‘திருப்பதி பிரதர்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் லிங்குசாமி வெளியிடும் படம் ‘பிகினிங்’.
ஆசியாவிலேயே முதல்முறையாக ஒரே திரையில் இரண்டு படங்கள் என்ற டெக்னிக்கில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை அறிமுக இயக்குநரான ஜெகன் விஜயா இயக்க, வினோத் கிஷன், கௌரி ஜி.கிஷன், ரோகிணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் இயக்குநர் லிங்குசாமி பேசும்போது, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு எங்களுடைய திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் பட வெளியீட்டில் இறங்கியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இப்படத்தைத் தயாரிப்பதற்கு இயக்குநர் ஜெகனின் அம்மாதான் நிலத்தை விற்று பணம் கொடுத்தார் என்று தெரிந்ததும், இப்படத்தின் ஆதாரமான அடித்தளம் அங்கேயே தொடங்கிவிட்டது என்று நினைத்தேன். ஜெகனின் அம்மா மற்றும், எனது அம்மாவின் உணர்வுகள் இரண்டும் வேறு, வேறு அல்ல. ஒரு சரியான நபருக்குத்தான் நாம் துணையாக இருக்கிறோம் என்பதை நினைத்தபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆகையால், அவ்வளவு சாதாரணமாக இந்த துறையை விட்டு ஜெகன் செல்ல முடியாது. இந்தத் துறையும் உங்களை விடாது ஜெகன்.
இப்படத்தை பிருந்தா சாரதியும், எடிட்டர் லெனினும் பார்த்துவிட்டு, “இது விருதுக்கான படமில்லை. ஆனால் திரையரங்குகளில் வெளியாக வேண்டிய படம்” என்றார்கள். அதை ப்ரிவியூ பார்த்தபோது நானும் உணர்ந்தேன். அதே உணர்வு, இப்படத்தைப் பார்க்கும்போது உங்களுக்கும் இருக்கும் என்று நம்புகிறேன். ‘ஆனந்தம்’ படம் எடுத்தபோது என்ன உணர்ந்தேனோ, அதை இந்தப் படத்திலும் நான் உணர்ந்தேன்.
மிக சவாலாக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பது நன்றாக தெரிகிறது. மிகவும் திறமையான இயக்குநர், நுணுக்கமான அழகான இயக்குநர் என்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது.
இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ‘இந்த லென்ஸை உபயோகப்படுத்தினேன்’ என்றார். கலை இயக்குநர் ‘புதியதாக ஒன்றை பயன்படுத்தினோம்’ என்றார். இதுதான் புதிதாக படம் எடுப்பவர்களுக்குக் கிடைக்க வேண்டிய அனுபவம்.
இப்படத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்களைப் பாராட்டினால் “எல்லாவற்றுக்கும் இயக்குநர்தான் காரணம்” என்பார்கள். இயக்குநர் அனைவரிடமும் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். எதிர்காலத்தில் என்னுடைய நிறுவன படங்களிலும் இயக்குநர் ஜெகனை நிச்சயமாகப் பயன்படுத்துவேன்.
இந்த ‘பிகினிங்’ படத்தைத் தொடர்ந்து ‘திருப்பதி பிரதர்ஸ்’ மற்றும் ‘மாஸ்டர் பீஸ்’ நிறுவனங்கள் இணைந்து பல நல்ல படங்களை வெளியிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவர்களைப் போல் சரியான ஆட்கள் இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு நான் ஆதரவளிப்பேன்.
சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சிதான். என் பின்னால் 40 பேர் இருக்கிறார்கள். அனைவரும் ஒரே எண்ணத்தில் சேர்ந்து கூட்டாக முயற்சி செய்தால்தான் வெற்றி கிடைக்கும். இதுவரை வெற்றி பெற்ற பெரிய கலைஞர்களுக்கும் அதுதான் நிகழ்ந்துள்ளது.
இதுவரையிலும் எனது அனைத்து படங்களுக்கு ஆதரவளித்த பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கும் அதேபோல் ஆதரவு தாருங்கள்..” என்று கேட்டுக் கொண்டார்.










