full screen background image

அவதார வேட்டை – சினிமா விமர்சனம்

அவதார வேட்டை – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தில் ஹீரோவாக V.R.விநாயக் நடித்துள்ளார். அவரின் காதலியாக மீரா நாயர் நடித்திருக்கிறார். ராதாரவி, பவர்ஸ்டார் சீனிவாசன், ரியாஸ்கான், சோனா ‘மகாநதி’ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, இயக்கம் – ஸ்டார் குஞ்சுமோன், வசனம் – சரவணன், ஔிப்பதிவு – A.காசி விஷ்வா, இசை – மைக்கேல், படத் தொகுப்பு – கேசவன் சாரி, பாடல்கள் – V.B.காவியன், நடனம் – அசோக் ராஜா, ராதிகா,  சண்டை இயக்கம் – S.R.முருகன், கலை இயக்கம் – பத்து, நிர்வாக தயாரிப்பு – கந்தவேல், தயாரிப்பு – ஸ்டார் குஞ்சுமோன்.

குழந்தை கடத்தல், உடல் உறுப்புகள் திருட்டை துப்பறிந்து கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியின் கதைதான் இந்த ‘அவதார வேட்டை’ திரைப்படம்.

படத்தின் துவக்கத்தில் குழந்தைகளைத் திருடும் திருடர்கள் திருடர்கள் இதற்காக எப்படி திட்டம் போடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறார்கள். ஒரு வீட்டில் எத்தனை குழந்தைகள் இருக்கிறார்கள்? வீட்டில் இருப்பது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதை தெரிந்து கொள்ள ஒரு குறியீடு வைத்து குழந்தையை திருடுகிறார்கள்.

இப்படி திட்டம் போட்டு குழந்தைகளை திருடும் திருடர்களை ஹீரோ எப்படி கண்டு பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதையாம்.

இப்படி சொல்லித்தான் படத்திற்கு விளம்பரப்படுத்தினார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா, பத்திரிகையாளர் சந்திப்புகளில் படத்தில் நடித்த அத்தனை நட்சத்திரங்களும் ஒன்று திரண்டு அப்படி, இப்படி என்றார்கள்.

ஆனால் படத்தில் பார்த்தால்…

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் குழந்தைகள் கடத்தப்படுகின்றன. அவைகளில் சில குழந்தைகளை பிச்சைக்காரர்களே கடத்துகிறார்கள். இவர்கள் இல்லாமல் இன்னொரு டீஸண்ட்டான கூட்டமும் குழந்தைகளை களவாடிக் கொண்டிருக்கிறது. இவர்களுடைய நோக்கம் குழந்தைகளின் உடல் உறுப்புகளை திருடுவதுதானாம்.

இதனை கண்டுபிடிக்க காவல்துறை சார்பில் சிறப்பு குழு ஒன்று உருவாக்கப்படுகிறது. இது அப்படியே நிற்க..

நாயகன் விநாயக் ஒரு ஊரின் போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டராக பதவியேற்கு வருகிறார். வந்த இடத்தில் அந்த ஊரின் பெரிய மனிதரான ராதாரவியிடம் மோதுகிறார்.

ராதாரவி மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, குவாரி கொள்ளை என்று அனைத்தையும் செய்பவர். அவரிடத்தில் “50 லட்சம் ரூபாயைக் கொடுத்தால் நீங்கள் தைரியமாக தொழில் செய்யலாம்…” என்று சொல்லி தைரியமாக லஞ்சம் கேட்கிறார் விநாயக்.

இப்போது கொடுத்துவிட்டு வாங்க வேண்டிய முறையில் வாங்கிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போடும் ராதாரவி பணத்தைக் கொடுக்கிறார். ஆனால் பணத்தை வாங்கிய கையோடு ஊரைவிட்டே எஸ்கேப்பாகுகிறார் விநாயக்.

என்னடா என்று பார்த்தால் அவர் போலீஸ் இன்ஸ்பெக்டரே இல்லையாம்.. வேறு ஒரு இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்க வந்த நேரத்தில் அவரைத் தாக்கி மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு இவர் வந்து பொறுப்பேற்றுவிட்டாராம்.

‘ஐயோடா சாமி’ என்று நாம் யோசித்து முடிப்பதற்குள்ளாக பக்கத்து ஊரில் புகுந்து தன் வேலையைக் காட்டுகிறார் ஹீரோ விநாயக். அங்கே தனிக்காட்டு ராணியாக வாழ்ந்து வரும் சோனாவிடம் நல்ல பெயர் எடுத்து அவரிடத்தில் வேலைக்கு சேர்கிறார்.

அதே ஊரில் எஸ்.ஐ.யாக இருக்கும் நாயகி மீரா நாயருக்கு ராதாரவி தான் விநாயக்கிடம் ஏமாந்தது குறித்து சொல்லி அவனைக் கண்டால் உடனே தன்னிடம் சொல்லும்படி சொல்கிறார். நாயகி மீராவும் விநாயக்கை பின் தொடர்ந்தவர் அப்படியே அவருடன் காதலிலும் விழுகிறார்.

இந்தக் காதல் நடந்து கொண்டிருக்க அதே நேரம் நோய்வாய்ப்பட்டிருக்கும் சோனாவின் பையனின் மருத்துவத்துக்கு மந்திரவாதியை அழைத்து வந்து மந்திரம் செய்து சரி செய்வதாக சோனாவிடம்  சொல்கிறார் விநாயக். மந்திரவாதியாக அவரேதான் வருகிறார் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இங்கேயும் சோனாவின் மொத்தச் சொத்தையும் அள்ளிக் கொண்டு வெளியேறுகிறார் விநாயக்.

