“இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் செயல்பாடுகள் ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க’த்தின் செயல்பாடுகளுக்கு எதிராக இருப்பதால் அவரை ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க’த்தில் இருந்து நீக்க வேண்டும்…” என்று அந்தச் சங்கத்தைச் சேர்ந்த பல தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்னும் பெயரில் புதிய சங்கத்தை துவக்கியதற்கு ‘தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க’த்தைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து நேற்று காலை அண்ணா சாலையில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் தாணு, முரளி, ராதாகிருஷ்ணன், கே.ராஜன், கலைப்புலி சேகரன், கமீலா நாசர், அழகன் தமிழ்மணி, சோழா பொன்னுரங்கம், திருமலை, நளினி சுப்பையா, கே.ஜே.ஆர்., முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் புதிய சங்கத்தினரை கடுமையாகக் கண்டித்து பேசினார்கள். இதன் பின்னர் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி பத்திரப் பதிவுத் துறையின் தலைவருக்கு அனைத்துத் தயாரிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து மனு ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த மனுவில் கூறியிருப்பது :
“தமிழ்த் திரைப்படத் துறையின் மூத்த இயக்குநர் பாரதிராஜாவும் மேலும் சிலரும் சேர்ந்து தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்குவதாக அறிவித்து பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.
தற்போது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை தமிழக அரசு நியமித்துள்ள தனி அதிகாரி பொறுப்பேற்று நடத்தி வருகிறார். இந்த நிலையில் அரசு நியமித்துள்ள தனி அதிகாரி சிறப்பாக செயல்படவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி பாரதிராஜா உள்பட சில தயாரிப்பாளர்கள் புதிய சங்கத்தை உருவாக்கியிருப்பது சங்க விதிகளின்படி சங்கத்துக்கு விரோதமான நடவடிக்கை.
எனவே, பாரதிராஜாவையும் அவருக்குத் துணையாக உள்ளவர்களையும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாகப் பதிவு செய்யப்பட்ட சங்கத்தின் பதிவையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று..” என்று அந்த மனுவில் கோரியுள்ளனர்.