full screen background image

பொது நலன் கருதி – சினிமா விமர்சனம்

பொது நலன் கருதி – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை AVR Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித் மூவரும் நாயகர்களாக நடித்திருக்கின்றனர். சுபிக்சா, அனு சித்தாரா, லிசா மூவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும், இமான் அண்ணாச்சி, ‘பில்லா’ பட வில்லன் யோக் ஜோபி, ‘வழக்கு எண்’ முத்துராமன், ‘சுப்ரமணியபுரம்’ ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை – ஹரி கணேஷ், ஒளிப்பதிவு – சுவாமிநாதன், கலை இயக்கம் – கோபி ஆனந்த், இணை தயாரிப்பு – விஜய் ஆனந்த், எழுத்து, இயக்கம் – சீயோன்.

ஒரு ஆண்டுக்கு முன்பாக பாளையங்கோட்டை கலெக்டர் அலுவலகம் முன்பு இசக்கிமுத்து-சுப்புலட்சுமி தம்பதிகள் கந்து வட்டி கொடுமையால் தங்களது குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தின் பாதிப்பில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

பணம் படைத்த பலரும், பணற்றவர்களிடம் செலுத்தும் அதிகாரமே கந்து வட்டி பிரச்சினை. இந்த கந்து வட்டியால் பல குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றன. பல குடும்பங்கள் திக்கற்று திசை தெரியாமல் எப்படி வீழ்த்தப்படுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

பணக்கார வர்க்கத்துக்கும், நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்துக்கும் இடையே நடக்கும் பிரச்சினைகள்தான் இந்தப் படத்தின் கதைக் கரு.

சூழ்நிலை கைதிகளாய் மாறி தங்களது வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிற்கும் சில அப்பாவி இளைஞர்களின் கதைதான் இத்திரைப்படம்.

இல்லாதவனே பொல்லாதவனாம் ஊரிலே என்று சொல்வதுபோல சகல துறைகளிலும் பந்தாடப்படும் நடுத்தர வர்க்கம், எதையாவது செய்து முன்னுக்கு வர முடியாதா.. என்று துடிக்கும் இளைஞர்கள் பலர் எதையும் செய்யத் துணியும் ஆக்டோபஸ் பண முதலைகளிடத்தில் சிக்கி தங்களது வாழ்க்கை சின்னாபின்னமாக்கிக் கொள்வதுதான் படத்தின் திரைக்கதை.

நெல்லை சீமையில் இருந்து சென்னைக்கு பிழைப்புக்காக ஓடி வந்தவன் உக்கிரமூர்த்தி என்னும் யோக் ஜேபி. அதேபோல் குஜராத்தில் இருந்து சென்னைக்கு பிழைப்புக்காக ஓடி வந்தவன் பாபு. இருவரும் இள வயதில் சென்னையில் அடியெடுத்து வைத்து, இப்போது மத்திம வயதைக் கடந்து ஒரு கந்து வட்டி தாதாக்களாக உருவெடுத்துள்ளனர்.

இதில் உக்கிரமூர்த்தி சென்னையின் உட்புறமும், பாபு சென்னைக்கு வெளிப்புறமுமாக தொழில் நடத்தி வருகிறார்கள். உக்கிரமூர்த்தியின் அடியாள் சந்தோஷ். வெட்டிட்டு வா என்றால் தூக்கிட்டு வரக் கூடியவன். இவனுக்கும் ஒரு காதலி இருக்கிறாள் லிசா.

சந்தோஷ் அவனது சண்டியர் தொழிலை விட்டுவிட்டு வந்தால் கழுத்தை நீட்டத் தயார் என்கிறாள் லிசா. ஆனால் சந்தோஷம் இதற்கு ஒப்புக் கொள்ள மறுக்க.. காதலி வேறு ஒருத்தனுக்கு கழுத்தை நீட்டத் தயாராகிவிட்டாள்.

கால் டாக்சி ஓட்டுநரான கருணாகரனின் அண்ணன் காணாமல் போய் 9 மாதங்களாகிவிட்டது. அண்ணனுக்குக் கல்யாணமாகி பிள்ளைகள் இருக்கிறார்கள். அண்ணன் ஓட்டி வந்த கால் டாக்சியை இப்போது கருணாகரன் ஓட்டி வருகிறார். ஆனாலும் அண்ணனையும் வலைவீசி தேடி வருகிறார். போலீஸும் உண்மையான தகவலை சொல்ல மறுக்கிறது.

