‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி – உண்மையில் நடந்தது என்ன..?

‘பிகில்’ படத்தின் மீதான வழக்கு தள்ளுபடி – உண்மையில் நடந்தது என்ன..?

ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் தயாரிப்பில்… இயக்குநர் அட்லியின் இயக்கத்தில்.. நடிகர் விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்திற்கெதிராக சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் துணை இயக்குநர் கே.பி.செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

‘பிகில்’ படத்தின் கதை தன்னுடைய கதை என்றும், அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் ‘கல்கி’ என்கிற பெயரில் ஏற்கெனவே தான் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இதனால் ‘பிகில்’ படத்தின் கதையின் காப்புரிமை வேண்டியும், தனக்கு கதைக்கான நஷ்டஈடு கொடுக்காமல் அந்தப் படத்தை வெளியிடக் கூடாது என்று கோரியும் தான் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தார்.

bigil-movie-poster-1

கடந்த ஐந்து மாதங்களாக இந்த வழக்கு விசாரணை சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த நேரத்தில் துணை இயக்குநர் செல்வா தொடர்ந்த அந்த வழக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதாக ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் தரப்பினர் இன்றைக்கு ஒரு செய்தியை பத்திரிகைகளுக்கு அனுப்பியிருந்தார்கள்.

அந்தச் செய்தியில் இந்த வழக்கினை தாக்கல் செய்திருந்த துணை இயக்குநர் கே.பி.செல்வா தரப்பினர் வழக்கை வாபஸ் பெற ஒரு மனுவைத் தாக்கல் செய்ததாகவும், அதன் பொருட்டு நீதிபதி இந்த வழக்கை டிஸ்மிஸ் செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பு வழக்கறிஞர்களின் வாதாடலினால் இந்த வழக்கு நிச்சயம் தோல்வியடையும் என்று நினைத்துதான், வழக்கு தொடுத்திருந்த துணை இயக்குநர் செல்வாவின் தரப்பினர் வழக்கை வாபஸ் வாங்க மனு அளித்ததாகக் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து உண்மை நிலையறிய ‘பிகில்’ படத்திற்கெதிராக வழக்கு தொடர்ந்த துணை இயக்குநர் கே.பி.செல்வாவைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

அப்போது அவர் சொன்ன விஷயம் ஏ.ஜி.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.

bigil-movie-poster-2

இது குறித்து துணை இயக்குநர் செல்வா நம்மிடம் பேசுகையில், “நான் ‘பிகில்’ படத்திற்கெதிராக சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் தொடுத்த கதையின் காப்புரிமை தொடர்பான வழக்கு கடந்த ஐந்து மாதங்களாக நடந்து வருகிறது.

ஒவ்வொரு வாய்தாவிலும் இரு தரப்பிலுமே நிறைய வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ‘பிகில்’ படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், ஒரேயொரு விஷயத்தை மட்டுமே திரும்பத் திரும்ப முன் வைத்துக் கொண்டேயிருந்தார்கள்.

“தயாரிப்பாளர் தரப்பினர் மனுதாரர் செல்வாவை சந்திக்கவே இல்லை. ‘பிகில்’ படத்தின் கதை வேறு.. மனுதாரா் செல்வாவின் கதை வேறு” என்றெல்லாம் அவர்கள் நீதிமன்றத்தில் சொல்லவில்லை.

அதற்கு மாறாக “இது போன்ற காப்புரிமை கோரும் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் சிட்டி சிவில் கோர்ட்டுகளுக்கு இல்லை. உயர்நீதிமன்றங்களுக்கு மட்டுமே உண்டு. அதனால் இந்த வழக்கை இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கக் கூடாது. தள்ளுபடி செய்ய வேண்டும்…” என்றே வாதிட்டு வந்தார்கள்.

கடந்த ஐந்த மாதங்களாக நடந்த ஒவ்வொரு வாய்தாவிலும் இதுதான் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் நிறைய நேரமும் வீணாகிக் கொண்டேயிருந்தது. இது பற்றி நானும் யோசித்தேன்.

அவங்களே ‘உயர்நீதிமன்றத்தில்தான் வழக்குத் தொடுக்க முடியும் என்று சொல்கிறார்களே.. அப்போ அங்கேயே போய் வழக்கு போடலாமே..?’ என்றெண்ணி நாங்கள்தான் முன் வந்து ‘இந்த வழக்கை இந்த சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் இருந்து வாபஸ் வாங்கிக் கொள்கிறோம்’ என்று சொன்னோம்.

எங்களுடைய இந்த வாபஸ் கோரும் மனுவை நீதிபதியும் ஏற்றுக் கொண்டு, நாங்கள் தாக்கல் செய்திருந்த நஷ்டஈடு கோரும் மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

இது போன்ற வழக்குகளில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீக்கம் செய்வதை ‘தள்ளுபடி’ என்றும், ‘டிஸ்மிஸ்’ என்றும்தான் நீதிமன்ற அலுவல் மொழியில் குறிப்பிடுவார்கள்.

இதனை முன் வைத்துதான் தயாரிப்பாளர் தரப்பு, ‘என் மனுவை நீதிபதி விசாரித்து என் மனுவில் உண்மையில்லை என்று சொல்லி வழக்கினை டிஸ்மிஸ் செய்துவிட்டதான’ அர்த்தத்தில் பத்திரிகையாளர்களுக்கு அறிக்கை அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், உண்மையில் இதுதான் நடந்தது.

அவர்கள் இந்த வழக்கில் உண்மையாக ஜெயித்தார்களா இல்லையா என்பது அவர்களது மனச்சாட்சிக்கே தெரியும். நான் கொஞ்ச நாட்களாக இதைப் பற்றி வெளியில் எதையும் பேச வேண்டாம் என்று நினைத்திருந்தேன். அப்படிப் பேசினால் படத்தின் கதையை வெளிப்படையாகச் சொல்ல வேண்டி வருமே என்று நினைத்தேன்.  

ஆனால், இப்போது என்னை பேச வைக்கும் சூழலை தயாரிப்பாளர்கள் தரப்பினர் உருவாக்கி வருகிறார்கள். என்னை வைத்து ‘பிகில்’ படத்துக்கு இப்படியொரு சீப்பான பப்ளிசிட்டியை தேடிக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

இதற்கெல்லாம் நான் அசரப் போவதில்லை. இன்னும் ஒரு வாரத்தில் எனக்கு நியாயம் வேண்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறேன்.. அங்கே எனக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்கும்…” என்றார் உறுதியான குரலில்.

Our Score