full screen background image

’கலன்’ – திரைப்பட விமர்சனம்

’கலன்’ – திரைப்பட விமர்சனம்

ராமலட்சுமி புரொடக்ஷன் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கலன்’. 

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் தீபா, அப்புக்குட்டி, சம்பத்ராம், சேரன்ராஜ், குருமூர்த்தி, மணிமாறன், ராஜேஷ், யாசர், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஜெர்சன், படத் தொகுப்பு – விக்னேஷ் வர்ணம் விநாயகம், ஒளிப்பதிவு – ஜெயக்குமார் மற்றும் ஜே.கே., பாடலாசிரியர் – குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன், கலை இயக்கம் – திலகராஜன், அம்பேத், நடனம் – வெரைட்டி பாலா, சவுண்ட் எஞ்சினியர் – சந்தோஷ்.

இப்படத்தை ‘கிடுகு’ படத்தின் இயக்குநரான வீரமுருகன் இயக்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டம்தான் படத்தின் கதைக் களம். அந்த ஊரைச் சேர்ந்த காளி என்ற தீபா சங்கர், கணவனை இழந்த நிலையிலும் மிகவும் கஷ்டப்பட்டு தனது ஒரே மகனான வேங்கையனை படிக்க வைத்து ஆளாக்குகிறார். தீபாவுக்கு அவரது தம்பி அப்புக்குட்டி துணையாக நிற்கிறார்.

வேங்கையனின் நண்பனின் தங்கைக்கு கஞ்சா விற்கும் கூட்டத்தால் பிரச்சனை வருகிறது. அவர்களிடம் இருந்து நண்பனின் தங்கையை காப்பாற்றும் வேங்கையன், அவர்களது போதைப் பொருள் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க முடிவு செய்கிறான்.  வேங்கையன் உயிருடன் இருந்தால் தங்களது கஞ்சா வியாபாரத்திற்கு சிக்கலாகிவிடும் என்பதால், அவரது நண்பன் மூலமாகவே அவரை கஞ்சா கூட்டம் கொலை செய்துவிடுகிறது.

அநியாயத்தை எதிர்த்து நின்றதால் கொலை செய்யப்பட்ட தனது மகன் வேங்கையனின் மரணத்திற்கு பழி தீர்க்கவும், கஞ்சா போதைப் பொருளால் இளைஞர்களை சீரழித்து, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்யும்  கூட்டத்தை வேறோடு அழிக்கவும் வேங்கையனின் தாய் வெட்டுடையார் காளியும், அவரது தம்பி அப்புக்குட்டியும் களத்தில் இறங்க, அதன் பிறகு நடப்பதுதான் இந்தக் ‘கலன்’ படத்தின் கதை.

வேங்கையன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யாசர், அந்த வயதுக்கேற்ற நடிப்பைக் காண்பித்திருக்கிறார். நண்பனுக்காக உயிரையும் கொடுக்கும் கதாப்பாத்திரம். அதுபோலவே உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்.

‘வெட்டுடையார் காளி’ என்ற கதாபாத்திரத்தில் பாசமிகு தாயாக நடித்திருக்கும் தீபா வழக்கம்போல மீட்டருக்கு மேலேயே நடித்துள்ளார். தனது மகனின் மரணத்திற்குப் பிறகு ஆண்களுக்குச் சமமாக சவால் விடும் வகையில் ‘பத்ரகாளி’யாக மாறி மிரட்டுகிறார்.

தீபாவின் பாசம் மிக்க தம்பியாக, வேங்கையனின் பாசமிக்க தாய் மாமாவாக நடித்திருக்கும் அப்புக்குட்டி, தனது எதார்த்தமான நடிப்பைக் காட்டியிருக்கிறார். இவ்வளவு பாசமானவர் எதிர்வினையை இப்படித்தான் காட்டுவார் என்று எதிர்பார்த்ததுதான். இருந்தும் கிளைமாக்ஸில்  தன் முடிவை தெரிந்து கொண்டு தன்னுடைய கூட்டாளியைத் தப்பிக்கச் சொல்லும்போது நடிப்பில் நம்மைக் கவனிக்க வைத்திருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சம்பத் ராமின் நடிப்பு வில்லனுக்குரிய மீட்டரில் ஒரு மில்லி மீட்டரைக்கூட தாண்டவில்லை. கஞ்சா வியாபாரியாக.. போதையில் மிதக்கும் கண்கள், கையில் சுருட்டு என்று மிரட்டலான கதாபாத்திரத்தில், தனது திமிரான நடிப்பின் மூலம் வில்லியாக நிமிர்ந்து நிற்கிறார் காயத்ரி.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சேரன் ராஜ் படத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து படத்தையே நகர்த்தியிருக்கிறார். வேங்கையனின் நண்பனாக நடித்திருக்கும் நடிகர் என மற்ற வேடங்களில் நடித்தவர்களும் இயக்குநரின் இயக்கத் திறமைக்கேற்றுவாறு நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஜெர்சன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகங்கள். “வெட்டுடையார் காளி..” பாடலும், அதை படமாக்கியவிதமும் சூப்பர்ப். குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் ஆகியோரது பாடல் வரிகள், கதாபாத்திரங்களின் உணர்வுகளை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் ஜெயக்குமார் மற்றும் ஜேகே கிராமத்து மக்களின் வாழ்வியலை இயல்பாகவும், கிராமத்து சூழலை எளிமையாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

இரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருந்தாலும் அதை உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்திய விதம், திருவிழா காட்சிகள் ஆகியவை படத்தின் ஒளிப்பதிவை பாராட்ட வைத்திருக்கிறது. விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் ஆகியோரது படத் தொகுப்பு படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி சென்றிருக்கிறது.

கலை இயக்குநர் திலகராஜன் அம்பேத், நடன இயக்குநர் வெரைட்டி பாலா ஆகியோரது பணி சிறப்புதான்.

எழுதி, இயக்கியிருக்கும் வீரமுருகன், தற்போது சமூகத்தில் நடக்கும் முக்கிய பிரச்சனையான போதைப் பொருள், கஞ்சா விற்பனையை கருவாக கொண்டு விழுப்புணர்வு படமாக கொடுக்க நினைத்தவர் சற்றுக் குழம்பிப்போய் தான் சார்ந்திருக்கும் கட்சியின் ஊதுகுழல்போல படத்தை உருவாக்கியிருக்கிறார்.

போதைப் பொருள் கலாச்சாரம் தமிழகத்தில் அதிகரித்து வரும் அவல நிலை மற்றும் அதனால் பாதிக்கப்படும் பெண்களின் அலறல்களை அழுத்தமாகப் பதிவு செய்தவர், சந்தடிசாக்கில் வன்முறையைத் தூண்டும்விதமாகவும், சாதிப் பற்றுடன் வாழ்பவர்களை உயர்வாகச் சொல்லியும், சாதிதான் முக்கியம் என்பதையும் சேர்த்து சொல்லிக் குழப்பியடித்திருக்கிறார்.

பல இடங்களில் சாதி ரீதியான குறியீடுகளை வைத்திருக்கும் இயக்குநர் அரசியல் ரீதியாக திராவிட ஆட்சிதான் எல்லாக் குற்றங்களுக்கும் காரணம் என்பதுபோல பொய்யுரையை புழுகியிருக்கிறார்.

வேங்கையன் கொலை நடக்குமிடத்தில் திமுக கொடிக் கம்பம் இருப்பது.. அந்தோணி மருத்துவமனை அநியாயமாக நோயாளிகளை சாகடிக்கிறது.. ஞானசம்பந்தம் என்ற இன்ஸ்பெக்டர் சேரன்ராஜ் நல்லவராக இருப்பது.. இந்த நல்லவர்தான் கடைசியில் போலி என்கவுண்ட்டரில் அப்புக்குட்டியை கொலை செய்கிறாராம்.. என்னவொரு லாஜிக் எல்லை மீறல்..! இவர் எப்படி நல்லவராக இருக்க முடியும்..?

போதைப் பொருள் கலாச்சாரத்தைவிடவும் மிகவும் கொடூரமானது சக மனிதர்களின் உயிரைப் பறிப்பது. சட்டத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்வது.. தீபாவின் பழி வாங்குதலால் எத்தனை உயிர்கள் பறி போயின என்பதை அவர் சார்ந்த சாதியின் வெற்றியாகக் கருதுவதெல்லாம் மிகப் பெரிய கொடூரத்தனம்.

அதிலும் சம்பத் ராம் ஒரு பெண்ணை பாலியல் வேட்கை செய்வதை காயத்ரி வேடிக்கை பார்ப்பதும், இன்னொரு பெண்ணை ஆடையில்லாமல் அடைத்து வைத்திருப்பதை பார்த்து ரசிப்பதுமாய் காட்சிகளை வைத்திருப்பதைப் பார்க்கும்போது உங்களுக்கு அந்தக் கஞ்சா விக்குறது எவ்வளவோ மேல் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்காய் வந்தமர்ந்த கதைதான் இத்திரைப்படத்தின் கதி..!

RATING : 2.5 / 5

Our Score