திரையுலகில் பல சாதனைகளைப் படைத்து இப்போது தனது முழு கவனத்தையும் சின்னத்திரை பக்கம் செலுத்தியிருக்கும் ஏவி.எம். புரொடெக்சன்ஸ் நிறுவனம் அடுத்து மீண்டும் தனது தொலைக்காட்சி தொடரை கலைஞர் தொலைக்காட்சியில் துவங்கவிருக்கிறது.
‘மோகினி’ என்ற இந்தத் தொடர்… வழக்கமான நெடுந்தொடராக இல்லாமல், நெகட்டிவ் கதாபாத்திரங்கள் அல்லாமல், மாமியார்-மருமகள் சண்டை சச்சரவுகள் இல்லாமல்.. அழுது வடியும் கதாபாத்திரங்களே இல்லாமல்… முற்றிலும் புதுமையாக.. புதிய கண்ணோட்டத்தில்.. நகைச்சுவை காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து.. சஸ்பென்ஸ், திரில்லர், குடும்பப் பாசம், திகைப்பு, வியப்பு என்று ரசனையின் அனைத்துவித வடிவங்களுக்கும் வேலை கொடுக்கும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்தொடரில் ராஜா, சிவரஞ்சனி, பெரோஸ்கான், ஸ்ரீபிரியா, சரத்குமார், சுஜாதா, சஞ்சய் குமார், யமுனா என்று தற்போதைய சின்னத்திரை உலகத்தின் முக்கிய நடிகர், நடிகைகள் பலரும் நடிக்கவிருக்கிறார்கள்.
ரமணி பரத்வாஜின் இசைக்கு ஏவி.எம்.மின் ஆஸ்தான கவிஞர் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து டைட்டில் பாடல் எழுதியுள்ளார். இதனை ‘பாடும் நிலா’ எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். விநாயகமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
“ஒவ்வொரு வாரமும் அடுத்தது என்ன என்று ரசிகர்களை ஒரு கணம் நினைக்க வைக்கும் அளவுக்கு, இத்தொடரின் திரைக்கதை மிக சுவாரஸ்யமாக எழுதப்பட்டுள்ளது. இத்தொடரின் ஹீரோயின் மோகினியின் கதாபாத்திரத்தை வேறு எங்குமே நீங்கள் சந்தித்திருக்க முடியாது என்று உறுதியாகச் சொல்கிறார்…” இத்தொடரின் கதை, திரைக்கதை, வசனகர்த்தாவான ‘கலைமாமணி’ சேக்கிழார்.
“அம்மா-அப்பாவின் பாசமான வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு தனது காதலனை கைவிட்டுவிட்டு காதலனின் நண்பனை கரம் பிடிக்கிறாள் ஹீரோயின் மோகினி. அவர்களின் முதல் இரவில் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடந்துவிடுகிறது.. அதுதான் இந்தக் கதையின் அச்சாணி.. அது நிச்சயம் டிவி நேயர்கள் ஊகிக்க முடியாத ஒரு விஷயம்…” என்கிறார் கதாசிரியர் சேக்கிழார்.
“இதன் பிறகு மோகினியின் புகுந்த வீட்டில் நடக்கும் மாற்றங்கள்தான் தொடரின் வேகத்தை கூட்டப் போகிறது.. அந்த சம்பவங்கள் அனைத்துமே அன்றாடம் நமது வீடுகளில் நடப்பதுதான். நம்மையறியாமலேயே நாம் இதையெல்லாம் கடந்து செல்கிறோமோ என்று வீட்டில் இருப்பவர்களையே ஒரு நிமிடம் யோசிக்க வைக்கப் போகிறது இத்தொடரின் திரைக்கதை. அடுத்த்து என்ன என்ற எதிர்பார்ப்புடன் மோகினியில் இருக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களை நிச்சயம் வியக்க வைப்பார்கள்.. சந்தோஷப்பட வைப்பார்கள்.. ஏவி.எம். நிறுவனத்திற்கு மேலும் ஒரு வெற்றியை இத்தொடர் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை…” என்கிறார் இயக்குநர் ஆர்.கே.பி.
கலைஞர் டிவியில் மிக விரைவில் இரவு 7.30 முதல் 8 மணிவரை ஒளிபரப்பாகவிருக்கும் இத்தொடரை ஏவி.எம். புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் எம்.சரவணன், எம்.எஸ்.குகன், அருணா குகன், அபர்ணா குகன் ஆகியோர் தயாரித்திருக்கின்றனர்.