full screen background image

விமல்-சூரி நடித்திருக்கும் ‘படவா’ படத்தின் இசையை விஜய் ஆண்டனி வெளியிட்டார்!

விமல்-சூரி நடித்திருக்கும் ‘படவா’ படத்தின் இசையை விஜய் ஆண்டனி வெளியிட்டார்!

ஜே ஸ்டுடியோஸ் இன்டர்நேஷனல் பேனரில் இசையமைப்பாளர் ஜான் பீட்டர் தயாரிக்கும் ‘படவா’ திரைப்படத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு  நடிகர்கள் விமல் மற்றும் சூரி இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

ஸ்ரீதா கதாயாகியாகவும், ‘கே.ஜி.எஃப்.’ புகழ் ராம் வில்லனாகவும், தேவதர்ஷினி, நமோ நாராயணன், வினோதினி, டி.எஸ்.ஆர் சரவண சக்தி மற்றும் சாம் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

இயக்குநர் கே.வி.நந்தா இப்படத்தை இயக்கியுள்ளார். கலை இயக்குந‌ராக சரவண அபிராமன், படத் தொகுப்பாளராக வினோத் கண்ணா பொறுப்பேற்றுள்ளனர்.

சண்டைக் காட்சிகளை சிறுத்தை கணேஷ், நடனத்தை தினேஷ், ஸ்ரீதர் மற்றும் தினா ஆகியோரும் வடிவமைத்துள்ளனர். பத்திரிக்கை தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்து வருகிறார். பாடல்களை ஜான் பீட்டர், விவேகா, கபிலன் வைரமுத்து, இளையகம்பன், ஸ்வர்ணலதா ஆகியோர் எழுதியுள்ளனர்.

‘படவா’ ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அதன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் கமலா திரையரங்கில் நடைபெற்றது.

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இந்தப் படத்தை இசையை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கவிஞர் இளைய கம்பன் பேசும்போது, “இந்த ‘படவா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். என் அருமை இசையமைப்பாளர் ஜான் பீட்டர் அவர்கள் ஒரு அற்புதமான மனிதர். அவரது பெரிய முயற்சியில் உருவாகின்ற ‘படவா’ திரைப்படம் ஒரு அற்புதமான திரை சூழலை உருவாக்கி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் ஐயமில்லை.

இந்தப் படத்தில் ஆறு பாடல்கள் உள்ளன. அனைத்து பாடல்களையும் நீங்கள் கேட்டிருப்பீர்கள். இந்தப் படத்தின் முகப்புப் பாடலை நான் எழுதியிருக்கின்றேன். பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக அமைந்திருக்கின்றன. அனைவருக்கும் வாழ்த்துகள்..” என்றார்.

கலை இயக்குநர் சரவண அபிராமன் பேசும்போது, “இந்த படவா படத்தில் நவரசங்களும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன‌. விமல் மிகப் பெரிய நடிகர். இந்தப் படமும் அவருக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும். சூரி அவர்களுக்கும் இது மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும்…” என்று வாழ்த்தினார்.

இயக்குந‌ர் சரவணன் சக்தி பேசும்போது, “இது மிகப் பெரிய சமூக பொறுப்புள்ள படம். விவசாயம் பற்றி இது பேசுகிறது. இந்தப் படத்தை பொறுத்தவரை அனைவரும் சிறப்பான பங்களித்துள்ளனர். நானும் இந்தப் படத்தில் ஒரு ரோல் செய்துள்ளேன். படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டிக் கொள்கிறேன்…” என்றார்.

நடிகர் சவுந்திரராஜா பேசும்போது, “இப்படத்தில் நான் நான் நடிக்காவிட்டாலும் விமலுக்காக வந்திருக்கிறேன். விவசாயம் குறித்த‌ கருத்து இதில் இருக்கிறது. இந்த படம் கண்டிப்பாக நன்றாக ஓட வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்…” என்றார்.

பாடகர் வேல்முருகன் பேசும்போது, “இந்தப் படத்தில் டைட்டில் பாடலை நான் பாடியிருக்கிறேன். இந்தப் ‘படவா’ படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமையும். மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. அனைவருடனும் சினிமாவில் பயணிப்ப‌து மிகவும் மகிழ்ச்சி…” என்றார்.

இயக்குந‌ர் பேரரசு பேசும்போது, “ஜான் பீட்டர் இப்படத்தின் தயாரிப்பாளர் மட்டுமின்றி இசையமைப்பாளரும்தான். பாடல்கள் ஒவ்வொன்றும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. நடிகர் விமல் வெற்றி அடைந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த ‘படவா’ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.

இந்தப் படம் விவசாயத்தை பற்றியது. ‘கடைசி விவசாயி’ தேசிய விருது பெற்றது, டிரைலரை பார்க்கும்போது அது போன்ற திரைப்படமாகத்தான் இந்த ‘படவா’ இருக்கும் என்று தோன்றுகிறது..” என்றார்.

கதாநாயகி ஸ்ரீதா பேசும்போது, “மேடையில் உள்ள அனைவருக்கும் நன்றி. இயக்குந‌ர் நந்தா அவர்களை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எனக்கு சுத்தமாக‌ தமிழ் தெரியாது. அவரால்தான் நான் தமிழ் வசனம் பேசி கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன்…” என்றார்.

கதாநாயகன் விமல் பேசும்போது, “மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தின் இயக்குந‌ர் நந்தா அவர்களுக்கும் நன்றி. அன்பு நண்பன் சூரி அவர்களுக்கும், பத்திரிக்கை தொடர்பாளர் நிகில் முருகனுக்கும் நன்றி…” என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசும்போது, “ஜான் பீட்டர் மற்றும் கதாநாயகன் விமல் அவர்களுக்கு வணக்கம். கண்டிப்பாக நீங்கள் பெரிய உயரத்தை தொடுவீர்கள். கதாநாயகன் விமல், நடிகர் சூரி சாரின் காம்போ இரண்டுமே எப்போதும் நன்றாகவே இருக்கும். இது கட்டாயம் வெற்றித் திரைப்படமாக அமையும்..” என்றார்.

Our Score