“இளையராஜாவுக்கு கவர்னர், ஜனாதிபதி பதவியெல்லாம் தேவையில்லை.. பாரத ரத்னாவே போதும்..” என்று இயக்குநர் அமீர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை சென்னையில் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்ற ‘அக்கா குருவி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது அமீர் இதைத் தெரிவித்தார்.
இந்த விழாவில் இயக்குநர் அமீர் பேசும்போது, ‘இசை ஞானி’ இளையராஜாவின் பாட்டை கேட்கும்போதே அவர் இப்படத்திற்காக என்ன செய்திருப்பார் என்று தெரிகிறது. முதல்முறை கேட்ட பாடலே எனக்குள் இன்னும் ஒலித்துக் கொண்டிருந்தது.
இதையெல்லாம் தாண்டி ‘இசை ஞானி’க்கான அங்கீகாரம் என்னவென்றால், இயக்குநர் சாமி என்னிடம் ஒரு மின்னஞ்சலை காண்பித்தார். இந்த விழாவிற்கு மஜித் மஜிதி வரவேண்டும் என்று ஒரு மின்னஞ்சலை அனுப்பியுள்ளனர். ஆனால், அதற்கான செலவுகள் அதிகம் என்ற காரணத்தால் படக் குழுவினர்களால் அவரை அழைத்து வர முடியவில்லை.
அவரை அழைத்து வர நானும் சில வழிகள் சொன்னேன். மஜித் மஜிதியை அழைத்து வந்த பெருமை இதை மண்னிற்கு சேரும் என்பதாலும், அவரை போன்ற இயக்குநர்கள் இங்கே வரும்பொழுது நமக்குள் இன்னும் ஒரு உத்வேகம் பிறக்கும் என்பதற்காகவும்தான். ஆனால் அது சாத்தியமடையவில்லை.
இருப்பினும் இவர்கள் இந்த ‘அக்கா குருவி’ படத்தை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதை பார்த்த அவர், “படம் உங்களின் மண்ணிற்கேற்றவாறு படத்தின் தன்மையும், உணர்வும் குறையாமல் மிக சிறப்பாக உருவாக்கியுள்ளீர்கள். அதிலும் இசை மிகவும் அற்புதம்…” என்று அவர் தரப்பில் இருந்து படத்தை பாராட்டி மின்னஞ்சலை இந்த குழுவினருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
ஒரு இசைக் கலைஞன் தமிழக மக்களை மட்டுமல்ல; உலகிலுள்ள தமிழ் பேசும் மக்களை மட்டுமல்ல.. பெர்சியன் மொழி பேசும் ஒரு இயக்குநரையும்கூட கட்டிப் போட்ட இளையராஜாவிற்கு ‘பாரத ரத்னா’ விருது என்ற ஒன்றல்ல; ஐந்து பெறுவதற்குக்கூட அவருக்குத் தகுதி இருக்கிறது. நாம் தெளிவாக சொல்ல வேண்டியது, ஆளுநர் பதவியோ, ஜனாதிபதி பதவியோ, பாரத ரத்னா விருதைவிட பெரியது இல்லை என்பதுதான்…” என்றார் இயக்குநர் அமீர்.