“சென்சார் ஆன படங்களை திரையிட எதிர்க்கக் கூடாது..” – சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

“சென்சார் ஆன படங்களை திரையிட எதிர்க்கக் கூடாது..” – சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

‘கத்தி’ படம் திரையிடும்போதும், விளம்பரம் செய்யும்போது, அந்த படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்தின் பெயரை குறிப்பிடலாம் என்றும், இதை எதிர்ப்பவர்கள், மிரட்டுபவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

‘கத்தி’ படத்தைத் திரையிடும்போது எதிர்ப்பாளர்களை அப்போதைக்கு சமாளிக்க வேண்டி டைட்டிலில் லைக்கா என்ற பெயரை நீக்கிக் கொள்வதாக வாக்குறுதி அளித்து அதன்படி தமிழகத்தில் மட்டும் தயாரிப்பாளர் என்ற டைட்டிலின் கீழ் வரும் லைக்காவின் பெயரை காட்டாமலேயே பார்த்துக் கொண்டது லைக்கா நிறுவனம். இது படம் ரிலீஸாகும்போது ஏதேனும் பிரச்சினையில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்..!

ஆனாலும் படம் ரிலீஸாகி வசூலாகிவிட்ட பின்பு இது போல தங்களை மிரட்டுவது சட்டப்படி தவறு என்றும், ‘கத்தி’ படத்தை வெளியிடும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டு நீதிமன்றத்தை அணுகியிருக்கிறது லைக்கா நிறுவனம்.

லைக்கா திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான நீலகாந்த் இது தொடர்பாக ஒரு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “நடிகர் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ என்ற திரைப்படத்தை எங்கள் நிறுவனம் தயாரித்துள்ளது. எங்கள் நிறுவனத்துக்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால், படம் திரையிடும்போது எங்கள் நிறுவனத்தின் பெயரை நீக்கி விட்டோம். தற்போது, ‘கத்தி’ படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது என்று குறிப்பிடவும், விளம்பரம் செய்யவும், எங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்..” என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

‘கத்தி’ என்ற தமிழ் திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த அக்டோபர் 22-ந் தேதி வெளியிட இந்த நிறுவனம் விளம்பரம் செய்தது. ஆனால், இந்த நிறுவனத்தின் உரிமையாளர், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானவர் என்பதால், படத்தை வெளியிட தமிழ் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதன் தொடர்ச்சியாக 2 தியேட்டர்கள் மீது கூலிப் படையினர், கடந்த அக்டோபர் 20-ந் தேதி தாக்குதல் நடத்தினார்கள். அவர்கள் மீது 2 வழக்குகளை சென்னை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்திருந்தபோதிலும், தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு, மனுதாரர் நிறுவனம் ஒரு சமரசக் கடிதம் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளது. அதாவது, ‘கத்தி’ படம் திரையிடும்போது, அதில் லைக்கா நிறுவனத்தின் பெயர், அதன் உரிமையாளரின் பெயர் இடம் பெறாது என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த படத்துக்கு எந்த ஒரு அமைப்பும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. வன்முறையும் நடைபெறவில்லை. இதன் பின்னர், எதிர்பாளர்களின் ஆதரவுடன் கத்தி படம் தமிழகத்தில், 500 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.

இந்த படம் எந்த பிரச்சினையும் இன்றி வெளியாகி, படத்துக்கு செய்யப்பட்ட முதலீடு தொகைகள் அனைத்தும் வசூலித்த பின்னர், மனுதாரர் கடந்த 7-ந் தேதி உள்துறை செயலாளருக்கு ஒரு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளார். அதில், கத்தி படத்தை தயாரித்த நிறுவனம் என்று தங்களது நிறுவனத்தின் பெயரை குறிப்பிடவும், விளம்பரப்படுத்தவும் வசதியாக தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனுவுக்கு அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வராததால், இந்த ஐகோர்ட்டை நாடியுள்ளார்.

இந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்த சென்னை மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர், “சில அமைப்புகள், அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து 2 தியேட்டர்களை தாக்கிய சம்பவங்கள் நடந்த பின்னர், மனுதாரர் தாமாகவே சென்று போராட்டக்காரர்களுடன் சமரசம் செய்துக் கொண்டார். இதையடுத்து 510 தியேட்டர்களில் கத்தி படம் திரையிடப்பட்டுள்ளது. இப்போது, தன் பெயரை போட் டு விளம்பரம் செய்ய பாதுகாப்பு வேண்டும் என்கிறார். இவரது படம் 510 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இந்த தியேட்டர்களுக்கு எல்லாம் பாதுகாப்பு வழங்குவது என்பது இயலாத காரியம். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

நான் இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்தேன். மனுதாரர் போராட்டக்காரர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை போலீசார் ஒரு ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒரு சினிமா படத்தை வெளியிட தணிக்கை குழு அனுமதி வழங்கி சான்றிதழ் அளித்து விட்டால், அந்த படத்தில் மதம், சாதி, இனம் மற்றும் மொழி ரீதியான காட்சிகள் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது. அவற்றை மாற்ற வேண்டும் என்று எந்த ஒரு நபரும், இயக்கமும் கோரிக்கை வைக்க முடியாது.

