full screen background image

அயோத்தி – சினிமா விமர்சனம்

அயோத்தி – சினிமா விமர்சனம்

பிரபல தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன், இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

படத்தில் நடிகர் சசிகுமார், குக் வித் கோமாளி’ புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசை – என்.ஆர்.ரகுநந்தன், ஒளிப்பதிவு – மாதேஷ், கலை இயக்கம் – துரைராஜ், படத் தொகுப்பு – சான் லோகேஷ் நடன இயக்கம் – ஷரீப், சண்டை இயக்கம் – பிரபு, பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன், நிர்வாகத் தயாரிப்பாளர்- தினேஷ் கண்ணன், தயாரிப்பு நிர்வாகம் – செல்வம், அஷ்ரப், தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் – சக்தி ரூபிணி, ஜெயராம்.  கதை – எஸ்.ராமகிருஷ்ணன், திரைக்கதை, வசனம், இயக்கம் – மந்திரமூர்த்தி.

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வந்துள்ளன. நிறைய கதைக் களத்துடன் நமக்கு கதை சொல்லியுள்ளன. ஆனால் இப்படி‌ ஒரு கதைக் களம் இதுவரை சொல்லப்படவில்லை என்றே சொல்லலாம்.

எல்லோரும் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியதுதான் இந்தப் படம். இந்தக் கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. இந்த படத்திற்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக அமைந்துள்ளது.

அயோத்தியில் இருந்து ராமேஸ்வரம் வரும் ஒரு வட இந்திய குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள்தான் படம். அதில் மனித நேயம், மத நல்லிணக்கத்தை சொல்லி ஆச்சரியப்படுத்தியுள்ளார் இயக்குநர் மந்திர மூர்த்தி.

அயோத்தியில் வசித்து வருகிறது யஷ்பால் ஷர்மாவின் குடும்பம். மனைவி, மகள், மகனுடன் வாழ்ந்து வரும் யஷ்பால் கோபக்காரன், திமிர் பிடித்தவன், இரக்கமற்றவன். பாசம் என்கிற வார்த்தைக்கே அர்த்தம் தெரியாத மனிதன். மனைவியை அடிமையாக நடத்துபவன். மகள், மகன் மீது சிறிதும் பாசமற்றவன். இதனால், தந்தையின் மீது மிகுந்த வெறுப்போடு இருக்கிறாள் அவரது மகள். அதே நேரம் இந்து மதத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவன் யஷ்பால் சர்மா.

ஒரு நாள் குடும்பத்துடன் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்திற்கு சாமி கும்பிட‌ வருகிறார்கள் யஷ்பாலின் குடும்பத்தினர். ரயிலில் மதுரை வந்து அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு வாடகை காரில் செல்கின்றனர்.

யஷ்பாலின் மனைவிக்கு சிறையிலிருந்து சற்று விடுதலை அடைந்தது போன்ற உணர்வு. காரில், ஜன்னலோரம் அமர்ந்து காட்சிகளை ரசித்துக் கொண்டே வருகிறாள். அந்த மகிழ்ச்சியும் அவளுக்கு நீண்ட நேம் நீடிக்கவில்லை,

செல்லும் வழியில் யஷ்பால் ஷர்மாவின் அடாவடியான, நாகரிகமற்ற செய்கையினால் டிரைவருக்கும் அவனுக்கும் பிரச்னையாகி கார் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகிறது. இந்த விபத்தில் நாயகியின் அம்மா உயிரிழக்கிறார். அந்த உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், பிரேத பரிசோதனை செய்ய யஷ்பால் மறுக்கிறார்.

அந்தக் கார் டிரைவரின் நண்பன்தான் நமது நாயகன் சசிகுமார். தகவலறிந்து ஓடி வருகிறார். தீபாவளியன்று காசிக்கு செல்ல ஒரே ஒரு விமானம்தான் இருக்கிறது. எல்லா அரசு அலுவலகங்களும் விடுமுறை. இதனால் இறந்த உடலை விமானத்தில் கொண்டு செல்ல நிறைய நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் சசிகுமார் தனது நண்பர்களின் மூலம் பெரும் முயற்சி எடுக்கிறார்.

இறுதியில் அந்த உடலுக்குப் பிரேத பரிசோதனை நடந்ததா? அந்த உடல் அயோத்தி கொண்டு செல்லப்பட்டதா?.. என்பதுதான் இப்படத்தின் கதை.

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கதைக் களத்தில் ஒரு படம் வந்துள்ளது ஆச்சரியமானதுதான். தான் நடிக்கும் படத்தில் எல்லாம் நட்பு, காதல் என ஒரே ட்ராக்கில் சுற்றி, சுற்றி வந்து கொண்டிருந்த சசிகுமாருக்கு யாருமே எதிர்பாராத வேடம் கிடைத்துள்ளது. இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்காக முதலில் அவருக்கு நமது வாழ்த்துகள்.

நாயகி ப்ரியா அஸ்ராணி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அம்மாவிடம் பாசமாக உருகுவதாகட்டும், தந்தையிடம் வெடித்து தனது கோபத்தை வெளிப்படுத்துவதாகட்டும் அசத்தியுள்ளார். யஷ்பால் கேரக்டரில் நடித்தவர் தன் மீது கோபத்தை வரவழைக்கும் அளவிற்கு மிக இயல்பாக நடித்துள்ளார்.

சசிகுமாரின் நண்பராக புகழ். காமெடி செய்யாமல் குணச்சித்திர வேடத்தில் நன்றாக நடித்துள்ளார். ஆனாலும் சில சினிமாத்தனமான காட்சிகள் இருக்கின்றன. இருந்தும் அவைகளால் பெரிய பிரச்சினையும் இல்லை.

மகேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவும் காட்சியை நிறைவாகத்தான் செய்துள்ளது. என்.ஆர்.ரகுநந்தனின் இசை சில இடங்களில் பரவாயில்லை. போலீஸ் ஸ்டேஷனில் வரும் பாட்டும் தேவையில்லாததுதான். முதல் சண்டைக் காட்சியும் அனாவசியம்தான்.

இந்தியா முழுமைக்கும் தற்போது மத அடையாளங்களுடன் கூடிய சர்ச்சைகளும், மதத் தீவிரவாதமும் மலிந்துவிட்ட நிலையில் இது போன்று மனிதத்தைப் போதிக்கும் கதைகள் நிறையவே வர வேண்டும். இக்காலக்கட்டத்திற்குத் தேவையான இந்தக் கதையை எழுதியிருக்கும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நமது பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.

கிளைமாக்ஸ் காட்சியில் சசிகுமார் உதிர்க்கும் அந்த ஒற்றை வார்த்தைதான் படத்தின்‌ மதிப்பை வேறு தளத்திற்கு கொண்டு சென்றுவிட்டது. மனித நேயம் மற்றும் மத நல்லிணக்கத்தை இதைவிட வேறு எப்படியும் சொல்லிவிட முடியாது.

இயக்குநர் மந்திர மூர்த்தி நிச்சயமாக தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இயக்குநராக வலம் வருவார் என்று நம்பலாம். 

கட்டாயம் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டிய படம் இது.

RATING : 4.5 / 5

Our Score