full screen background image

300 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது ‘பாகுபலி’..!

300 கோடி வசூலை தாண்டி சாதனை படைத்தது ‘பாகுபலி’..!

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அறிவாற்றலுக்கு இந்திய திரையுலகமே இன்றைக்கு சல்யூட்  செய்கிறது.

இவருடைய இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் உருவாகி 2 வாரங்களுக்கு முன்பு வெளியான பாகுபலி திரைப்படம் இந்தியத் திரையுலகில் இதுவரை காணாத வசூல் சாதனையை செய்து வருகிறது.

துவக்க நாளிலேயே மிக அதிகமான வசூலை வாரிக் குவித்த இந்திய திரைப்படம் என்கிற பெருமையைப் பெற்றது.

அடுத்தடுத்த நாட்களில் இதன் வசூல் சாதனை அதிகமாகிக் கொண்டே போக இப்போது அனைத்து வகையான வசூல் பிரிவுகளிலும் சேர்த்து இதுவரையிலும் 303 கோடியை இந்தப் படம் வசூலித்திருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வாரமே புகழ் பெற்ற போர்ப்ஸ் பத்திரிகை அமெரிக்க டாப் 10 சினிமா வரிசையில் 9-வது இடத்தை பிடித்திருந்த பாகுபலி பற்றிய செய்தியை வெளியிட்டு பெருமைப்படுத்தியிருந்தது. இன்னமும் சீன மொழியில் இந்தப் படம் டப் செய்யப்படவில்லை என்பதால் அதனையும் செய்தால் படத்தின் வசூல் 300 கோடியையும் தாண்டி இந்திய அளவில் சாதனையாகிவிடும் என்று எழுதியிருந்த்து. அந்தச் சாதனையை இந்த 3-வது வாரத்தின் முடிவிலேயே பாகுபலி பெற்றுவிட்டது.

இதுவரையில் எந்திரன் திரைப்படம் மட்டுமே மிக அதிக வசூலை சம்பாதித்த ஒரே தமிழ்ப் படமாக இருந்த்து. இப்போது அந்த சாதனையை பாகுபலி முறியடித்து 303 கோடியைத் தொட்டு இன்னமும் நன்றாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. சீன மொழி டப்பிங்கும் ரிலீஸானால் வசூல் இன்னும் கூடுதலாக 50 கோடியைத் தாண்டும் என்று நம்பப்படுகிறது.

ஒரு சிறந்த திரைப்படத்தை தரமான முறையில் வழங்கினால் திரை ரசிகர்கள் நிச்சயம் அந்தப் படத்தைக் கொண்டாடுவார்கள் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாகியிருக்கிறது இந்த பாகுபலி திரைப்படம்.

முதல் பாகத்திற்கான தயாரிப்பு செலவாக 250 கோடியை தயாரிப்பாளர்கள் தரப்பில் சொன்னாலும், இதிலேயே இரண்டாம் பாகத்திற்கான பாதி செலவும் அடக்கம் என்கிறது தெலுங்கு திரையுலகம்.

ஆக இன்னுமொரு 50 கோடியை செலவு செய்து மீதமிருக்கும் 60 சதவிகித படப்பிடிப்பையும் முடித்துவிட்டு படத்தை வெளியிட்டால் இன்னமும் கூடுதலாக 300 கோடி வசூல் உறுதி என்கிறது பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட்..

இது மட்டும் நடந்துவிட்டால் நிச்சயம் அது சரித்திர சாதனைதான். இந்திய திரையுலக சரித்திரத்தில் நீங்கா புகழை பெற்றுவிட்டார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

Our Score