ராதாரவியும், சோனாவும் இவரை வலைவீசித் தேட இப்போதுதான் ஒரு புதிய டிவிஸ்ட். குழந்தைகள் கடத்தல், உடல் உறுப்புகள் கடத்தல் தொழிலைச் செய்து வரும் கும்பலைப் பிடிக்க போலீஸ் மேலிடம் நியமித்திருக்கும் போலீஸ் படையில் விநாயக்கும் ஒரு அதிகாரியாம்.

பின்பு ஏன் அவர் ராதாரவி மற்றும் சோனாவிடம் பணத்தைக் கொள்ளையடித்தார்..? மீரா நாயர் விநாயக்கை விலங்கு போட்டுப் பிடித்தாரா..? அல்லது கை பிடித்தாரா..? குழந்தைக் கடத்தலை போலீசார் கண்டுபிடித்தார்களா…? அதன் பின்னணியில் என்ன நடந்தது…? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் ஹீரோவாகிவிடலாம் என்கிற தப்புக் கணக்கில்தான் இந்தப் படத்தில் ஹீரோ விநாயக் நடித்திருக்கிறார் போலும்.

காட்சிக்குக் காட்சி அதிரடி ஹீரோ போல திரைக்கதை அமைத்தும், காட்சிகளின் கோணங்களை அமைத்தும், பன்ச் வசனங்களை பேசியும் இருந்தாலும் கொஞ்சம் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதைத் தவிர மீதமெல்லாம் செய்திருப்பதால் இவரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

இதுவரையிலும் எந்தவொரு கவன ஈர்ப்பைக்கூட செய்திருக்காத விநாயக்கின் இந்த சீன் போடும் காட்சிகள் ரொம்பவே ஓவர். நீங்க என்ன வேண்ணாலும் நினைச்சுக்குங்கடா என்று நினைத்து தைரியமாக படத்தில் ஹீரோயிஸத்தைக் கொட்டியிருக்கிறார் விநாயக்.

வரும் அனைத்துக் காட்சிகளிலும் ஒரே பாணியில் முகத்தையும், முறைப்பையும் காட்டுவதை மாற்றிக் கொண்டு நடிப்பில் ஏதாவது வித்தியாசம் காட்ட கற்றுக் கொள்வது விநாயக்கிற்கு அடுத்தடுத்த படங்களில் உதவும்.

கதாநாயகி மீரா நாயர் டப்பிங் துணையோடு கொஞ்சம், கொஞ்சம் பேசியிருக்கிறார். ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். ஆனால் நடிப்பு..? பவர் ஸ்டார் சீனிவாசன் விநாயக்கின் தோஸ்த்தாக தோள் கொடுத்திருக்கிறார். பார்த்தாலே நமக்கு எரிச்சலூட்டும் அளவுக்கு நடித்திருக்கிறார் அண்ணன் சீனிவாசன்.

ராதாரவியின் வழக்கமான வில்லத்தனம் பளிச்சிடுகிறது. ஒரு காலத்தில் கவர்ச்சி, காமெடி என்று தமிழ்ச் சினிமாவில் சுற்றிக் கொண்டிருந்த சோனாம் இந்தப் படத்தில் வில்லியாக நடித்திருக்கிறார். படத்தில் நடிப்பு என்று சொல்லும் அளவுக்கு நடித்திருப்பது இவர்கள் இரண்டு பேர்தான்.

இந்தப் படத்திற்காக கேரளாவின் முன்னணி வில்லன் நடிகரான பீமன் ரகுவை இறக்குமதி செய்திருக்கிறார்கள். இரண்டே, இரண்டு காட்சிகளில் போலீஸ் உயரதிகாரியாக நடித்திருக்கிறார். அவ்வளவுதான். இதற்கே படத்தின் 2 முக்கிய விழாக்களுக்காகவும் சென்னைவரை வந்து சென்றுள்ளார் அவர். அவருக்கு நமது பாராட்டுக்கள்..!

இதில் ஒளிப்பதிவு, இசை என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்லும்படியான நிலைமையும் படத்தில் இல்லை.  

குழந்தைகள் கடத்தல், உடல் உறுப்புகள் திருட்டு போன்றவற்றை பற்றிப் பேசும் படம் என்று சொல்லிவிட்டு அதற்கு போதிய முக்கியத்துவமே தராமல் நாயகனின் அலட்டல்களுக்கும், அட்டாகாசங்களுக்கும் அதிக காட்சிகளைக் கொடுத்து படத்தை சிதறடித்திருக்கிறார் இயக்குநர்.

லாஜிக்கே இல்லாத கதை,  புதுமையில்லாத திரைக்கதை, பல காட்சிகளில் குழப்பமான திரைக்கதையை வைத்திருக்கிறார்கள். ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாத வகையில்தான் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். இதனுடன் பரிதாபமான இயக்கமும் சேர்ந்து கொள்ள படத்தை ஒரு வழியாக்கிவிட்டார்கள்.

நாயகன் விநாயக் அடுத்தப் படத்தில் நடிக்காமல் வேறு திறமையான, கலைஞர்களை வைத்து தயாரிப்பாளராக மட்டுமே உருவெடுத்தால்கூட நிச்சயம் அது அவருக்குப் பெருமையளிக்கும்..!

Our Score