full screen background image

“கார்த்திக்கை வைச்சு படம் தயாரிச்ச ரகசியத்தை சங்கிலி முருகன் சொல்லவே இல்லை..” – சசிகுமாரின் வருத்தம்..!

“கார்த்திக்கை வைச்சு படம் தயாரிச்ச ரகசியத்தை சங்கிலி முருகன் சொல்லவே இல்லை..” – சசிகுமாரின் வருத்தம்..!

சசிகுமார் நடிப்பில் ‘கிடாரி’ படம் இந்தாண்டு செப்டம்பர் 2-ம் தேதியன்று வெளியானது. செப்டம்பர் 16-ம் தேதி தனது புதிய படத்தைத் துவக்குவதாக அறிவித்தார் சசிகுமார். இதோ இப்போது டிசம்பர் 23-ம் தேதி அந்த புதிய படத்தை வெளியிடுவதாகவும் அறிவித்து திரைக்கும் கொண்டு வந்துவிட்டார்.  எல்லாம் புயல் வேகம்தான்..!

தன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பிலேயே ‘பலே வெள்ளையத்தேவா’ என்கிற புதிய படத்தை மிக குறுகிய கால தயாரிப்பாக வெறும் 50 நாட்கள் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடெக்சன்ஸ் 25 நாட்கள் என்று 75 நாட்களில் மொத்தப் படத்தையும் முடித்துவிட்டார் சசிகுமார்.

bvt-press-meet-stills-15

இந்தப் படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக மறைந்த பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தி தான்யா அறிமுகமாகியிருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சங்கிலி முருகன், கோவை சரளா, ரோகிணி, பாலாசிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

கலை இயக்கம் – மாயபாண்டி, ஒளிப்பதிவு – ரவிந்திரநாத் குரு, இசை – தர்புகா சிவா, படத் தொகுப்பு – பிரவின் ஆண்டனி, தயாரிப்பு நிர்வாகம் – முத்துராமலிங்கம், மக்கள் தொடர்பு – நிகில், இணை தயாரிப்பு – B. அசோக்குமார், தயாரிப்பு – கம்பெனி புரொடக்ஷன்ஸ்.

இயக்குநர்கள் பாலா மற்றும் சுதா கொங்காராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சோலை P.பிரகாஷ், இப்படத்தின் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.

எதிர்வரும் டிசம்பர் 23-ம் தேதி ‘பலே வெள்ளையத்தேவா’ படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு சமீபத்தில் வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

முதலில் டிரெயிலரும் இரண்டு பாடல்களும் ஒளிபரப்பட்டன. டிரெயிலரை பார்க்கும்போது படம் காமெடியாகவே நகரும் போலத்தான் தெரிகிறது. சசிகுமார் இருக்கும்போது சண்டை காட்சிகளும் இல்லையென்றால் நன்றாக இருக்காதே.. அதுவும் இருக்கிறது. கூடவே “அடிடா அவனை…” என்று சசிகுமாரின் தாயான ரோகிணியே அவரைத் தூண்டிவிடும் காட்சியும் வருகிறது.. ஸோ.. மகனை உசுப்பேற்றும் அம்மா என்பது தெரிகிறது.

‘செல்ஃபி காத்தம்மா’ என்கிற புதிய கேரக்டரில் படம் முழுக்க வருகிறாராம் நடிகை கோவை சரளா. அவரும், சசிகுமாரும் செய்யும் அராஜகங்கள் டிரெயிலரிலும், பாடல் காட்சிகளிலும் அளப்பறையைக் கொடுக்கின்றன. கோவை சரளாவுக்கு ஜோடியாக சங்கிலி முருகன் நடித்திருக்கிறார்.