இவரது வீட்டில் இவரது அப்பா அண்ணனின் நினைவாகவே உருகுகிறார். மருகுகிறார். ஆனால் கருணாகரனோ தனது காதலியான அனு சித்தாராவை கைப் பிடிக்க நினைக்கிறார். அப்பாவோ “முதலில் அண்ணனைக் கண்டுபிடிச்சிட்டு வா.. அப்புறமா கல்யாணத்தைப் பத்திப் பேசலாம்…” என்கிறார். இந்த வீட்டில் இப்படியொரு குழப்பம்..!

அருண் அதே ஏரியாவில் டூ வீலர் ஒர்க் ஷாப் வைத்திருக்கிறான். இவனை உக்கிரமூர்த்தியின் மேனேஜரான முத்துராமனின் மகள் சுபிக்சா காதலிக்கிறாள். அவளுக்காக உக்கிரமூர்த்தியின் அடியாளான சந்தோஷின் சிபாரிசில் கடன் வாங்கி டூ வீலரை வாங்கித் தருகிறான் அருண். இதையறியும் முத்துராமன் தனது மகளின் டூ விலர் கடனை தான் அடைப்பதாகச் சொல்கிறார். ஆனால் காதலை கைவிட்டுவிட வேண்டும் என்று அருணை மிரட்டி வைக்கிறார்.

இந்த நேரத்தில் முத்துராமன் உக்கிரமூர்த்தியைவிட்டு விலக நேரிட.. இப்போது அந்த டூவீலர் கடனுக்காக அருணைக் கார்னர் செய்கிறது உக்கிரமூர்த்தியின் குரூப்.

திடீரென்று சந்தோஷூக்கும், உக்கிரமூர்த்திக்கும் இடையில் மோதல் பிறக்கிறது. இதன் பலனாய் சந்தோஷை அவமானப்படுத்தி தள்ளி வைக்கிறார் உக்கிரமூர்த்தி. சந்தோஷ் தனது தேவைக்காக பாபுவிடம் போய் அடைக்கலமாகிறார். பாபு சந்தோஷை வைத்து உக்கிரமூர்த்தியை கொல்லப் பார்க்கிறார்.

இப்படி நான்கு கதைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லிவிட்டு ரசிகர்களை ஒரு முடிவுக்காக காத்திருக்கச் சொல்கிறார் இந்த ‘பொது நலன் கருதி’ திரைப்படத்தின் இயக்குநரான சீயோன்.

யோக் ஜேபிதான் படத்தின் பிரதான நாயகன். அவரைச் சுற்றித்தான் படமே நகர்கிறது. வில்லத்தனத்திற்கு மிகப் பொருத்தமானவர். கந்து வட்டி தொழில் செய்பவர்கள் கருணை, பாவம், அன்பு, பண்பு, நேசம் இதையெல்லாம் கேள்விகூட பட்டிருக்க மாட்டார்கள். அப்படியொரு நடிப்பைத்தான் படத்தில் காட்டியிருக்கிறார்.

சந்தோஷை திட்டமிட்டு அடி வாங்க வைத்துவிட்டு அலுவலகத்தில் சமாதானம் செய்யும் தோரணையில் மிரட்டி அனுப்பி வைக்கும் காட்சியில் ‘வில்லன்டா’ என்று சொல்ல வைத்திருக்கிறார்.

சந்தோஷ் தனது அடிமை கால நடிப்பையும், அடிதடி நடிப்பையும் ஒரு சேர காட்டியிருக்கிறார். தனது காதலியிடம் தன்னுடைய நிலைமையை எடுத்துச் சொல்லும் காட்சியிலும், காதலியின் திருமணத்தை நேரில் பார்க்கும் அந்தத் தருணத்திலும் வில்லன் போஸ்ட்டில் இருந்து விலகி சற்று குணச்சித்திர கேரக்டருக்குள் புகுந்திருக்கிறார். பாராட்டுக்கள் சந்தோஷ்.

