full screen background image

ஐங்கரன் – சினிமா விமர்சனம்

ஐங்கரன் – சினிமா விமர்சனம்

காமன்மேன் பிரசன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி.கணேஷ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.  

இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ‘ஆடுகளம்’ நரேன், ஹரீஷ் பெராடி, மாரிமுத்து, ரவீந்திரன் ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஔிப்பதிவு – சரவணன் அபிமன்யு, இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், படத் தொகுப்பு – A.M.ராஜா முகமது, கலை இயக்கம் – G.துரைராஜ், பாடல்கள் – ஏகதாசி, மதன் கார்க்கி, ரோகேஷ், சிவசங்கர், விவேக், நடன இயக்கம் – ராஜு சுந்தரம், ஷோபி, சண்டை இயக்கம் – ராஜசேகர், மக்கள் தொடர்பு – கோபிநாதன். 

‘ஈட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

நாமக்கல்லில் தனது போலீஸ் ஏட்டுவான அப்பா மற்றும் அம்மாவோடு குடியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். மெக்கானிக்கல் என்ஜீனியரிங் படித்து முடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டவராக இருக்கிறார்.

ஒரே நேரத்தில் 20 குடங்களை வைத்து தண்ணீர் பிடிப்பது போன்ற வட்ட வடிவிலான குழாய், சைக்கிள் பெடலை வைத்து கிரைண்டரை இயக்குவது.. டூயல் பேன் என்று விதம்விதமாக இவர் கண்டுபிடித்துக் கொடுத்தாலும் அரசாங்கத்தின் அறிவுசார் சொத்துரிமை நிறுவனம் இவரது எந்தக் கண்டுபிடிப்பையும் ஏற்காமல் உதாசீனப்படுத்துகிறது.

இந்த நேரத்தில் பேருந்தில் இவருடன் சண்டையிட்டு ஏமாற்றும் மஹிமா நம்பியாருடன் காதல் பிறந்து அந்தக் காதல் ஒரு பக்கம் ஓடுகிறது.

அதே நேரம் இன்னொரு பக்கம் வட இந்தியாவில் இருந்து பலே கொள்ளையர்கள் தமிழகத்திற்குள் நுழைகிறார்கள்.

கோவை, மதுரை, திருச்சி, சென்னை என்ற மிகப் பெரிய நகரங்களில் இருக்கும் நகைக் கடைகளில் நகைகளைக் கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டுகிறார்கள். இதில் கோவை நகைக்கடை கொள்ளை மிகச் சரியாக அரங்கேறுகிறது.

இதைத் தொடர்ந்து மதுரை நகைக்கடையிலும் கொள்ளையடிக்கிறார்கள். பின்பு எல்லா வழிகளிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருப்பதால் எப்படி வெளியேறுவது என்று யோசித்தவர்கள் கரூர், நாமக்கல், சேலம் வழியே பெங்களூர் செல்ல முடிவெடுக்கிறார்கள்.

இவர்கள் நாமக்கல் அருகே நடு இரவில் வரும் வழியில் போலீஸ் குறுக்கிட.. நகைகள் இருக்கும் பைகளை வெளியில் தூக்கி எறிகிறார்கள். அந்தப் பை கிணறுக்காக வெட்டப்பட்டிருந்த ஆழ் துளைக்குள் சென்று விழுகிறது.

இந்த இரவில் அதை தன் குரூப்பினரை வைத்து எடுப்பது சாத்தியமில்லை என்று யோசிக்கும்போது ஒரு சிறு குழந்தை அந்தக் குழிக்குள் விழுகிறது.

உடனேயே இவர்களே கத்திக் கூப்பாடு போட்டு கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். விடிவதற்குள் போலீஸ், தீயணைப்புப் படை என்று மொத்த அரசு நிர்வாகமும் அங்கே வந்துவிட குழந்தையைக்  காப்பாற்றும் முயற்சிகள் நடக்கின்றன.

இனிமேல் நடப்பது என்ன..? இதில் ஜி.வி.பிரகாஷின் பங்களிப்பு என்ன..? அந்தக் குழந்தையை மீட்டார்களா..? நகைகள் என்னவாயின..? என்பதெல்லாம் இந்தப் படத்தின் இரண்டாம் பாதியின் திரைக்கதையாகும்.