ஒரு வேளை தணிக்கைக் குழு சான்றிதழ் வழங்கிய படத்தில் உள்ள காட்சிகள், வசனங்கள், தலைப்புகளை மாற்ற வேண்டும் என்று ஏதாவது ஒரு இயக்கம் நடத்தும் போராட்டத்தை ஏற்றுக் கொண்டால், அது (பணத்துக்காக) மிரட்டலுக்கு வழி வகுத்து விடும். எனவே, இதுபோன்ற மிரட்டல்கள் வெற்றிப் பெற போலீசார் அனுமதிக்கக் கூடாது. அப்படி அனுமதித்தால், போராட்டக்காரர்கள் மிரட்டி பணம் பறிக்க வழிவகை செய்யும். அரசின் அதிகாரத்தை அந்த கும்பலிடம் ஒப்புடைத்து விடுவது போலாகிவிடும்.

நம்முடைய நாடு, பன்முகத் தன்மைக் கொண்டது. தங்களது மனதை புண்படுத்தி விட்டார் என்று ஒருவர் மீது ஒருவர் எப்போதும் குற்றம் சுமத்திக் கொண்டேதான் இருப்பார்கள். எனவே வன்முறையில் இறங்கி மிரட்டல் விடுத்த அமைப்புடன், மனுதாரர் சமரசம் செய்துக் கொண்டது துரதிருஷ்டவசமானது.

மேலும், எந்த அமைப்புகள் இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததோ, அந்த அமைப்பு சில கோரிக்கைகளுக்காக போராட்டம், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த அரசிடம் அனுமதிக் கேட்டு வழங்காத பட்சத்தில், இந்த கோர்ட்டிற்கு வருகின்றன. அப்போது, எங்களுக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுகிறது என்று இந்த கோர்ட்டில் ஒப்பாரி வைக்கின்றன.

இதுபோன்ற சம்பவங்கள் மூலம், வெளிவேஷம் போடும் இவர்கள், எப்படி சகிப்புத்தன்மை அற்றவர்களாக உள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அப்படிப்பட்ட இவர்களுக்கு, அரசியலமைப்பு சட்டம் ஒரு கருவியாக பயன்படுகிறது.

‘டா வின்சி கோடு’ படத்தை வெளியிடுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, இந்த ஐகோர்ட்டு (முன்னாள்) நீதிபதி பிரபா ஸ்ரீதேவன், ‘இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று யாரையும் யாரும் கட்டாயப்படுத்தவில்லை. பிடிக்காதவர்கள் படத்தை பார்க்காதீர்கள்’ என்று தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தை சொல்லவேண்டும். ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் ராஜபக்சேவுடன் நெருக்கமானவர் என்று காரணம் கூறி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த இயக்கங்கள், ‘கத்தி’ படத்தின் மூலம் இந்த மனுதாரர் நிறுவனம் பெரும் தொகையை வசூலித்துள்ளதற்கு எதிர்பபு தெரிவிக்கவில்லை. ‘கத்தி’ படத்தை பார்க்காதீர்கள் என்று பொதுமக்களிடம் போய் பிரசாரமும் செய்யவில்லை.

‘கத்தி’ படம் பல தியேட்டர்களில் திரையிடப்பட்டு, பெரும் தொகையை வசூலித்துள்ளது என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இதன் மூலம், தணிக்கைக் குழுவோ, தமிழக மக்களோ இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களிடமும், படத்தை எதிர்ப்பதற்காக ஒரு கொள்கை எதுவும் இல்லை என்று தெரிகிறது.

மேலும், மனுதாரர் போராட்டக்காரர்களிடம் சரணடைவதற்கு முன்பே இந்த கோர்ட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனாலும் மனுதாரரின் இந்த மனுவை ஏற்றுக் கொள்கிறேன். மனுதாரர் ‘கத்தி’ படத்தில் தன் நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு, விளம்பரம் செய்வதற்கும், படத்தை திரையிடுவதற்கும் வசதியாக தகுந்த பாதுகாப்பை தமிழக போலீசார் வழங்க வேண்டும். யாராவது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்தால், அவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்..

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

வசூலை வாரிக் குவித்த பிறகு இனிமேல் இவர்களால் என்ன செய்ய முடியும் என்றே நினைத்து இப்படி உயர்நீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பை வாங்கியிருக்கிறார்கள். இது இனிமேல் வரக் கூடிய சில படங்களுக்கு நன்மையையும் அளிக்கப் போகிறது. சென்சார் போர்டின் தீர்ப்பை எதிர்த்து இனி யாரும் போராட முடியாது.. வழக்கு தொடரக் கூடாது என்கிற ஒரு சூழலை இது உண்டாக்கியுள்ளது. இனி எல்லாமே சென்சார் போர்டின் கையில்தான்..!

Our Score