கருணாகரன் வழக்கம்போல.. மிக, மிக இயல்பான மனிதராக படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார். ஒரு பக்கம் அப்பா, இன்னொரு பக்கம் தனது காதலி.. மற்றொரு பக்கம் காணாமல் போன அண்ணனை தேடும் பணி.. என்று ஒரு மிடில் கிளாஸ் மாதவனுக்கு இருக்கும் அத்தனை இன்னல்களையும் எதிர்கொள்ளும் அம்பியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகிகளில் அனு சித்தாரா அறிமுகமாகியிருக்கிறார். அழகான கண்கள், வடிவான உடலமைப்பு.. கச்சிதமான உடல்வாகு.. நேர் பார்வையில் கண்களைக் கொள்ளை கொள்கிறார். வசன உச்சரிப்பும், நடிப்பும் மலையாள வருகை என்பதைச் சொல்லாமல் சொல்கிறது. தான் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பிரேமை தனது அழகால் நிரப்பியிருக்கிறார். நடிப்பாலும் கவர்ந்திழுக்கிறார். தொடர்ந்து நடிக்கலாமே..! நடிக்கவும் வைக்கலாமே இயக்குநர்ஸ்..

இன்னொரு நாயகிகள் லிசா மற்றும் சுபிக்சா.. இருவரில் சுபிக்சாவுக்கு நடிப்புக்கு நிறைய ஸ்கோப் கொடுத்திருக்கிறார்கள். அந்த வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் பொருந்திப் போகிறது.

முத்துராமன் மேனேஜர் கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். தன்னை அவமானப்படுத்தியவுடன் கொதித்தெழுந்து பாபுவுடன் கூட்டணி சேர்ந்து உக்கிரமூர்த்தியையே கொலை செய்யப் பார்க்கிறார். அந்தப் பார்வை நியாயமானது என்பதை பல காட்சிகளில் முத்துராமனின் நடிப்பே சொல்லிவிடுகிறது.

இப்படி இயக்கம் சிறப்பானது என்பதால்தான் அனைத்து கேரக்டர்களின் நடிப்பையும் பார்த்து ரசிக்க முடிந்திருக்கிறது.

சுவாமிநாதனின் ஒளிப்பதிவு அமைதியான சுகம். படமாக்கலுக்கு பெரிதும் உதவி செய்திருக்கிறார். ஹரி கணேஷின் இசையில் ஒலித்த ‘நீ ஒன்றும் கற்போடு’ பாடல் கேட்கும்படியிருந்தது.

நான் லீனியர் டைப்பில் முன் பின்னான திரைக்கதையில் கதையை நகர்த்திச் சென்று முடிவில் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் பாங்கில் நன்றாகவே செய்திருந்தாலும் கடைசியில் கிளைமாக்ஸில் மிகப் பெரிய லாஜிக் மிஸ்டேக்கை செய்து படத்தை கொலை செய்திருக்கிறார் இயக்குநர்.

உக்கிரமூர்த்தியை கொலை செய்ய போடும் திட்டம் சொதப்பலாகும் நேரத்தில் ஓய்வு பெற்ற துணை கமிஷனர் கைத்துப்பாக்கியோடு நடுரோட்டுக்கு வந்து போலீஸை எதிர்கொண்டு துப்பாக்கி சண்டை நடத்துவதெல்லாம் எந்த விதத்தில் நியாயம்..? இதனால் யார் சாகப் போகிறார்கள்.. போலீஸா..? அல்லது உக்கிரமூர்த்தியா..?

இந்த திரைக்கதையே படம் பற்றிய பேச்சை 90 சதவிகிதம் சவக்குழிக்குத் தள்ளிவிட்டது. இயக்குநர் இன்னும் கொஞ்சம் யோசித்திருக்கலாம்.

உக்கிரமூர்த்தியின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை ஊகிப்பதுபோல அவருடைய கள்ளக் காதலியின் கேரக்டரை வைத்திருக்கிறார்கள். இதனால் முடிவு முன்பே தெரிந்துவிட்டதால் படத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதுவும் இந்தப் படத்திற்கான ஒரு மைனஸ் பாயிண்ட்டாகிவிட்டது.

ஒரு நல்ல கதை, திரைக்கதையை எப்படி கெடுக்கக் கூடாது என்பதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணமாகிவிட்டது..!

இயக்குநருக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..!

Our Score