full screen background image

‘பெப்சி’க்கு சவால் விட்டு ‘அதிரடி’யாய் படமெடுத்திருக்கும் நடிகர் மன்சூரலிகான்..!

‘பெப்சி’க்கு சவால் விட்டு ‘அதிரடி’யாய் படமெடுத்திருக்கும் நடிகர் மன்சூரலிகான்..!

மன்சூர் அலிகானின்  ராஜ்கென்னடி பட நிறுவனம் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘அதிரடி’.

இது முழுக்க முழுக்க ‘டாப்சி’ (தமிழ்நாடு திரைப்பட படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த இந்தியா கூட்டமைப்பு) தொழிலாளர்களை வைத்து உருவாக்கப்பட்டிருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பம்சமாகும். இந்தப் படத்தில் புதிய தொழில் நுட்ப கலைஞர்கள் பலரும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்தப் படத்தின் முன்னணி  கதாபாத்திரத்தில்  மன்சூர் அலிகான் நடித்திருக்கிறார். மௌமிதா சௌத்ரி, சஹானா, பூவிஷா, கவ்யா, ராதாரவி, செந்தில், சிசர் மனோகர், ஸ்ரீரங்கநாதன், சங்கர், கிங்காங், நெல்லை சிவா, போண்டாமணி, சுப்புராஜ், ‘மஞ்சப் பை’ சேகர், நடேசன் மற்றும் பலர் நடித்துள்ளனனர். செந்தில் படகோட்டியாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார். கேரளாவை சேர்ந்த அம்ஜத் மூசா வில்லனாக நடித்திருக்கிறார். 

கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி படத்திற்கு இசையும் அமைத்திருக்கிறார் மன்சூர் அலிகான். ‘ஒரு ராஜா ஒரு மந்திரி’, ‘ரசிகன் ஒரு ரசிகை’, ‘அண்ணா நகர் முதல் தெரு’ ஆகிய படங்களை இயக்கிய பாலு ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

தற்போதைய காலக்கட்டத்தில் தமிழகத்தில் மறைந்து கொண்டிருக்கின்ற சிலம்பம், களறி, வாள் வீச்சு, மான் கொம்பு போன்ற சண்டைப் பயிற்சிகளை இளைஞர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கும் பயில்வானாக கதாநாயகன் மன்சூரலிகான் நடித்திருக்கிறார்.

காலையில் இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுப்பவர், மாலையில் சமூக சேவை செய்யும் கதாநாயகனாக மாறுகிறார்.  மதுபானக் கடைகளுக்குச் சென்று குடிப் பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவை அவர்களுக்குக் கேடு விளைவிக்கும் எனக் கூறி குடிகாரர்களின் காலில் விழுந்து குடியை தடுக்கிறார். 

நிஜமான பயில்வானை வைத்து ஒரு படமெடுக்க நினைத்து அலைந்து கொண்டிருக்கும் ஒரு தயாரிப்பாளருக்கு, மனசூரலிகானுடைய இந்த நடவடிக்கைகள் பிடித்துப் போக அவரையே படத்தின் கதாநாயகனாக்குகிறார்.

படத்தின் தயாரிப்பு நேரத்தில் தயாரிப்பாளருக்கு அவரது மறைமுக எதிரிகளால் தொல்லை ஏற்படுகிறது. தயாரிப்பாளருடன் இருப்பவர்கள் அவரை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கின்றனர். மன்சூரலிகான் இதையெல்லாம் முறியடித்து படத்தை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தாரா..? எதிரிகளின் சூழ்ச்சி வெல்லப்பட்டதா..? என்பதை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ராமாவரம் எம்.ஜிஆர். தோட்டத்து மாந்தோப்பில் முடிவடைந்தது. இப்படத்தில் மன்சூரலிகான் முதன்முதலாக அனுமார் வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

30-க்கும் மேற்பட்ட புதிய சண்டை பயிற்சியளர்களை பயன்படுத்தி ஒரு புதுமையான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. நான்கு  அதிரடி சண்டைக் காட்சிகளும், பரபரப்பான 2 சேஸிங் காட்சிகளும் படத்தை அதிர வைக்கின்றன.  இப்படத்தில் மொத்தம் 7 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில், மீனவ குப்பங்கள், கடற்கரை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது. தணிக்கைக் குழு அதிகாரிகளால் இப்படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அக்டோபர் மாதம் 16-ம் தேதி திரைக்கு வருகிறது .

தொழில் நுட்பக் கலைஞர்கள்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை – மன்சூர் அலிகான்

இயக்கம் – பாலு ஆனந்த் 

இயக்க மேற்பார்வை – மன்சூர் அலிகான்

ஒளிப்பதிவு –  தளபதி கிருஷ் ,மகேஷ் , பிரெட்டேரிக்  (Frederick)

எடிட்டிங் – R.கேசவன் 

நடனம்  –  விஜயலட்சுமி, வாசு, சம்பத் ராஜ்,  சந்துரு 

கலை – பாபு, ஜெயக்குமார், மார்ட்டின் 

சண்டை பயிற்சி – வெங்கடேஷ், R.S. பாபு, தளபதி தினேஷ்

தயாரிப்பு நிர்வாகம் – பிரான்சிஸ், துரை, அகமத் ஷெரிப்

மக்கள் தொடர்பு –  செல்வ ரகு

தயாரிப்பு – ராஜ்கென்னடி பட நிறுவனம்

Our Score