full screen background image

பரபரப்பை கிளப்பியிருக்கும் ‘பாகுபலி’யின் புதிய போஸ்டர்..!

பரபரப்பை கிளப்பியிருக்கும் ‘பாகுபலி’யின் புதிய போஸ்டர்..!

தமிழ், தெலுங்கு சினிமா துறைகளை லப்-டப் அடிக்க வைத்திருக்கும் படம் ‘பாகுபலி’. எப்போது வருமோ.. என்கிற பயத்தோடு இருக்கின்றனர் படத் தயாரிப்பாளர்கள். ஹிட்டாகுமா ஆகாதா என்கிற ஜோஸியத்திற்கே இடமில்லாமல் கூட்டமெல்லாம் அங்கே போகப் போவது உறுதி என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது தமிழ் தெலுங்கு திரையுலகம்.

தெலுங்கில் ஹிட்டுக்கு உறுதியளிக்கும் இயக்குநர்களில் முதலிடத்தில் இருக்கும் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.

இந்த மாதமே ரிலீஸாக வேண்டிய இந்தப் படம் இன்னமும் கிராபிக்ஸ் வேலைகள் மற்றும், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் வேலைகளுக்காக சற்றுத் தள்ளிப் போடப்பட்டு ஜூன் மாதத்திற்கு மாறியுள்ளது.

கடந்த மே 1-ம் தேதிதான் பாகுபலி படத்தின் முதல் போஸ்டர் வெளியாகி வித்தியாசமாக இருக்கிறதே என்கிற உணர்வை ஏற்படுத்தியது. இப்போது இன்றைக்கு மே-4-ம் தேதியன்று இந்தப் படத்தில் நடிக்கும் நடிகரான பிரபாஸ் ஏற்றிருக்கும் கேரக்டரான ஷிவுடு என்கிற பெயர் தாங்கிய அடைமொழியோடு ஒரு போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஊட்டியிருக்கிறது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு ரிலீஸாகவிருப்பதால் தமிழ் மொழிக்கான போஸ்டரும் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தமிழ் மொழிக்காக போஸ்டரில் சில வாசகங்களையும் இணைத்தே வெளியிட்டுள்ளார் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி.

baghubali-poster

“கங்கையை ஏந்திடும் சிவனை

தோளினில் ஏந்திடும் இவனை

யார் எனப் பார்த்திடும் ஞாலம்

ஒரு கணம் நின்றிடும் காலம்”

என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களின் கேரக்டர்களின் பெயருக்கு விளம்பரம் கொடுக்கும்வகையில் அடுத்தடுத்து புதிய போஸ்டர்கள் வெளியாகவிருக்கின்றன. வரும் மே 31-ம் தேதி ஹைதராபாத்தில் மிகப் பெரிய அளவில் இந்தப் படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழா நடைபெறப் போகிறது.

இரண்டு பாகமாக தயாராகிவரும் இந்தப் படம் நிச்சயம் ராஜமெளலியினால் தெலுங்கு, தமிழ் திரையுலகத்திற்கு ஒரு மிகப் பெரிய பெயரை பெற்றுத் தரப் போகிறது என்று எதிர்பார்க்கலாம்..!

Our Score