தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு ட்ரெண்ட் படங்கள் வரும். ஆக்ஷன் படங்கள் வெற்றி பெற்றால் வரிசையாக ஆக்ஷன் படங்கள் வரும். காதல் படங்கள் என்றால் வரிசையாக காதல் படங்கள் எடுத்து தள்ளுவார்கள்.
இப்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை பற்றி வரிசையாக படங்களை எடுத்து தள்ளுகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் இந்த அரியவன். ஆனால், தற்போதைய சமூகத்திற்கு தேவையான ஒரு படமாக வந்துள்ளது.
அறிமுக நடிகர் ஈஷான் நாயகனாக நடித்துள்ளார். ப்ரணாலி நாயகியாக நடித்துள்ளார். மேலும் டேனியல் பாலாஜி, ரமா, சுப்ரமணி, சத்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதைப்படி நாயகன் ஈஷான் கபடி விளையாட்டு வீரர். இவரும் நடிகை ப்ரணாலியும் காதலித்து வருகின்றனர். அனாதை ஆசிரமத்தில் வாழ்ந்து வந்த நாயகி தனது தோழியுடன் வசித்து வருகிறார்.
பெண்களை காதலிப்பது போல் காதலித்து ஏமாற்றும் கும்பல் ஒன்று இளம் பெண்களை காதலித்து ஏமாற்றி அவர்களை பாலியல் தொழிலில் இறக்கி விடுகின்றனர். அவர்களது தலைவன் டேனியல் பாலாஜி.
நாயகியின் தோழியும் இந்த கும்பலில் சிக்கிவிட தற்கொலைக்கு முயல்கிறார். அவரை காப்பாற்றும் நாயகி நாயகனிடம் தெரிவிக்க அவர்களுக்கு உதவ முன் வருகிறார். இறுதியில் வில்லன் கும்பல் பிடிபட்டதா? சிக்கிய இளம் பெண்களின் நிலை என்ன என்பதே இப்படம்.
புதுமுகம் ஈஷான் படத்திற்காக கடின உழைப்பை கொடுத்து இருக்கிறார். சண்டை காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். கபடி, காதல், ஆக்ஷன், சென்டிமென்ட் என அனைத்திலும் தன்னால் முடிந்த அளவு நடிப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளார்.
சில இடங்களில் இறுக்கமான முகபாவனைகள் இருந்தாலும் ஓரளவுக்கு நியாயம் சேர்த்துள்ளார். இவரது உயரமும், கலரும் விஷாலை நியாபகப்படுத்துகிறது. நல்ல இயக்குநர்கள் கையில் கிடைத்தால் நல்ல ஆக்ஷன் ஹீரோவாக மாறலாம். பாக்யராஜ் சொன்னதுபோல இவரது கண்களில் ஒரு பவர் தெரிகிறது. நன்றாக நடனமும் ஆடுகிறார். நாயகன் தனக்கான நிறைய காட்சிகள் வைக்காமல் மற்றவர்களுக்கும் வழிவிட்டு நடித்திருப்பது நன்று.
நாயகி ப்ரணாலி பார்ப்பதற்கு பூனம் பாஜ்வா போல இருக்கிறார். தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரது சின்ன சின்ன முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது.
கொடூர வில்லன் என்றால் டேனியல் பாலாஜிதான் என்றாகிவிட்டது. இளம் பெண்களை காதல் வயப்படுத்தி சீரழிக்கும் கும்பலின் தலைவனாக மிரட்டுகிறார். நாயகனால் தனது தம்பி கொலை செய்யப்பட நாயகனை வெறி கொண்டு துரத்தும் இடங்களில் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். உடன் நடித்தவர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரிநந்த் ஆகியோரின் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கிறது. பின்னணி இசை ஓகே. விஷ்ணுவின் ஒளிப்பதிவு நன்று.
வழக்கமான கதையை, வித்தியாசமான திரைக்கதை கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் மித்ரன் ஜவகர். கதாபாத்திரங்கள், காட்சி அமைப்புகளில் வித்தியாசப்படுத்தி, விறுவிறுப்பாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை வைத்தே வில்லனை அழிக்கும் வகையில் திரைக்கதை எழுதியிருப்பதும் சிறப்பான உத்தி.
“உங்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் வானத்தில் இருந்து யாரும் குதித்து வந்து காப்பாற்ற மாட்டார்கள். நீங்கள்தான் உங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்ற கருத்தைதான் இத்திரைப்படம் முன் வைத்துள்ளது.
அதுபோல் உங்களை யாராவது வீடியோ எடுத்து மிரட்டினால் அதனை பார்த்து பயந்து நடுங்காமல், அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்றும் சொல்லியுள்ளார்கள்.
இப்போது எல்லோர் கையிலும் கேமரா மொபைலும் சமூக வலைத்தளங்களும் பெருகிவிட்ட நிலையில் இப்படிப்பட்ட அறிவுரை நமது இளைய தலைமுறையினருக்கு குறிப்பாக பெண்களுக்கு அவசியம் தேவைதான்.
ஒரு வீடியோவை கையில் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறான் என்பதற்காக அப்பாவி இளம் பெண்கள் பயந்துபோய் தங்களது வாழ்க்கையையே அழித்துக் கொள்ளும் முடிவை எடுப்பதற்கு பதில், துணிந்து எதிர்த்து நின்று போடா மயிரு என்று சொல்லிவிட்டு போய்க் கொண்டேயிருந்தால், நிச்சயமாக நம் வாழ்க்கையை நாமே பாதுகாத்துக் கொள்ளலாம்.
கிளைமாக்ஸில் நாயகன் ஈஷான் சொல்லும் இந்த அறிவுரையை ஏற்று, அடுத்த காட்சியில் நடக்கும் பிரஸ் மீட்டிலேயே அதைச் சொல்லிவிட்டு தைரியமாகச் செல்லும் பெண்களை திரையில் பார்க்கும்போது, நிஜத்தில் ஒவ்வொரு பெண்களுக்கும் இது தைரியத்தைக் கொடுக்கும் என்பதை மறுக்க முடியாது.
இது போன்று நிறைய படங்கள் வந்திருந்தாலும் இந்தத் தீர்வினை சொன்ன விதத்தில் தனித்து நிற்கிறான் இந்த ‘அரியவன்’.
RATING : 3.5 / 5