இந்தப் படத்தை ‘வி கிரியேசன்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி S.தாணு தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர் தனுஷ், நடிகை மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, ‘ஆடுகளம்’ நரேன், பசுபதி, டி.ஜே.அருணாச்சலம், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ், கென் கருணாஸ், பவன், சுப்ரமணியம் சிவா, நிதிஷ் வீரா, ஏ.வெங்கடேஷ், பாலஹாசன், மணிமேகலை, சுபத்ரா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை – பூமணி, திரைக்கதை – மணிமாறன், வெற்றிமாறன், இயக்கம் – வெற்றி மாறன், வசனம் – சுகா, வெற்றி மாறன், தயாரிப்பு – வி கிரியேஷன்ஸ், தயாரிப்பாளர் – கலைப்புலி எஸ்.தாணு, ஒளிப்பதிவாளர் – வேல்ராஜ், இசை – ஜி.வி.பிரகாஷ்குமார், படத் தொகுப்பு – ஆர்.ராமர், கலை இயக்கம் – ஜாக்கி, சண்டை இயக்கம் – பீட்டர் ஹெயின், நடன இயக்கம் – சதீஷ் கிருஷ்ணன், புகைப்படங்கள் – ஸ்டில்ஸ் ராபர்ட், ஒப்பனை – நெல்லை வி.சண்முகம், உடைகள் – பெருமாள் செல்வம், நிர்வாகத் தயாரிப்பு – ஏ.வாகைகுளம், ஏ.பி.பால்பாண்டி, தயாரிப்பு மேற்பார்வை – ஏ.இளங்குமரன், தயாரிப்பு நிர்வாகி – ஜெ.கிரிநாதன், வடிவமைப்பு – சசி அண்ட் சசி, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அகமது.
புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் பூமணி எழுதிய ‘வெக்கை’ என்கிற நாவலை அடிப்படையாகக் கொண்டது இத்திரைப்படம்.
கதை 1981-களில் நடைபெறுகிறது. மதுபானக் கடைகள் இல்லாமல் கள்ளுக் கடைகளும், கள்ளச் சாராயத் தொழிலும் தமிழகத்தில் வேரூன்றிருந்த காலக்கட்டம்.
கந்தக பூமியான கோவில்பட்டி மண்ணில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களை மேலும், மேலும் ஒடுக்கிக் கொண்டிருந்த பண்ணையார்த்தனத்தை வெளிக்காட்டியிருக்கும் படம் இது.
வடக்கூர், தெக்கூர் என்னும் இரண்டு அருகருகே அமைந்திருக்கும் கிராமங்கள். இதில் தெக்கூரில் வசிக்கும் சிவசாமி என்னும் தனுஷ் ஒரு விவசாயி. தனது குடும்பத்திற்கென்றே இருக்கும் 3 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வருகிறார். இவருக்கு 2 மகன்கள், 1 மகள். மனைவி ‘பச்சையம்மாள்’ என்னும் மஞ்சு வாரியர். மூத்த மகன் டி.ஜே.அருணாச்சலம், இளைய மகன் ‘சிதம்பரம்’ என்னும் கென்.
இவர்களது நிலத்தை சிமெண்ட் பேக்டரிக்காக விலைக்குக் கேட்கிறார் வடக்கூர் ஊர்ப் பண்ணையாரான ‘ஆடுகளம்’ நரேன். தர மறுக்கிறார் தனுஷ். அது ஒன்றுதான் தனது குடும்பத்திற்கென்று இருக்கும் சொத்து என்பதாலும், விவசாயம் மட்டுமே எனக்குத் தெரிந்த தொழில் என்பதாலும் பணத்துக்காகவும் விற்க மறுக்கிறார்.
