இந்திய சினிமாவில் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக பல தொழில்களை செய்து வரும் நிறுவனம் ஏ.வி.எம். ஏவி.எம். மெய்யப்பச் செட்டியாரில் துவங்கி, ஏவி.எம். சரவணன், பிறகு அவரது வாரிசு எம்.எஸ். குகன் என்று வளர்ந்துள்ள இவர்களது நிறுவனம் இப்போது நான்காவது தலைமுறையையும் எட்டியுள்ளது. 1934–ல் துவங்கி கடந்த 80 வருடங்களில் 176 படங்களை இந்த நிறுவனம் தயாரித்து இருக்கிறது.
தற்போது ஏவி.எம். நிறுவனத்தில் இணை தயாரிப்பாளர்களாக உள்ள அபர்ணா குகன், அருணா குகன் இருவரும் சேர்ந்து ‘இதுவும் கடந்து போகும்’ என்ற படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். இத்திரைப்படம் 55 நிமிடங்கள் மட்டுமே ஓடக் கூடியது.
இதில் சிவாஜிதேவ், ரவி ராகவேந்தர், பெர்கின் ஜான்ஸ், ஷில்பா பட், அனுஷாவர்மா, அஞ்சலி உபாசனா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். உமா ஷங்கர் இசையமைத்து இருக்கிறார். சலீம் பிலால் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை, வசனத்தை ஸ்ரீஹரி பிராபகரன் எழுத, அனில் கிருஷ்ணன், ஸ்ரீஹரி பிரபாகரன் ஆகிய இருவரும் இணைந்து டைரக்டு செய்திருக்கிறார்கள்.
இத்திரைப்படம் முதலில் ‘கசப்பு இனிப்பு’ என்ற பெயரில் குறும்படமாக எடுக்கப்பட்டிருந்தது. அதனை யூ-டூயூப்பில் பார்த்த அபர்ணா, அருணா டீம் இதனை தங்களது ஏவி.எம். நிறுவனத்திற்காக பெரிய திரையில் எடுத்துத் தரும்படி இதன் இயக்குநர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அதன்படியே அந்த குறும்படத்தின் தரம் குறையாமல்.. இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் தற்போது ஸ்பெயின் தலைநகரம் மாட்ரிட் நகரில் இந்தாண்டு நடக்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது ஏவி.எம்.முக்குக் கிடைத்துள்ள பெருமை . மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் சலீம் பிலால் மற்றும் காஸ்ட்யூம் டிஸைனர் அருணா குகன் இருவரும் விருதுக்கான போட்டியிலும் இடம் பிடித்திருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு..! இவர்கள் விருதுகளை பெற வாழ்த்துகிறோம்..!
ஏவி.எம்.மின் எந்தத் தயாரிப்பும் சோடை போகாது.. தரமில்லாமல் எதிலும் இறங்க மாட்டார்கள்.. பெருமையடையாத எந்தச் செயலையும் செய்ய மாட்டார்கள் என்பதற்கு இந்த சின்ன படத்தின் தயாரிப்பே உதாரணமாகியிருக்கிறது. இப்படியொரு சின்ன படத்தைத் தயாரிக்கிறார்கள் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன்பு வெளியானவுடன்.. “ஏவி.எம்.முக்கு என்னாச்சு..?” என்று கேட்டவர்கள்தான் அதிகம்..! ஆனால் தற்போதைய புதிய தலைமுறை ஏவி.எம்.மை வேறொரு பாதைக்கு அழைத்துச் செல்லப் போவது, இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது..
ஏவி.எம். நிறுவனத்திற்கு எமது வாழ்த்துகள்..!











