full screen background image

மாதவன் – மித்ரன் ஆர்.ஜவஹர் கூட்டணியில் உருவான ‘அதிர்ஷ்டசாலி’ திரைப்படம்!

மாதவன் – மித்ரன் ஆர்.ஜவஹர் கூட்டணியில் உருவான ‘அதிர்ஷ்டசாலி’ திரைப்படம்!

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் மாதவன். நடிப்பு மட்டுமின்றி இயக்கத்திலும் கவனம் செலுத்திய மாதவன் தற்போது ‘அதிர்ஷ்டசாலி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

ஃபேண்டசி டிராமா கதையம்சம் கொண்டு உருவாகியிருக்கும் இந்த ‘அதிர்ஷ்டசாலி’ திரைப்படத்தை ஏ.ஏ. மீடியா கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பாக சர்மிளா, ரேகா விக்கி & மனோஜ் முல்கி ஆகியோர் பிரமாண்டமாக தயாரித்துள்ளார்கள்.

மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் மடோனா செபஸ்டியன், ராதிகா சரத்குமார், சாய் தன்ஷிகா, ஜெகன், நிரூப் என்.கே., உபசனா ஆர்.சி, மாத்யூ வர்கீஸ், உதய் மகேஷ், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், ரவி பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்ய, எம். தியாகராஜன் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

‘யாரடி நீ மோகினி’, ‘திருச்சிற்றம்பலம்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த ‘அதிர்ஷ்டசாலி’ திரைப்படம் ஒரு உணர்வுபூர்வமான கதையம்சத்தைக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஸ்காட்லாந்தின் புகழ் பெற்ற பகுதிகளில் நடைபெற்றுள்ளது. அதன்படி ஃபோர்த் ப்ரிட்ஜ், எடின்பர்க், டீன் வில்லேஜ் மற்றும் விக்டோரியா ஸ்டிரீட் என உலகப் புகழ் பெற்ற ஹாரி பாட்டர் படங்கள் படமாக்கப்பட்ட லொகேஷன்களில் ‘அதிர்ஷ்டசாலி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

இந்த ‘அதிர்ஷ்டசாலி’ படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக சமீபத்தில் நிறைவு பெற்றது. மேலும், இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக் குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலாகி உள்ளது.

இந்தப் படம் முன்னணி நடிகர், நடிகைகளின் அசாத்திய நடிப்பு, சிறப்பான தொழில் நுட்பக் கலைஞர்கள் மற்றும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளால், ரசிகர்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு தலைசிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் என்று படக் குழு அறிவித்துள்ளது.

விரைவில் இந்தப் படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Our Score