இந்தப் பஞ்சாயத்து தோல்வியடைந்ததன் காரணமாக இரு தரப்புக்குள்ளும் மோதல் வெடிக்கிறது. இந்த மோதலின் விளைவாய் தனுஷின் மூத்த மகன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு மாட்டடி வாங்குகிறார். இந்த மகன் மீதான வழக்கை வாபஸ் வாங்க வைக்க பஞ்சாயத்து பேசப்பட்டு வடக்கூரானில் இருக்கும் அத்தனை வீட்டுக்காரர்களின் கால்களிலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறார் தனுஷ்.
லாக்கப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வீட்டு வரும் மகன் இதையறிந்து இன்னும் கோபமாகி பண்ணையார் ‘ஆடுகளம்’ நரேனை செருப்பைக் கழட்டி அடித்துவிடுகிறார். இதனால் வெறியாகிவிடும் நரேன் தன் ஆட்களை வைத்து தனுஷின் மூத்த மகனை படுகொலை செய்கிறார்.
இதனால் ஆவேசப்படும் தனுஷின் இளைய மகன் கெவின் நரேனை கொலை செய்கிறார். இந்தக் கொலை நடந்த பிறகு ஊரில் இருந்தால் குடும்பத்திற்கே ஆபத்து என்பதை உணர்ந்த தனுஷ் தனது மகன் கென்னை அழைத்துக் கொண்டு காட்டுக்குள் ஓடி ஒளிகிறார். இதே நேரம் மனைவி பிச்சையம்மாளையும், மகளையும் அண்ணன் பசுபதியின் துணையோடு ஓடி ஒளிந்து கொள்ள வைக்கிறார்.
நரேனின் கொலைக்குப் பழிக்குப் பழி வாங்க நரேனின் மகனும், தம்பியும் துடியாய் துடிக்கிறார்கள். போலீஸும் தனுஷ் குடும்பத்தினரை கொலை வெறியோடு துரத்தி வருகிறது. தப்பி ஓடி ஒளியும் தனுஷ் மற்றும் அவரது குடும்பத்தினரின் நிலைமை என்ன…? மறுபடியும் ஒன்று சேர்ந்தார்களா..? இல்லையா..? என்பதுதான் இ்ந்த அசுரத்தனமான ‘அசுரன்’ திரைப்படத்தின் திரைக்கதை.
தனுஷின் நடிப்பில் ஒரு மைல் கல் என்று சொல்லும் அளவுக்கு சிறப்பான நடிப்பு அவரிடத்தில் இருந்து வெளிப்பட்டிருக்கிறது. அவர் ஏற்றிருக்கும் ‘சிவசாமி’ என்ற கேரக்டர் கதைப்படி அவருடைய வயதைவிட அதிக வயதை ஒத்தது. இருந்தும் அது தெரியாத அளவுக்கு ஒப்பனையிலும், நடை, உடை பாவனையிலும், கேரக்டர் ஸ்கெட்ச்சிலும் செய்திருக்கிறார் இயக்குநர் வெற்றி மாறன்.
ஒரு வெள்ளந்தியான விவசாயியாக.. மகன்கள் மீது அளப்பரிய பாசம் வைத்திருக்கும் தந்தையாக.. மனைவிக்கு அடங்கிய கணவனாக.. குடும்பமே முக்கியம் என்றிருக்கும் அவரது கதாபாத்திரமே படத்தின் மையக் களம்.
அந்த அடர்த்தியான மீசையைக்கூட குளோஸப் காட்சிகளில் துடிக்க வைக்கும் அளவுக்கு தனது நடிப்பைக் காட்டியிருக்கிறார் தனுஷ். மகன் மீதான வழக்கை வாபஸ் வாங்க வைக்க ஊர்க்காரர்களின் கால்களில் விழுந்து எழுந்த அதிர்ச்சியும், தளர்ச்சியுமாய் அவர் வரும் காட்சியில் ஒட்டு மொத்தமாய் ஒரு பரிதாப உணர்வை ரசிகர்களிடையே மேலோங்க வைத்திருக்கிறார்.
