CAST :
Sunaina – Yamini Lakshmanan
Kavya – Prerna Khanna
Nayana Kapoor – ItI Acharya
Suraj – Arun Mohan
Santa – Shravan Ramakrishnan
Helen – Juhi Sharma
Laya – Priyadharshini
Inspector – Nithish
SI – Balaji
Vinodh – Rajavel
Harsh – Atul
Yohaan – G. Sivakumar
Hero Father – Venkat Ramesh
Prof Father in Law – Col R Ganesan
Prof Chidhambaram – L Shanmuga Sundar
CREW :
Director – L.Shanmuga Sundar
Executive Producer – Col R Ganesan
Cinematography – Pradeep Padma Kumar
Music Director – Prashanth Vihari
Art Director – Umesh Kumar
Editors – Abishek, Vignesh RL
Stunt Master – Ram Kumar
Costume Design – Vino Supraja, Preetha Raaghav, Divya Niranjan
PRO – A. John
தனக்குள் அதீத சக்தியை வைத்திருக்கும் ஒருவன், அந்தச் சக்தியைப் பயன்படுத்தி எப்படி வழக்குகளில் துப்பறிகிறான் என்பது தொடர்பாக… பல திரைப்படங்கள் இதற்கு முன்பாக வந்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது.
படத்தின் நாயகனான ராகவ் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வருகிறார். படிப்பதைத் தவிர மீதியெல்லாம் செய்து வருகிறார். ஆனால் படிப்பில் அவருக்கே முதல் மதிப்பெண் கிடைக்கிறது. வகுப்பிலும் முதல் மாணவராகவும் இருக்கிறார். அது எப்படி என்று அவரது நண்பர்களுக்கே தெரியவில்லை.
ராகவ்வுக்கு ஒரு தனி திறமை இருக்கிறது. ஒரு புகைப்படத்தையோ அல்லது ஒரு சம்பவத்தையோ பார்த்தால் அதன் உள்ளேயே நுழைந்து அதற்கு பின்பு… முன்பு… என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக சொல்லிவிடுவார்.
இதை எப்படி அவர் சொல்கிறார்? கணிக்கிறார்? என்பது அவருக்கே தெரியவில்லை. அவருடைய நண்பர்கள் இதைப் பார்த்து மிகுந்த ஆச்சரியத்தோடு அவரை ‘தலைவா’ என்ற ரேஞ்சில் வைத்திருக்கிறார்கள்.
பாலியல் தொழில் செய்யும் யாமினி உடன் ஒரு கட்டத்தில் ராகவ்வுக்கு நட்பு ஏற்படுகிறது. யாமினியை தன்னுடைய கல்லூரிக்கு அழைத்து வந்து கல்லூரி ஆண்டு விழாவில் நடனமாடும் மாணவர்களுக்கு நடனப் பயிற்சியை கொடுக்க வைக்கிறார் ராகவ். அந்த அளவுக்கு இருவரும் நெருக்கமாகிறார்கள்.
இந்த நேரத்தில் ஒரு நாள் யாமினி ‘சர்வீஸ்’ செய்ய சென்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிர் இழக்கிறார்.
அவருடைய மரணம் மர்மமானது, சந்தேகமானது என்று போலீஸ் சொல்கிறது. ராகவ்வும் அதையே சொல்கிறார்.
ஆனால், உண்மையில் என்ன நடந்தது என்பது போலீசுக்கு தெரியவில்லை. சம்பந்தப்பட்ட வீட்டில் இருந்தவர்கள் இருவருமே ராகவ்வுக்கு முன்பேயே நன்கு தெரிந்தவர்கள்.
கல்லூரியில் தொடர்புடையவர்கள் என்பதால் தனித்து நின்று இந்த வழக்கில் உண்மையை கண்டறிய முனைகிறார் ராகவ். இன்னொரு பக்கம் போலீசுக்கும் அவ்வப்பொழுது சில துப்புகளை கொடுத்து விசாரிக்கச் சொல்கிறார்.
முடிவில் என்ன ஆனது? யாமணியை யார் கொலை செய்தது? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலையா? போலீஸ் யாரை கைது செய்தது?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடைதான் இந்த ‘பீப்’ என்ற திரைப்படம்.
சின்னத்திரை நடிகரான ராகவ் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இந்தப் படம் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக எடுத்த படம் என்பதால் அப்போது இருந்த தோற்றத்தில் ராகவ் ஒரு ஹீரோவாக அழகாகத்தான் இருக்கிறார்.
