அஸ்வின் மற்றும் ஸ்வாதியின் வெற்றி கூட்டணியின் அடுத்த படம் ‘திரி’. இவர்கள் இருவரும் இதற்கு முன்பு ‘இதற்குதானே ஆசைப்பட்டாய்’ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்து வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே.
‘திரி’யில் அஸ்வின் மற்றும் ஸ்வாதியுடன் சேர்ந்து ஜெயப்ரகாஷ், A.L.அழகப்பன், டேனியல், சென்றாயன் மற்றும் அனுபமா குமார் போன்ற பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர்.
புதுமுக இயக்குநரான அசோக் அமிர்தராஜ் இயக்கத்தில் இப்படத்தை Seashore Gold Productions என்கிற பட நிறுவனத்துக்காக, பாலமுருகன் மற்றும் பாலகோபி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
‘திரி’யின் தொழில் நுட்ப அணியும் பலம் வாய்ந்தவை. ‘சதுரங்க வேட்டை’ புகழ் K.G.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜீஸ் அசோக் இசையமைத்துள்ளார். ராஜா சேதுபதி படத் தொகுப்பு செய்துள்ளார்.
கதாநாயகன் அஸ்வின் படம் பற்றிப் பேசுகையில், ”திரி திரைப்படம் ஒரு அரசியல் சார்ந்த திரில்லர் படம். ஆனாலும் இதில் குடும்ப பந்தங்களை பற்றி அழகாக பேசப்பட்டுள்ளது. ஆக்சன் – காமெடி – காதல் மற்றும் சென்டிமெண்ட் ஆகியவற்றை சரியான அளவில் கலந்து தந்துள்ளார் இயக்குநர். இப்படத்தில் தந்தை – மகன் உறவு பற்றி மிக யதார்த்தமாகவும் அழகாகவும் காண்பித்துள்ளார் இயக்குநர்.
ஜெயப்ரகாஷ் சார் எனது அப்பாவாக நடித்துள்ளார். A.L.அழகப்பன் சார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘திரி’ சில சமுதாய அவலங்களை பற்றி பேசும் ஜனரஞ்சகமான குடும்ப படம். திரைக்கதைக்காக இயக்குநர் அசோக் அமிர்தராஜ் மிகவும் மெனக்கெட்டிருக்கிறார்.
காதல் மற்றும் காமெடி கட்சிகளும் மிக அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. எனது நடிப்பு வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படமாகும். இந்த வாய்ப்பினை எனக்கு தந்த எங்களது தயாரிப்பாளருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ‘திரி’ வெளியீட்டிற்காக நாங்கள் அனைவரும் மிக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறோம்.
வரும் ஜூலை 7-ம் தேதி வெளியாகவுள்ள ‘திரி’ படத்திற்கு மக்கள் குடும்பம், குடும்பமாக திரையரங்கிற்கு வந்து ஆதரவளிப்பார்கள்…” என நம்பிக்கையோடு கூறுகிறார் நாயகன் அஸ்வின்.