“எனக்கு எல்லாம் தெரியும்…” என்று இள வயது தைரியத்தில் சவுடால்விடும் இளைய மகன் சிதம்பரத்தை சமாளித்து அவனைக் கூடவே வைத்துக் காப்பாற்ற அவர் படும்பாடும்.. எப்படியாவது தான் சிறைப்பட்டாவது குடும்பத்தைக் காப்பாற்ற நினைத்து அவர் படும் துயரத்தை, தனது நடிப்பிலேயே தீர்த்து வைக்கிறார்.
இளைய சிவசாமிக்குள் இருந்த வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் மூத்த சிவசாமியின் மனதுக்குள் இறுகப் பூட்டி வைத்துக் கொண்டு, அவர் போடும் வெளி வேஷத்தை அற்புதம் என்றே சொல்ல வேண்டும்.
உச்சபட்சமாய் “அண்ணனுக்குப் பதிலா நீ செத்துப் போயிருக்கலாம்…” என்று இளைய மகன் சிதம்பரம் சொல்லும் வார்த்தையைக் கேட்டு ஸ்தம்பித்துப் போய் நிற்கும் அந்த ஒரு கணம் நம்மையும் திகைக்க வைக்கிறார் தனுஷ். இன்றைய இளைய தலைமுறை நடிகர்களில் தனித்த நடிப்புத் திறன் கொண்ட நடிகன் நான் ஒருவனே என்பதை இதற்கு முந்தைய பல திரைப்படங்களில் தனுஷ் காட்டியிருக்கிறார். இப்போது இதில் அழுத்தமாய் இன்னொரு முறையாக பதிவு செய்திருக்கிறார். 2019-ம் ஆண்டுக்கான தேசிய விருது தனுஷுக்கே என்று உறுதியாய் சொல்லலாம்.
இத்தனையாண்டுகள் கழித்து முதன்முதலாய் தமிழுக்கு வந்திருக்கும் மலையாள சூப்பர் ஸ்டாரினி மஞ்சு வாரியார் தனது முதல் பதிப்பை முத்தாய்ப்பாய் பதித்திருக்கிறார். ‘பச்சையம்மாள்’ என்ற கேரக்டரில் மஞ்சு அமைதியாகவும், ஆக்ரோஷமாகவும் தனது இயல்பில் நடித்திருக்கிறார். சில காட்சிகளில் வயது மூப்பின் காரணமாய் சிவசாமி, பேச்சியம்மாள் ஜோடி பொருத்தமில்லாததாகத் தோன்றினாலும் நடிப்பில் இருவருமே ஒருவரையொருவர் போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
தலையற்ற தனது மகனின் சடலத்தை வயக்காட்டில் பார்த்து கதறியழுகும் தாயாகவும், அந்தக் கோபத்தில் “ஒவ்வொருத்தன் தலையையும் எடுத்தாத்தான் என் ஆத்திரம் தீரும்” என்று பசுபதியிடம் கோபப்படும் நடிப்பிலும் தனுஷூக்கு ஈடு இணை செய்திருக்கிறார் மஞ்சு.
இதே கோபத்தில் தங்களுக்கும் பாத்தியப்பட்ட கிணற்றில் இருந்து தண்ணியை எடுத்து வெளியில் இறைக்கும் வடக்கூரான் ஆட்களின் கழுத்தில் தொரட்டியை வைத்து சண்டையிடும் வீரத் தமிழச்சியாகவும் ஒரு பக்கம் வீரம் காட்டியிருக்கிறார் மஞ்சு.
இடைவேளைக்குப் பின்பு அதிகப்படியான காட்சிகளில் இல்லை என்றாலும் மஞ்சு வாரியர் இடத்தில் வேறு எந்த தமிழ் நடிகைகையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்பதே அவரது வெற்றிக்குக் காரணம்.
மூத்த மகனான டி.ஜே.அருணாச்சலம், சில காட்சிகளே ஆனாலும் மனதில் நிற்கிறார். கொலை வெறி கொண்டு “போ.. போய் சொல்லு.. தெக்கூரான் சிவசாமி மவன் என்னை செருப்பைக் கழட்டி அடிச்சிட்டான்னு சொல்லு..” என்று வெறியோடு நரேனை அடித்துவிட்டுப் போகும் காட்சியில் ‘சபாஷ்டா’ என்று சொல்ல வைத்திருக்கிறார்.
