கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘அசுரன்’, ‘தேன்’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன..!

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ‘அசுரன்’, ‘தேன்’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன..!

அடுத்த மாதம் கோவாவில் நடைபெறவிருக்கும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடுவதற்காக  அசுரன்’ மற்றும் ‘தேன்’ ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “2021 ஜனவரி 16 முதல் 24 வரை கோவாவில் நடக்கவிருக்கும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடுவதற்காக இந்தியாவின் பல்வேறு மொழிகளில் இருந்தும் 183 இந்திய திரைப்படங்கள் போட்டியிட்டன. இதில் இருந்து திரையிடுவதற்காக 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்தப் படங்களைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழுவின் தலைவராக புகழ் பெற்ற திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளருமான ஜான் மேத்யூ மட்தான்(John Mathew Matthan) பொறுப்பு வகித்தார். உறுப்பினர்களாக திரைப்பட துறையை சேர்ந்த 12 பேர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் தமிழ்த் திரைப்பட உலகின் நடன இயக்குநரான கலாவும் ஒருவர்.

அசுரன்’ திரைப்படம் எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' என்னும் நாவலை மையமாகக் கொண்டு உருவானது. இதில் தனுஷ், மஞ்சு வாரியர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் வெற்றி மாறன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.

‘தேன்’ திரைப்படம் மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறையை  அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. டோரா’, ‘காளை’ ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தருண் குமார் இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார்.

‘தேன்’ திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், பல்வேறு வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.