full screen background image

நடிகை பாவனா கடத்தல் விவகாரம் – மலையாள நடிகர் சங்கத்திலும் புகைச்சலை கிளப்பியிருக்கிறது..!

நடிகை பாவனா கடத்தல் விவகாரம் – மலையாள நடிகர் சங்கத்திலும் புகைச்சலை கிளப்பியிருக்கிறது..!

கடந்த பிப்ரவரி மாதம் 19-ம் தேதியன்று மலையாள நடிகை பாவனா கொச்சி அருகே நள்ளிரவில் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு தற்போது வேறு பக்கம் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு இப்போது சிறையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 6 நாட்களுக்கு முன்பாக சிறையில் இருக்கும் பல்சர் சுனில் தன்னிடம் ஒன்றரை கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக நடிகர் திலீப் கொச்சி போலீஸில் புகார் தெரிவித்தார்.

bhavana-1

மேலும் தொலைபேசி மூலம் திலீப்பின் நேர்முக உதவியாளரையும் மிரட்டியதாகச் சொல்லி அதற்கு ஆதாரமாக தொலைபேசி உரையாடலின் டேப்பையும் போலீஸாரிடம் சமர்ப்பித்திருக்கிறார்.

இந்த புகார்களை அவர் அமெரிக்காவில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக செல்வதற்கு முன்பாக ஏப்ரல் மாதமே சமர்ப்பித்திருக்கிறார் திலீப். ஆனால் அந்த புகார் பற்றிய செய்தியும், பல்சர் சுனில் எழுதிய கடிதத்தின் நகலும் 6 நாட்களுக்கு முன்பாகத்தான் திடீரென்று மீடியாக்களில் வெளியாகியது.

இதையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்த திலீப், பாவனா கடத்தப்பட்ட வழக்கில் தனக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லையென்றும், தேவையென்றால் உண்மையறியும் சோதனைக்கு உட்பட எனக்கு சம்மதம் என்றுகூட தெரிவித்தார்.

பல்சர் சுனில் எழுதிய அந்தக் கடிதத்தில் இந்தச் சம்பவத்தை செய்ய வைத்ததே திலீப்தான் என்றும், திலீப்பின் பெயரை நீதிமன்றத்தில் சொல்லாமல் இருப்பதற்காகவும், போலீஸில் மேலும் பல தகவல்களை சொல்லாமல் இருப்பதற்காகவும் இந்தப் பணத்தைக் கேட்பதாகவும் சுனில் எழுதியிருந்தார்.

இந்தக் கடிதத்தில் சிறைச்சாலையின் அதிகாரப்பூர்வ சீல் வைக்கப்பட்டு, சிறை அதிகாரியின் கையெழுத்தும் இருந்தது என்பதால்தான் இந்த விஷயம் மிகவும் பரபரப்பானது.

suni_letter

ஆனால் கடிதத்தை முழுமையாக படித்துப் பார்த்த போலீஸார், நிச்சயமாக சுனிலால் இந்தக் கடிதத்தை தனித்து எழுதியிருக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். அதோடு சுனில் ஏற்கெனவே போலீஸிலும், நீதிமன்றத்திலும் கொடுத்த எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தில் இருக்கும் கையெழுத்திற்கும் இதற்கும் பெரிய அளவு வித்தியாசம் இருப்பதாகவும் சொல்ல… திலீப் கொஞ்சம் மூச்சுவிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

விஷயம் இதோடு நிற்கவில்லை. பிரபல தேசிய விருது பெற்ற நடிகரான சலீம்குமார் இந்த விவகாரம் குறித்து தன்னுடைய வலைத்தளத்தில் எழுதியபோது திலீப்பும், பாவனாவும் உண்மையறியும் சோதனைக்கு உட்பட வேண்டும் என்றும், இது ஒன்றே அவர்கள் இருவர் மீதிருக்கும் பரஸ்பர பிரச்சனைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினை கொடுக்கும் என்று எழுதியிருந்தார்.

LAL-1

இதற்கடுத்து மீடியாக்களிடம் பேசிய நடிகர் பாவனாவின் காட்பாதரான நடிகர் லால், “திலீப் இந்த விஷயத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு பொறுப்பினை ஏற்றுத்தான் ஆக வேண்டும். பாவனாவிற்கு இத்தனை நாட்களாக அதிகமாக படங்களே கிடைக்காமல் போனதற்கு யார் காரணம் என்பதையும் திலீப்பே வெளிப்படையாக சொல்ல வேண்டும்..” என்று சொல்லிவிட.. மலையாளத் திரையுலகத்திலும் இந்த விஷயம் பற்றிக் கொண்டது.

