கவர்ச்சி நடிகையாக தமிழ்ச் சினிமாவில் அறியப்பட்ட நடிகை ஷகிலா. 1990-களில் ஒரே ஆண்டில் 20 படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவருடைய நடிப்பில் அடல்ட் ஒன்லி படங்களாகவே வந்து குவிந்தவற்றைப் பார்த்து திரையுலகமே அரண்டு போனது.
அதிகமாக மிரண்டது மலையாளத் திரையுலகம்தான். மலையாள சூப்பர் ஸ்டார்களின் படங்களைவிடவும் அதிக கலெக்சனை ஷகிலாவின் படங்கள் பெறுவதைப் பார்த்து வெறுத்துப் போனார்கள்.
பொறுத்துப் பார்த்த மலையாளத் திரையுலக மூத்த நடிகர்கள் மறைமுகமாக ஷகிலாவை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை மிரட்டத் துவங்க.. அங்கேயிருந்து விரட்டப்பட்டார் ஷகிலா.
இந்த நேரத்தில் இணையமும், செல்போன்களின் வளர்ச்சியும் மின்னல் வேகத்தில் வளரத் துவங்க அவரது படங்களும் முற்றிலுமாக நின்று போயின.
ஷகிலா சில ஆண்டுகளுக்கு முன்பாக தனது வாழ்க்கை வரலாற்றை புத்தமாக வெளியிட்டிருந்தார். அந்தப் புத்தகத்தை மையமாக வைத்து இப்போது ‘ஷகிலா’ என்ற பெயரிலேயே ஒரு திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று 5 மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. வரும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதையொட்டி இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் நடிகை ஷகிலா பேசும்போது, “இந்தத் திரைப்படத்தின் மூலமாக நான் மற்றவர்களுக்கு.. எனக்குப் பின்னால் வரக் கூடிய நடிகைகளுக்குச் சொல்லக் கூடியது.. ‘நான் செய்த தவறுகளை நீங்கள் ஒரு போதும் செய்யாதீர்கள். என் வாழ்க்கையைப் பார்த்து நீங்கள் உங்களது வாழ்க்கையை சரி செய்து கொள்ளுங்கள்’ என்பதுதான்.
என்ன சம்பாதித்தாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் உங்களுக்கென்று தனியாக கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். அதுதான் பிற்காலத்தில் உங்களைக் காப்பாற்றும்.
நான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் என் அக்கா பறித்துக் கொண்டார். என் அக்காவால் என் வாழ்க்கையும் பறி போனது. இன்றைக்கு அக்காவும் இல்லாமல்.. என் மீது அன்பு காட்டவும் யாரும் இல்லாமல் தனியாய் இருக்கிறேன். இந்த நிலை மற்றவர்களுக்குக் குறிப்பாக நடிகைகளுக்கு ஏற்படவே கூடாது. அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என்றுதான் இதைச் சொல்கிறேன்..” என்று உருக்கமாகப் பேசினார்.