‘வெக்கை’ புத்தகத்தில் நிஜக் கதாநாயகனாக இருப்பது ‘சிவசாமி’யின் இரண்டாவது மகனான ‘சிதம்பரம்’தான். இந்தச் ‘சிதம்பரமாக’ நடித்திருக்கும் கென் கருணாஸ் நடிப்பிற்குப் புதியவர் என்றாலும் இவரது புரியாத வயது.. அறியாத வயது காரணமாக அண்ணனைவிட கொந்தளிப்பான மன நிலையில் ‘உருண்டை’ எனப்படும் நாட்டு வெடிகுண்டை தானே தயார் செய்துவிட்டு ஒரே வெட்டில் நரேனை போட்டுத் தள்ளும் காட்சி திகைப்பட வைத்திருக்கிறது.
எதற்கெடுத்தாலும் “எல்லாத்தையும் நான் பார்த்துக்கிடுதேன்.. என்னைக் காப்பாத்திக்க எனக்குத் தெரியும்…” என்று சொல்லிவிட்டுப் போகும் அவரது இள வயது நடிப்பை குறையில்லாமல் காட்டியிருக்கிறார் கென். பாராட்டுக்கள்.
இள வயது தனுஷின் அக்காள் மகளாக ‘மாரியம்மாளாக’ நடித்திருக்கும் அம்மு அபிராமியின் பாத்திரப் படைப்பு சிறப்பானது. செருப்பை அணிந்து சென்றதற்காக வீரா அவரை அடித்துத் துன்புறுத்தும்போது அவர் படும் வேதனையே நம்மை அதிகம் காயப்படுத்துகிறது. இதேபோல், “ஊரெல்லாம் போய் பொண்ணு தேடுறியே.. என்னைக் கட்டி வைக்கத் தோணுதா..?” என்று உரிமையோடு தன் அம்மாவிடம் சண்டையிடும் மகளாகவும் அம்மு சிறப்பாக நடித்திருக்கிறார். இறுதியில் தீக்காயங்களுடன் “நீ என்கூட எப்படியெல்லாம் வாழணும்ன்னு நினைச்சிருந்த.. அதையெல்லாம் சொல்லு மாமா.. கேட்டுக்கிட்டே செத்துப் போயிடறேன்…” என்று சொல்லும் கணம் மனதையும் உருக்குகிறது.
“நான் அடி வாங்கினதுகூட பரவாயில்லை மாமா.. அங்க இருந்த ஒருத்தர்கூட ஏம்பா பொம்பளை புள்ளைய அடிக்கிறன்னு கேட்கவே இல்லை மாமா..” என்று அம்மு கதறியழும் காட்சியில் நிர்வாணமாகியிருக்கிறது சுயசாதியின் பின்னால் ஒளிந்து கொண்டிருந்த ஆண்களின் ஆம்பளைத்தனம். ‘ராட்சசனுக்கு’ பின்பும் ஒரு கனமான கதாபாத்திரத்தை இதில் சுமந்திருக்கிறார் அம்மு அபிராமி.
படத்தில் எந்தவொரு கேரக்டரும் வீணடிக்கப்படவில்லை. அவர்களுக்குரிய பங்களிப்பை நிறைவாகச் செய்யும் அளவுக்கே நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
வடக்கூரானாக நடித்திருக்கும் நரேனின் ஜாதி வெறியும், அவருக்கு முந்தைய காலக்கட்டத்தில் அதேபோல் நடித்திருந்த ஏ.வெங்கடேஷின் ஜாதி வெறியும் மாறவே மாறாத விஷயமாக பதியப்பட்டிருக்கிறது.
பணக்காரர்களுக்கு மட்டுமே போலீஸ் வரும் என்பதைப் போலவே அலட்சிய இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேல் புதுமுகமாகவும் இல்லாமல் இயல்பாகவே பணத்துக்கு மசியும் அதிகார வர்க்கத்தின் ஆளாக நடித்திருக்கிறார்.
