குளோபல் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தேனி பாரத் R.சுருளிவேல் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘பேய காணோம்.’
இந்தப் படத்தில் சர்ச்சை நடிகையான மீரா மிதுன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மற்றும் கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், ஜாக்குவார் தங்கம், ஜெயா டிவி ஜேக்கப், வி.கே.சுந்தர், செல்வகுமார், ஜெய்சங்கர், துரை ஆனந்த், ரவி, விக்கி, ஆகியோர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் இயக்குநர் தருண் கோபி நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் கடைசிக்கட்ட ஷெட்யூலில் நடிப்பதற்காக கொடைக்கானல் சென்றிருந்த நடிகை மீரா மிதுன் திடீரென்று ஒரு நாள் இரவில் யாருடனும் சொல்லாமல் அங்கிருந்து எஸ்கேப்பாகிவிட்டார் என்று இயக்குநர் செல்வ அன்பரசன் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “படத்தின் நாயகியான மீரா, ஜெயிலில் இருந்து வந்தவுடன் முதலில் சென்னையில் படப்பிடிப்பை துவங்கினோம். அதன் பின்பு இறுதிக்கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்த திட்டமிட்டோம். இதற்காக படக் குழுவுடன் கொடைக்கானல் சென்று படப்பிடிப்பை நடத்தினோம்.

மீரா மிதுன் மற்றும் இதரக் கலைஞர்கள் நடிக்க படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் படப்பிடிப்பு முழுவதும் முடிய இரண்டு நாட்களே இருந்த நிலையில் திடீரென நடிகை மீரா மிதுன் நள்ளிரவில் 6 பேர் கொண்ட குழுவுடன் தனது உடைமைகைளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
மறுநாள் காலையில் மேனேஜர் என்னிடம் விஷயத்தை சொல்ல… மொத்த படக் குழுவும் அதிர்ச்சியில் மூழ்கினோம். பேயை தேட போன கடைசியாக நாங்கள் எங்களது கதாநாயகியையே தேட வேண்டியதாகி விட்டது.
எனது தயாரிப்பாளர் என்னிடம் வந்து “தற்போது என்ன செய்ய போகிறீர்கள்..?” என்று கேட்டவுடன்.. “இத்தனை தொழில் நுட்பக் கலைஞர்களின் உழைப்பை மீரா மிதுன் மதிக்காமல் சென்றுவிட்டார். அவர் இல்லை என்றாலும் பரவாயில்லை.. நான் காட்சிகளை வேறுவிதமாக எடுத்துக் கொள்கிறேன்…” என்று சொல்லிவிட்டு, “நம்மளைவிட மீராவை கூட்டிப் போன அந்த ஆறு பேரை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது…” என்று சொன்னேன்.
அதோடு மேலும் இரண்டு நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு பூசணிக்காயையும் உடைத்துவிட்டு படக் குழுவினருடன் தற்போது சென்னை வந்துவிட்டேன். தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் திரையரங்கில் அனைவரும் எங்களது பேயை தேடலாம்…” என்றார்.