தனது தாத்தா, பாட்டியுடன் வெளியூரில் இருந்து மதுரை அருகில் இருக்கும் ஒரு கிராமத்திற்கு வந்து குடியேறுகிறார் சசிகுமார். அங்கே பார்க்கும் தான்யாவுடன் காதல்வயப்படுகிறார். முதலில் காதலிக்க மறுத்த காதலி.. பின்பு காதலியாகிறார். இவர்களது காதலுக்கு பாட்டி கோவை சரளா துணை நிற்கிறார். ஆனால் உள்ளூரில் இதற்கு எதிர்ப்பு கிளம்ப.. தாதாக்கள் படை திரண்டு வருகின்றனர். இதனால் விளையும் பிரச்சினைகள்தான் படம் என்பதாகத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ‘பாட்டி சொல்லைத் தட்டாதே’ படத்தின் சாயலும் தெரிகிறது..!

sangili-murugan-1

படத்தின் துவக்கத்தில் நடிகர் சங்கிலி முருகன் பேசும்போது, “இந்தப் படத்தை ‘பலே வெள்ளையத் தேவா’ என்று சொல்வதைவிட ‘பலே சசிகுமார்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏன்னா தயாரிப்பாளர் என்ற முறையில் அவர் இந்தப் பட ரிலீஸுக்கு முன்பேயே ஜெயித்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

நானும் நிறைய படங்களில் நடித்துவிட்டேன்.. ஆனால் இந்தப் படத்தில் நடிக்கும்போது ஒரு விஷயத்தை நல்லா தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு படத்தை திட்டமிட்டு எடுத்தால் செலவை குறைத்து சிக்கனமாக விரைவாக எடுத்து முடிக்கலாம்ன்றதை இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தெரிந்து கொண்டேன்.

இந்தப் படத்தை வெறும் 50 நாளில் முடித்தார் இயக்குநர். நான் அந்த 50 நாட்களில் 35 நாட்கள் அவர்களுடன் இருந்தேன். ரன் பாஸ்ட் என்பார்களே.. அப்படித்தான் இயக்குநர் பம்பரமாக சுற்றி வேலை வாங்கி அத்தனை வேகமாக படத்தை எடுத்து முடித்தார். இப்படி பக்கா பிளானோடு செயல்பட்டால் செலவு குறையும். திரைப்பட துறையும் வளரும்.

கோவை சரளா எனக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. நல்லாவும் நடிச்சிருக்காங்க. மனோரமா ஆச்சிக்கப்புறம் நடிப்புல மின்னுறாங்க சரளா..” என்று வாழ்த்தினார்.

kovai-sarala-rohini-1

நடிகை ரோகிணி பேசும்போது “இதுக்கு முன்னாடி ‘மகளிர் மட்டும்’ படத்துலதான் ரொம்ப இயல்பா நடிச்சிருந்தேன். அந்தப் படத்துல ஒர்க் பண்ணும்போது நடிக்க வந்த மாதிரியே தெரியாது. ரொம்ப ஜாலியா, என்ஜாய் பண்ணி நடிச்சேன். அதே மாதிரிதான் இந்தப் படத்தோட ஷூட்டிங்கும் இருந்துச்சு..

இயக்குநர் பிரகாஷ் எங்களை திறமையா வேலை வாங்கியிருக்கார். படத்தில் என் கேரக்டர் கொஞ்சம் சீரியசான அம்மா கேரக்டர்தான். இருந்தாலும் ஆக்சனப்போ ‘இவ்ளோ சீரியஸ் வேண்டாம் மேடம்.. கொஞ்சம் குறைச்சுக்குங்க’ என்று இயக்குநர் அடிக்கடி சொல்வார்.

சசிகுமார் அவ்வளவு செலவு பண்ணி இந்தப் படத்தை எடுத்திருக்கார். என் ஷூட்டிங் டைம்ல கோவை சரளாவோட நடிச்சதும் மறக்க முடியாதது. அவங்க மனோரமா ஆச்சிக்கு அடுத்து நடிப்புத் திலகமா இருக்காங்க…” என்றார்.

sasikumar-kovai-sarala-1

நடிகை கோவை சரளா பேசும்போது, “சசிகுமார் இனிமேல் வருடத்திற்கு பத்து படங்களை எடுக்க வேண்டும். அவர் எடுக்குற பத்து படத்துலேயும் எனக்கும், ரோகிணிக்கும் ஏதாவது ஒரு வேடம் கொடுத்திரணும். நான் வேற எந்தப் படத்துலேயும் நடிக்கவே மாட்டேன். இவருடைய படங்கள் மட்டுமே போதும்..!

