full screen background image

2018 தேசிய விருதினை வென்ற ‘பாரம்’ படத்தை வெற்றி மாறன் வெளியிடுகிறார்..!

2018 தேசிய விருதினை வென்ற ‘பாரம்’ படத்தை வெற்றி மாறன் வெளியிடுகிறார்..!

2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்ற திரைப்படம் ‘பாரம்’.

இந்தப் படத்தை இயக்கியவர் பிரியா கிருஷ்ணசாமி என்னும் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கடந்த 65 ஆண்டு கால தேசிய திரைப்பட விருதுகள் வரலாற்றில் சிறந்த தமிழ் படத்தை இயக்கிய இயக்குநர் என்ற முறையில் தேசிய விருதைப் பெறும் முதல் பெண்மணி என்ற பெருமையையும் பிரியா கிருஷ்ணசாமி பெற்றுள்ளார்.

இந்தப் படத்தில் ஆர்.ராஜூ, சுகுமார் சண்முகம், சு.ப.முத்துகுமார், ஜெயலட்சுமி, மற்றும் ஸ்டெல்லா கோபி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

இசை மற்றும் ஒலி வடிவமைப்பை வேத் நாயர் மேற்கொள்ள, ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறார். தருண் சர்மா ஒலி வடிவம் மற்றும் மிக்ஸிங் பொறுப்புகளை கவனித்திருக்கிறார். அடிஷனல் ஸ்க்ரீன் பிளே மற்றும் வசனங்களை எழுதியிருப்பவர் ராகவ் மிர்டாத்.

பூனா திரைப்படக் கல்லூரியில் பயின்ற பிரியா கிருஷ்ணசாமி கதை எழுதி இயக்கி படத் தொகுப்பு செய்திருப்பதுடன் ரெக்லெஸ் ரோஸஸ் என்ற தன் சொந்த நிறுவனத்தின் மூலம் ஆன்ட்ரா சொரூப் என்பவருடன் இணைந்து இந்த ‘பாரம்’ படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இன்னமும் திரையரங்களுக்கு வராமல் இருக்கும் இத்திரைப்படத்தை இயக்குநர் வெற்றி மாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலமாக தமிழகத்தில் வெளியிடவிருக்கிறார்.

priya krishnasamy

இத்திரைப்படம் குறித்து படத்தின் இயக்குநரான பிரியா கிருஷ்ணசாமி பேசும்போது, “இன்னமும் இந்தியக் கிராமப் புறங்களில் நடைபெறும் ‘தலைக் கூத்தல்’ என்ற சம்பிரதாயமான நம்பிக்கையை பற்றித்தான் இத்திரைப்படம் பேசுகிறது.

உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கிய இந்தக் கதை பரவலாகப் பலரையும் சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதைப் படமாக்க ஆரம்பித்தோம்.

‘தலைக் கூத்தல்’ என்ற பெயரில் சொந்தப் பிள்ளைகளாலேயே கொல்லப்படும் பலவீனமான முதியவர்களைப் பற்றிப் பேசும் ‘பாரம்’ படத்தில் நடித்திருக்கும் 85-க்கும் மேற்பட்டவர்களில் பலரும்  இப்போதுதான் முதல்முறையாக கேமரா முன் நிற்பவர்கள்.

Karuppasamy laughing

படமும், காட்சியமைப்புகளும் இயல்புக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு நடந்த கிராமத்திலிருந்தேதான் படத்தில் நடித்தவர்களைத் தேர்வு செய்தோம்.

2018-ம் ஆண்டின் ஆண்டு சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான விருது எங்களுடைய ‘பாரம்’ திரைப்படத்துக்குக் கிடைத்திருப்பதால், மக்களிடம் இதை கொண்டு செல்ல வேண்டும் என்ற எங்களது கனவு எளிதில் நிறைவேறவுள்ளது. இதற்ககாக நான் தேர்வுக் குழுவினருக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அனைத்து வகையான படங்களையும், அவற்றை சொல்லக் கூடிய முறைகளையும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவம்மிக்கவர்களாக இருப்பதால், நான் தமிழ்ப் பட ரசிகர்களை பெரிதும் மதிக்கிறேன்.

Veera threatens Senthil_funeral

எந்த வகைப் படமாக இருந்தாலும் சரி, அதில் நல்ல கதை இருக்கிறதா என்பதை மட்டுமே பார்க்கக் கூடிய தமிழ் ரசிகர்கள், எந்த மொழி இயக்குநருக்கும்  உகந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இயக்குநர் வெற்றி மாறனுடன் நடந்த முதல் சந்திப்பிலேயே அவர் ‘பாரம்’ படத்தை வெளியிட முன்வந்தபோது என்னுடைய நீண்ட நாள் கனவு நனவானதைப் போல்தான் இருந்தது.

ஏனென்றால், இயக்குநர் வெற்றி மாறனை நான் பல ஆண்டுகளாக மிக உன்னிப்பாக கவனித்து வருகிறேன். பலமான கதைகள், பளீர் வசனங்கள், நேர்த்தியான திரைக்கதை, அற்புதமான நடிப்பு என்று பயணிக்கும் வெற்றி மாறனின் படங்கள் என் ரசனைக்கேற்ற படைப்புகளாகும். பல நாடுகளைச் சேர்ந்த மக்களின் உணர்வுகளுக்கு ஏற்றதுபோல் வெற்றி மாறனின் அனைத்துத் திரைப்படங்களும் உருவாகியிருக்கின்றன என்பது என் கருத்து.

vetrimaran

வெற்றி மாறனின் ஆதரவு, அவர் கொடுத்த ஊக்கம்,  அவரது அறிவு மற்றும் ஆற்றலை எங்களுடன் தாராளமாக பகிர்ந்து கொண்டவிதம் ஆகியவற்றுக்காக நாங்கள் என்றென்றும் அவருக்கு நன்றியுடையவர்களாக இருப்போம்.

இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகமிருப்பினும் அவரது தொலை நோக்குப் பார்வையில் ‘பாரம்’ திரையரங்க வெளியீடு எங்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை…” என்றார்.

இந்த ‘பாரம்’ திரைப்படத்தை எஸ்,பி.சினிமாஸ் நிறுவனம் விநியோகிக்கிறது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் தமிழகம் முழுவதும் இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

Our Score