ஜி.வி.பிரகாஷ் சமீபமாக தனக்குத் தோதான கதைகளில்தான் நடித்து வருகிறார். தன் உருவத்திற்கும், நடிப்புக்கும் ஏற்ற வகையில் ‘செல்பி’ போன்ற படங்களைத் தேர்வு செய்தவர் அந்த வரிசையில் இந்தப் படத்தையும் தேர்வு செய்திருக்கிறார். சரியான தேர்வுதான்.

ஆனால் மிகையான நடிப்புக்குத்தான் இதில் இடமே இல்லை. காளி வெங்கட்டை ஏமாற்றுவது.. துப்பறிவது.. அரசு அலுவலகத்தில் பாவமாய் இருப்பது.. அப்பாவிடம் கோபமாய் பேசுவது.. கலெக்டரிடமும், எஸ்.பி.யிடமும் கெஞ்சுவது என்று பல்வேறு வகையான காட்சிகளுக்கேற்ப தனது நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

நாயகியான மஹிமா நம்பியாருக்கு பெரிய ரோல் இல்லை. ஆனால் இருந்த காட்சிகளில் நம்மைக் கவர்கிறார். ஹரீஷ் பெராடியின் வில்லத்தனம்தான் ரசிக்க வைக்கிறது. மனிதரின் புருவம்கூட நடிக்கிறது. சிறப்பான நடிப்புதான். ‘ஆடுகளம்’ நரேன் தனது நேர்மையான குணத்தை நடிப்பில் காட்டியிருக்கிறார். காளி வெங்கட் தனது பரிதாப நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

கொள்ளையர்களில் கூட்டத்தில் கடைசி தத்தியாக இருப்பவன் கவனிக்க வைத்திருக்கிறான். மற்றவர்கள் வழக்கம்போல இயக்குநர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார்கள்.

நாமக்கல் நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தை இன்னும் அழகாகக் காட்டியிருக்கலாம். ஆனால், காட்சியமைப்புகள் அதுபோல் இல்லை என்பதால் ஒளிப்பதிவாளரின் பணி சற்று மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது. குழந்தையை மீட்கும் பணிகூட இரவிலேயே நடைபெறுவதால் அந்த விளக்குகளின் வெளிச்ச எல்லைக்குள்ளேயே படத்தைக் காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஜி.வி.யின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். குழந்தை மீட்பு நேரத்தில் திரையில் இருந்த பதட்டத்தை பார்வையாளர்களுக்கும் கொடுக்கிறது பின்னணி இசை.

கலை இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள். நகைக் கடை கொள்ளைகளில் சிறப்பாக செட்டுக்களை அமைத்திருக்கிறார்கள். அதேபோல் குழந்தை மீட்பு காட்சிகளிலும் கலை துறையின் பணி சிறப்புதான்.

இந்தப் படத்தில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று ஒரு இளைஞன் கண்டறிந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு அரசுகள் அங்கீகாரம் தராமல் அலட்சியம் காட்டுவது.. இன்னொன்று இந்தக் காலத்திலும் ஆழமான துளைகளில் விழும் குழந்தைகளை மீட்க எந்தவொரு புதிய கருவியும் நம்மிடம் இல்லாதது. இந்த இரண்டையும் ரயில் தண்டவாளம்போல ஒன்றாக, அழகாக இணைத்திருக்கிறார் இயக்குநர் ரவி அரசு.

எப்படியும் குழந்தையை மீட்கத்தான் போகிறார்கள் என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும் அந்த நகைகள் என்னவாகும் என்ற கேள்வியை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தது பாராட்டுக்குரியது. அதேபோல் போலீஸ்-கொள்ளையர்கள் கூட்டணி பற்றிய திரைக்கதையும் கடைசியில் வெளிவருவது எதிர்பாராத டிவிஸ்ட்.

படத்தின் பின் பாதியில் இருந்த வேகத்தை படத்தின் முன் பாதியிலும் வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

இந்த ‘ஐங்கரன்’ நிச்சயம் நம்மை சோதிக்கவில்லை. மாறாக அருள் பாலிக்கிறான் என்பதுதான் உண்மை.

RATING : 3.5 / 5

Our Score