மேலும் நேற்றைக்கு முன்தினம் மதியம் 3 மணி முதல் அடுத்த நாள் விடியற்காலை 2 மணிவரையிலும் நடிகர் திலீப்பிடமும், மலையாள இயக்குநரான நாதிர்ஷாவிடமும் பல்சர் சுனிலின் கடிதம் மற்றும் தொலைபேசி மிரட்டல் சம்பந்தமாக கொச்சி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்தப் பரபரப்பான நேரத்தில் மலையாள சினிமா நடிகர் சங்கமான அம்மா அமைப்பின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் நேற்று காலை கொச்சியில் நடைபெற்றது.

amma-general-body-5

அதற்கு முதல்நாள் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் “பாவனா விவகாரம் குறித்து எதுவுமே பேசவில்லை..” என்று பத்திரிகையாளர்களிடத்தில் குறிப்பிட்டார் ‘அம்மா’ அமைப்பின் தலைவரான நடிகர் இன்னசென்ட். “நாளை கூடும் பொதுக்குழுவில் யாராவது ஒரு உறுப்பினர் இந்தச் சம்பவம் பற்றிப் பேச விரும்பினால் அவர்களுக்கு தாராளமாக வாய்ப்பு வழங்கப்படும்…” என்றும் தெரிவித்திருந்தார் இன்னசென்ட்.

இந்தப் பரபரப்பான சூழலில் நேற்று காலை கூடிய பொதுக்குழுவுக்கு வந்த ‘அம்மா’ அமைப்பின் செயற்குழு உறுப்பினரான நடிகை ரம்யா நம்பீஸன், “நிச்சயமாக பாவனா சம்பந்தப்பட்ட விஷயம் இங்கே விவாதிக்கப்படும்…” என்று வெளியில் பத்திரிகையாளர்களிடத்தில் சொல்லிவிட்டுத்தான் உள்ளே போனார்.

ஆனால் பொதுக்குழு முடிந்து பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தபோது அப்படி எதுவுமே நடக்கவில்லை என்று அமைப்பின் நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

சுமார் ஒரு மணி நேரமாக நடைபெற்ற இந்த காரசாரமான பத்திரிகையாளர் சந்திப்பில், பத்திரிகையாளர்களின் பல கேள்விகளுக்கு பதில் சொல்லி நிஜமாகவே ஓய்ந்து போனார்கள் நடிகர்கள்.

‘அம்மா’ அமைப்பின் தலைவரான நடிகர் இன்னசென்ட் பேசுகையில், “இந்த வழக்கு பற்றி இன்றைய பொதுக் குழுவில் நாங்கள் எதுவும் பேசவில்லை. கலந்தாலோசிக்கவில்லை. அது பற்றி தேவையும் எங்களுக்கில்லை. நாங்கள் இப்போதும் ஒரே குடும்பமாகத்தான் இருக்கிறோம். எங்களுக்குள் பிளவு இல்லை.

பாவனா விவகாரத்தில் வழக்கு விசாரணை சரியான திசையில்தான் போய்க் கொண்டிருக்கிறது. குற்றவாளிகள் இப்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார்கள். விரைவில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு சட்டத்தின்படி தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

நான் முதலமைச்சரிடமும், டி.ஜி.பி.யிடமும் பேசினேன். அவர்கள் இருவரும் வழக்கு பற்றி எங்களுக்கு எடுத்துரைத்தார்கள். ஆகவே இதில் நாங்கள் புதிதாக பேச எதுவும் இல்லை. அதிலும் இந்த நேரத்தில் நாங்கள் ஏதாவது பேசினால் அது வழக்கினை பெரிதும் பாதிக்கும் என்று போலீஸார் எங்களுக்கு அறிவுறுத்தியிருக்கின்றனர். ஆகவே அது பற்றி நாங்கள் மிகவும் தெளிவாகவே இருக்கிறோம்.. இந்தச் சம்பவத்தில் சம்பந்தமுடைய இருவருமே எங்களது சங்கத்து பிள்ளைகள்தான். அவர்களை இந்தச் சங்கம் ஒருபோதும் கைவிட்டுவிடாது..” என்று சொன்னார்.

இடையிடையே எழுந்த கேள்விகளுக்கு சங்கத்தின் துணைத் தலைவரான நடிகர் கே.பி.கணேஷ்குமாரும், இன்னொரு நடிகரான முகேஷும் எழுந்து பத்திரிகையாளர்களிடத்தில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். “எங்களுக்குள் நீங்கள்தான் பிளவினை ஏற்படுத்த முயல்கிறீர்கள்…” என்று நடிகர் கணேஷ்குமார் மீடியாக்களை குற்றம் சாட்டினார்.

