத்தின் மீதேறி நின்று கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்து பணத்தைப் பெற்றது.

பிறகு தானே அந்தக் கதையை படமாக எடுக்க முயற்சித்தது.. நடிப்பதற்கு ஆட்கள் கிடைக்காமல், தனது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களைக் நடிக்க வைத்தது…

இந்த ஒரு படத்திற்காக தனது வீட்டில் இருந்த ஆடு, மாடு என அனைத்துயும் விற்று இறுதியில் ஒட்டு மொத்த குடும்பத்தின் வாழ்வாதாரமாக இருந்த ஒரேயொரு நிலத்தையும் விற்று படத்தை வெளியிட்டதுவரையிலும் அந்த ‘வெங்காயம்’ என்ற படத்தைத் தயாரிக்க தான் பட்ட வேதனையையும், வலியையும் கொஞ்சம் இயல்பான காமெடியையும் கலந்து இந்தப் ‘பயாஸ்கோப்’ படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார்.         

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ராச்குமார் 10 ஆண்டுகளுக்கு முன்பான தோற்றத்திற்கு மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் போல தெரிகிறது. பணம் கொடுக்க முடியாது என்று சொன்ன அப்பாவை முறைத்துக் கொள்வதும், பனை மரத்தில் ஏறி போராட்டம் நடத்துவதுமாய் அலப்பறையைக் கூட்டியிருக்கிறார்.

சென்னைக்கு வந்த பிறகான காட்சிகளில் மட்டுமே தனது தனித்துவமான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். படத்தை விற்பனை செய்ய அவர் படும் பாடும், டிவி ரைட்ஸை கொடுத்துவிட்டு அல்லல்படும்போதும் நம்மையும் சேர்த்து பதட்டமாக்கியுள்ளார்.

கொஞ்சம், கொஞ்சமாக பார்வையாளர்கள் படத்துக்குள் இழுத்துச் செல்லும்விதமாய் உடன் நடித்த கிராமத்து மக்களை அவர்கள் போக்கிலேயே நடிக்க வைத்திருப்பது பாராட்டுக்குரியது.

முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பாட்டிமார்கள் வெள்ளையம்மாள், முத்தாயி, தாத்தாக்கள் முத்துசாமி, குப்புசாமி, அப்பாவாக நடித்திருக்கும் எஸ்.எம்.மாணிக்கம், அம்மாவாக நடித்திருக்கும் இந்திராணி, தம்பிகளாக நடித்திருக்கும் எஸ்.எம்.செந்தில்குமார், சிவாரத்தினம், பெரியசாமி, தங்கையாக நடித்திருக்கும் மோகனபிரியா, ஜோதிடராக நடித்திருக்கும் தங்கராசு, திரைப்பட தயாரிப்பாளராக நடித்திருக்கும் தர்மசெல்வன், குவாரி முதலாளியாக நடித்திருக்கும் நமச்சிவாயம், நண்பராக நடித்திருக்கும் ராஜேஷ் கிருஷ்ணன், இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கும் ரஞ்சித், முக்கிய பெண் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நிலா என படத்தில் நடித்திருக்கும் அனைவரும்  புதுமுகங்களாக இருந்தாலும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்கள்.

கிரேன், கேமிரா, டிராலி உள்ளிட்டவைகளுக்கு அவர்கள் போக்கிலேயே ஒரு பெயரை வைத்துக் கொண்டு அந்தப் பெயரிலேயே கடைசிவரையிலும் அழைத்து படப்பிடிப்பை நடத்தி முடிக்கும் அந்த லாவகமெல்லாம் சிறந்த நகைச்சுவை. ரயில்வே டிராக் அருகே ஷூட்டிங் நடத்தி மாட்டிக் கொள்ளும்போது ஹார்டு டிஸ்க்கை தூக்கிக் கொண்டு பாட்டி தப்பித்து ஓடி நடத்தும் டிராமா உச்சப்பட்ச நகைச்சுவை.

இந்த நகைச்சுவையுணர்வுக்கு பக்க பலமாகத் தூண்டிவிடும் வகையில் பின்னணி இசையை அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். பாடல்கள் இனிமையான இசையால், எளிமையான வார்த்தைகளால் காதில் விழுகும் வண்ணம் அமைந்துள்ளது.

சின்ன பட்ஜெட் படத்துக்கே உரித்தான ஒளிப்பதிவை இந்தப் படத்தில் பார்க்கலாம். படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் முகச் சாயம் பூசாமல் அப்படியே நடிக்க வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள். அந்தக் கிராமத்து முகங்கள் நிஜமானவையாக இருப்பதால் அவர்களின் இயல்பான பேச்சும், சொல்லுமே நடிப்பாகத் தெரிகிறது.

‘வெங்காயம்’ படத்தின் பாணியிலேயே கிராமத்து எளிய மனிதர்களை படத்தின் கதை மாந்தர்களாக்கி, திரைக்கதை மற்றும் காட்சிகளுக்கு எந்தவிதமான சினிமா சாயமும் பூசாமல் ஒரு எதார்த்தமான கிராமத்து மனிதர்களின் வாழ்வியலை  இந்த ’பயாஸ்கோப்’ படத்தின் மூலமாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார்.

பத்து வருடங்களுக்கு முன்பு தான் இயக்கிய வெங்காயம்’ படத்தின் சில காட்சிகளையும், அப்படத்தின் மூலம் தான் கடந்து வந்த சில கசப்பான மற்றும் கலகலப்பான சம்பவங்களை மீண்டும் இந்தப் படத்தில் இடையில் சேர்த்து கச்சிதமான திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் சங்ககிரி ராச்குமார்.

முதல் காட்சியில் ரயில்வே தண்டவாளத்தில் சாக்க் கிடக்கும் நிலையில் கிடக்கும் ராச்குமாரின் வாழ்க்கை ஏன் இப்படியானது என்பதை விவரிக்கும் வகையில் திரைக்கதையை சுவாரஸ்யமாக எழுதி, இயக்கியிருப்பதால் இத்திரைப்படம் தமிழ்த் திரைப்படவுலகில் மாற்று சினிமா வகையில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக இடம் பிடிக்கிறது.

இயக்குநர் ராச்குமாருக்கும், அவருடைய படக் குழுவினருக்கும் நமது மனமார்ந்த பாராட்டுக்கள்..!

RATING : 4 / 5

Our Score