சிறப்பாகவே நடித்திருக்கிறார். அவருடைய கோபம், ஆற்றாமை, இயலாமை, ரொமான்ஸ், எதார்த்தமாக பேசுவது, இயல்பாக நடப்பது என்று தனக்குக் கிடைத்த அனைத்துவிதமான சிச்சுவேஷங்களிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இடையிடையே நிறைய ஆங்கில வசனங்களையும் சேர்த்து பேசியிருப்பதால், அதுவும் மிக வேகமாக பேசி இருப்பதால் பல இடங்களில் அவர் பேசுவது என்னவென்று புரியவில்லை.
ஒலிப்பதிவும் மிகவும் குறைந்தத் தரத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதால்… இவர் மட்டுமல்ல; படத்தில் நடித்த பலரது வசனங்களும் நமக்கு புரியாமல் போய்விட்டது. இதனால் சில இடங்களில் குழப்ப நிலைதான் நமக்கு ஏற்பட்டுள்ளது.
போலீசை உசுப்பேற்றிவிடும் காட்சிகளில் எல்லாம் ராகவ்வின் நடிப்பு ரசிக்கக் கூடியதாக இருந்தது. ஆனாலும், இந்த அளவுக்கு உரிமை எடுக்கும் ஹீரோ அண்ட் டீமை ஸ்டேஷனுக்குள் அனுமதிக்கும் அளவுக்கு பிரண்ட்லியாக இருக்கும் அந்த போலீசாரின் கேரக்டர் ஸ்கெட்ச் ஆச்சரியமாக உள்ளது.
இப்போதைய நிலைமையில் எந்த ஸ்டேஷனிலும் இதுபோல் நடக்க வாய்ப்பே இல்லை. படத்திலேயே மிகப் பெரிய லாஜிக் மிஸ்டேக் இதுதான்.
பாலியல் தொழிலாளியாக நடித்திருக்கும் யாமினி லட்சுமணன் அட்டகாசமாக இருக்கிறார். எந்த வகையான உடையாக இருந்தாலும் ஒரு பக்கம் பார்த்தால் அவர் அவ்வளவு கவர்ச்சியாக தென்படுகிறார்.
எப்படி அவர் தமிழ் சினிமாவில் இத்தனை நாட்கள் முகம் காட்டாமல் இருந்தார் என்பதே தெரியவில்லை. இப்பொழுது ஆன்ட்டி கேரக்டரிலாவது அவர் நடிக்கலாம். அவரை தேடிப் பிடிக்க வேண்டியது தமிழ் சினிமா துறையினரின் கடமை.
நாயகனின் இன்னொரு பெண் நண்பியாக நடித்திருக்கும் ஜூஹி சர்மாவும் அழகு ராணியாக ஸ்கிரீனில் வலம் வந்திருக்கிறார்.
இவர்களை எல்லாம் அழகிகளாக தேர்வு செய்திருக்கும் இயக்குநர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரிணியான நயனா கபூராக படத்தில் காட்டி இருக்கும் ஐடி ஆச்சாரியாவை மட்டும் ஏன் இப்படி மொக்கையாக தேர்வு செய்து இருக்கிறார் என்று தெரியவில்லை.
இவருக்கும் படத்தில் அதிகமாக நடிக்க வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மேலும் ராகவ்வின் நண்பர்களாக நடித்திருக்கும் ராமகிருஷ்ணன், அருண் மோகன், பிரத்னா கண்ணா மூவரும் உசுப்பேற்றிவிடும் வேலையை மட்டும் கனகச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ஒரு நேர்மையான இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் நித்திஷ் மிக இயல்பான தன்னுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார். கொரோனாவால் பலி வாங்கப்பட்ட ஒரு நல்ல நடிகர். தமிழ் சினிமா அவரை இழந்துவிட்டது என்பது வருத்தத்திற்குரியது.
இந்தப் படத்தின் இயக்குநரான சண்முகசுந்தரமே இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இடைவேளைக்கு பின்பு இவரைச் சுற்றித்தான் படமே நடக்கிறது. இவருடைய முகத்தைப் பார்த்தால் இப்படியெல்லாம் இவர் செய்வாரா என்று நாம் சந்தேகப்பட வேண்டும். அப்படி ஒரு கேரக்டர் ஸ்கெட்ச்சில் தைரியமாக இவர் நடித்திருக்கிறார்.
அந்த அர்த்த ராத்திரியில் மனைவி வெளியில் கதவைத் தட்டிக் கொண்டிருக்க…. உள்ளே யாமனியுடன் சிக்கிக் கொள்ளும் சண்முகசுந்தரம் தவியாய் தவிக்கிறார்.