Manju-Warrier-2

இந்தக் கடித விவகாரம் வெளி வருவதற்கு முன்பு நடிகை மஞ்சு வாரியர் ஒரு பேட்டியில், “இனிமேல் கொச்சியில் நடிகைகள் தங்க வேண்டாம். அது அவர்களுக்கு பாதுகாப்பில்லை. நடிகைகளை பாதுகாக்க தனி அமைப்பினை உருவாக்க வேண்டும்..” என்றும் சொல்லியிருந்தார்.

இதற்கிடையில் சென்ற மாதம் மலையாள சினிமாவில் இருக்கும் பெண்களுக்கென்று  Women Collective in Cinema என்கிற பெயரில் தனி சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்தச் சங்கத்தில் பாவனா, மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கால், ரம்யா நம்பீசன், பீனா பால், அஞ்சலி மேனன், கீது மோகன்தாஸ் என்று மலையாள திரையுலக பெண் புள்ளிகள் பலரும் இணைந்து கொண்டனர்.

womenscollective-1

இந்தச் சங்கத்தின் மூலமாகவும் இனிமேல் பெண்களுக்கெதிரான கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கப் போவதாகவும், மலையாள சினிமாவில் பெண்களுக்கென்று இழைக்கப்படும் ஆண், பெண் இன பேத வேறுபாடுகளை களைய இந்தச் சங்கம் பாடுபடும் என்றும் சங்கத்தின் நிர்வாகிகள் தெரிவிக்க… மலையாள மீடியாக்களில் இந்த விவகாரம் திலீப் – மஞ்சு வாரியர் இடையில் நடக்கும் மெளனப் போராக மாற்றி பேசப்பட்டது.

நடிகர் திலீப் ‘அம்மா’ அமைப்பில் சக்தி படைத்த பொருளாளர் பதவியில் இருக்கிறார். இதனால் ‘அம்மா’ அமைப்பு முற்றிலுமாக திலீப்பின் பின்னால் நிற்கிறது என்கிறார்கள். இதனாலேயே எந்த நடிகையுமே இந்த விவகாரம் குறித்து அமைப்பின் நிர்வாகிகளிடத்தில் கேள்வி கேட்கக்கூட பயப்படுகிறார்கள் என்கிறார்கள் மலையாள நிருபர்கள்.

‘அம்மா’ அமைப்பை பகைத்துக் கொண்டு படங்களில் நடிப்பதென்பது முடியாத காரியம் என்பது நடிகைகளுக்கு நன்கு தெரியும். தங்களுக்கு சங்கத்தின் பாதுகாப்பு அவசியம் என்பதால், இது பற்றி கேள்வியெழுப்பகூட பிற நடிகைகள் தயக்கம் காட்டுவதாக மலையாள மீடியாக்கள் குற்றம் சுமத்துகின்றன.

இதே நேரம் இந்தாண்டு நடந்த பொதுக்குழு கூட்டத்துக்கு திலீப்பின் மனைவியான நடிகை காவ்யா மாதவன் வரவில்லை. காவ்யா இந்த ‘அம்மா’ சங்கத்தில் சேர்ந்ததில் இருந்து ஒரு பொதுக்குழுவைக்கூட மிஸ் செய்ததில்லையாம். அவர் பொதுக்குழுவிற்கு ஆப்செண்ட் ஆவது இதுதான் முதல் முறை என்கிறார்கள்.

அதேபோல் இந்தப் பொதுக்குழுவுக்கு பாவனா மற்றும் அவரது நெருங்கிய தோழிகளான மஞ்சு வாரியர், பூர்ணிமா இந்திரஜித், சம்யுக்த வர்மா மூவருமே ஆப்செண்ட்டானதையும் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள்.

இந்த காரசார பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது சங்கத்தின் துணைத் தலைவர்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் மோகன்லால் எதுவுமே பேசாமல் பேப்பரில் படம் வரைந்து கொண்டும், அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்தார். இதேபோல் இன்னொரு சூப்பர் ஸ்டாரும் அம்மா அமைப்பின் கவுரவ பொதுச் செயலாளருமான நடிகர் மம்முட்டி, பத்திரிகையாளர் சந்திப்பை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தவர், பின்பு கண்ணை மூடி உறக்கத்தில் ஆழ்ந்தார்.

மிக முக்கியமான சென்சிட்டிவ் பிரச்சினையான இதில், இந்த இரண்டு சூப்பர் ஸ்டார்களுமே வாயைத் திறக்காமலேயே இருந்தது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

இந்த வழக்கு இன்னும் என்னென்ன திருப்பங்களையும், திலீப், மஞ்சு வாரியர், காவ்யா மாதவன், பாவனா என்று இந்த நான்கு பேரின் வாழ்க்கையில் ஏற்படுத்தப் போகும் பிரச்சினைகளையும் மலையாள சினிமாவுலகம் பரபரப்புக்காக ஏங்கி காத்துக் கொண்டிருக்கிறது..!

Our Score