ஏன்னா இந்தப் பட ஷூட்டிங்ல எங்களுக்குக் கிடைத்த மரியாதை, நாங்க அனுபவித்த சந்தோஷம்.. வேற எங்கேயுமே கிடைக்காது.. கிடைக்கலை.. அதோடு கேட்ட சம்பளத்தையும் டக்குன்னு கொடுத்தார் சசிகுமார். இதுவொண்ணு போதாதா..? இந்தக் கம்பெனி பிடிச்சுப் போக..?” என்றார்.

sasikumar-1

நடிகர் சசிகுமார் பேசும்போது “இந்தப் படத்தில் இருக்கும் செல்ஃபி ஆத்தா கேரக்டரில் மனோராமா ஆச்சி, கோவை சரளா இரண்டு ஆர்ட்டிஸ்ட்டுகள் மட்டும்தான் நடிக்க முடியும். ஆச்சி இல்லாததால சரளாம்மாவை நடிக்க வைச்சோம். எக்ஸ்ட்ரா ஆர்டினரியா நடிச்சுக் கொடுத்தாங்க. அவங்ககிட்ட கத்துக்க வேண்டியது நிறைய இருக்குன்னு எனக்கு அவங்க்கூட நடிக்கும்போதுதான் தெரிந்த்து. அவர் இல்லாமல் நிச்சயமாக இந்தப் படம் உருவாகியிருக்காது.

ரோகிணி இதுல எனக்கு அம்மாவா நடிச்சிருக்காங்க. ‘அடிடா அவனை’ என்று சொன்னாலும் அவங்க நல்ல அம்மாதான்.  

சங்கிலி முருகன் போன்ற சினிமா சாதனையாளர் என்னை மனமுவந்து பாராட்டியது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அவர்கிட்டேயும் நிறைய தெரிஞ்சுக்க வேண்டியிருக்கு. கார்த்திக் ஸாரை வைச்சே படத்தை தயாரித்து கொடுத்திருக்காருன்னு அவர் எவ்வளவு பெரிய தயாரிப்பாளர்ன்னு நினைச்சுப் பாருங்க. கார்த்திக்கை வைச்சு கரெக்ட்டா படப்பிடிப்பு முடிச்ச ரகசியத்தை நானும் அவர்கிட்ட பல மாதிரி கேட்டுப் பார்த்துட்டேன்.. கடைசிவரையிலும் சொல்லவே மாட்டேனுட்டார்.

இந்தப் படத்தை ஒரே ஷெட்யூலில் முடிப்பது என்று முன்பேயே முடிவு செய்திருந்தோம். அதையும் வெறும் ஐம்பதே நாட்களில் முடித்துக் கொடுத்தார் இயக்குநர் சோலை பிரகாஷ். ஸ்பாட்ல பம்பரமா சுத்திக்கிட்டிருப்பாரு. நான்தான் படத்தோட தயாரிப்பாளர். ‘ஒரு அஞ்சு நிமிஷம் உக்காந்திருக்கேன்’னு சொல்வேன். ‘இல்லண்ணே.. அவ்ளோதான் முடிச்சிருவோம். அப்படியோரமா நில்லுங்க’ன்னு சொல்லுவாரு. இப்படி பேசி பேசி வேலைய வாங்கிட்டாரு. ஒரு படத்தை இவ்வளவு சீக்கிரமாக முடிக்க முடியும்ன்னு எனக்கே இப்போதான் தெரியுது…” என்றார்.

solai-prakash-1

இயக்குநர் சோலை பிரகாஷ் பேசும்போது, “பொதுவா மதுரை என்றாலே அடிதடி, வெட்டுக் குத்து என்றுதான் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதை மாற்றி இந்தப் படத்தில் நிறைய காமெடியோட கதையையும் கலந்து சொல்லியிருக்கேன்.

நவீன தொழில் நுட்பங்களினால் ஒரு கிராமத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதன் விளைவுகள் என்ன என்பதும்தான் இந்தப் படத்தின் கதைக் கரு.

ஒருவன் ஒரு போராட்டத்தில் இருக்கும்போது அவனை பாராட்டி உற்சாகப்படுத்தினால் அவன் கண்டிப்பாக ஜெயிப்பான். அதைக் குறிப்பதற்காகத்தான் ‘பலே’ என்கிற வார்த்தையை டைட்டிலில் சேர்த்தேன்…” என்றார்.

‘பலே வெள்ளையத்தேவா’ படம் வரும் டிசம்பர் 23-ம் தேதி வெளிவருகிறது..!

Our Score