அந்த நேரத்தில் தொடர்ச்சியாக நடக்கின்ற 20 நிமிட காட்சிகள் நம்மை மெய் மறக்கச் செய்தது. உண்மையில் இந்தப் படத்தின் மிகச் சிறந்த இயக்கம் என்றால் இந்தக் காட்சியைத்தான் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
சண்முகசுந்தரத்தின் மனைவியாக நடித்திருக்கும் பிரியதர்ஷினி ராஜ்குமார் தன்னுடைய அழகான நடிப்பை காண்பித்து இருக்கிறார்.
வீட்டுக்குள் கணவருடன் நிற்பவள் யார் என்கின்ற அந்த சந்தேகத்துடன் கதவைத் தட்டிக் கொண்டே இருப்பதும், அதன் பின்பான காட்சிகளில் மாட்டிக் கொண்டு முழிப்பதுமாக அவருடைய பரிதாபமான நடிப்பு படத்தில் சஸ்பென்ஸை கூட்ட உதவியிருக்கிறது.
ஏனைய கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் புதுமுகங்களாகவே இருந்தாலும், அனுபவம் பெற்றவர்களாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரதீப் பத்மகுமார் தனக்குக் கொடுத்த பட்ஜெட்டுக்குள் தன் வேலையை செய்திருக்கிறார்.
அதனால் இந்தப் படத்தில் ஒளிப்பதிவு என்பது இருக்கிறதா என்கின்ற சந்தேகமே நமக்குள் ஏற்படுகிறது. அவ்வளவு மங்கலான ஒளிப்பதிவு!
இசையும் இதே போலத்தான்! பிரசாந்த் விகாரின் இசையில் பாடல்கள் எதுவும் கேட்கும் ரகம்கூட இல்லை. ஏதோ இசைக்கிறது. ஒலிக்கிறது. ஆடுகிறார்கள். அவ்வளவுதான்!
படத் தொகுப்பு செய்திருக்கும் அபிஷேக் மற்றும் விக்னேஷ் இருவரும் இரண்டாம் பாதியை மட்டும் கச்சிதமாகத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதிலும் அந்த வீட்டுக்குள் நடக்கும் 20 நிமிட காட்சியை தொகுத்தவிதம் பாராட்டுக்குரியது!
ஒரு க்ரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படங்களுக்கு உரித்தான வகையில் தொழில் நுட்பம் இந்த படத்தில் முழுமூச்சாக இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும். அது இல்லாததால் இந்தப் படம் பாதி வெந்த சோறாகவே நமக்குப் படைக்கப்பட்டிருக்கிறது.
நம்மால் நம்பவே முடியாத ஒரு சக்தி ஒருவனுக்குக் கிடைத்துவிட்டால் அதை வைத்து என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு எத்தனையோ கதை, திரைக்கதைகள் இருக்கின்றன.
ஆனால், இந்தப் படத்தின் இயக்குநர் அந்த சக்தியை வைத்து இது மாதிரியான ஒரு கதைக்கு ஏன் பயன்படுத்தினார் என்பதுதான் தெரியவில்லை.
முதல் பாதியில் இளைஞர்களுக்கு கிளுகிளுப்பை ஊட்டும் வகையில் மலிவான காட்சிகளும், நடனங்களும், இரட்டை அர்த்த ஆபாச வசனங்களுமாக படம் செல்கிறது.
அந்த முதல் பாதியில் பேசப்படும் வசனங்களுக்காகவே இந்த படத்தின் தலைப்பை ‘பீப்’ என்று வைத்திருப்பார்கள் போலும்!
இடைவேளைக்கு பின்பு அந்தக் கொலையை யார் செய்தது என்ற விசாரணையில் ஹீரோ சொல்கின்ற துப்புக்களை வைத்து போலீஸ் விசாரணையை முடுக்கிவிடும் பொழுதெல்லாம் திரைக்கதை பறக்கிறது.
ஆனாலும் கொஞ்ச நேரத்தில் ஓவர்டோஸாக ஹீரோ பேசுகின்ற பல வசனங்கள் நமக்குப் புரியாமல்போக படத்துடன் ஒன்ற முடியாமல் தவிக்கிறோம்!
எப்போதும் சினிமாவில் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என்பது நம்முடைய பொது புத்தியில் பதியப்பட்டு இருப்பதால் கிளைமாக்ஸ் காட்சி நமக்கு அதிர்ச்சியை கொடுக்கவில்லை.
ஆனால் அதைக் கண்டுபிடித்த வழியை நினைத்து லேசாக ஆச்சரியத்தை கொடுத்தது.
அவ்வளவுதான்!
RATING – 2.5 / 5