தன்னாலும் ஓட முடியாது என்கிற உண்மையை மறைத்துக் கொண்டு ஆட்டைப் பிடிக்க முடியாத கான்ஸ்டபிளை திட்டும் காட்சியில் தியேட்டரே சிரிக்கிறது. யதார்த்த நிலைமையச் சொல்லி வடக்கூரானின் மகனைச் சமாதானப்படுத்தினாலும் இரண்டு பக்கமும் பேசி சாமர்த்தியமாக சம்பாதிக்க நினைக்கும் அவரது யுக்தியை இயக்குநர் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
படத்தில் எந்தக் கேரக்டரில் வந்தாலும் அதனை முதன்மைப்படுத்திவிடும் பிரகாஷ்ராஜ் இந்தப் படத்தில் ‘வேணுகோபால சேஷாத்ரி’ என்கிற முற்பட்ட வகுப்பினராக இருந்து கொண்டு பட்டியல் இனத்தவருக்கு உதவும் அவரது குணமும், போராட்டத்திற்கு தலைமை தாங்கும் வீரமும் குறிப்பிடத்தக்கது.
சரண்டராக வராமல் தாமதம் செய்யும் தனுஷைத் திட்டியபடியே போகும்போது “ஒரு ஜூனியர்கிட்ட போய் கெஞ்ச வைச்சுட்டான்…” என்று அவர் சலித்துக் கொள்வது அந்த நேரத்துல டென்ஷனிலும் நம்மை சிரிக்க வைக்கிறது.
ஏ.வெங்கடேஷின் வீட்டில் செருப்பு, ஷூக்களை துடைக்கும் வேலையைச் செய்யும் அதே ஜாதிக்கார வீரா.. அந்த வீட்டம்மணிகளின் நச்சரிப்பால் அதைவிட்டுவிட்டு தன்னைவிட வயது அதிகமான தாழ்த்தப்பட்ட மனிதரை செருப்பைத் துடைக்க வைத்து அதனை தான் மேற்பார்வையிடும் காட்சியும், அதற்கு ஏ.வெங்கடேஷ் காட்டும் திகைப்பும் ஜாதி வெறி எந்த அளவுக்கு நம்மிடையே கண்ணுக்குத் தெரியாமல் பரவியுள்ளது என்பதையே காட்டுகிறது. இது போன்ற பல நுட்பமான விஷயங்களை படம் முழுவதிலும் நிரவியிருக்கிறார் இயக்குநர்.
தனுஷின் நண்பனாக வந்து பின்பு மேல் சாதிக்காரனாக மாறி அம்மு அபிராமியை துன்புறுத்தும் வீராவும் குறிப்பிடத்தக்க நடிப்பைக் காண்பித்திருக்கிறார். அந்தக் கேரக்டர் ஒரு வாலிபன் இன்னொரு பெண்ணிடம் செய்யும் சேட்டையாக கருதவிடாமல், சாதி வெறியில் செய்யும் அட்டூழியமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர். வீராவின் நடிப்பும் அதையேதான் காட்டுகிறது.
தனுஷின் அண்ணனாக வரும் சுப்ரமணியம் சிவாவை முதலில் அடையாளமே காண முடியவில்லை. குளோஸப் காட்சிகளில் அவருடைய குரல் மட்டுமே இது சிவாவாச்சே என்று கண்டறிய வைத்துள்ளது. இந்த அளவுக்கு மறைந்திருக்கும் கதாபாத்திரத்துக்குள் அவரை ஒளித்து வைத்த இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்.
ஜி.வி.பிரகாஷ் இதுவரையிலும் இசையமைத்த படங்களுக்கும் சேர்த்து வைத்து இந்தப் படத்தின் பின்னணி இசையைக் கொண்டாடியிருக்கிறார். முதல் காட்சியில் அந்தக் குளத்துத் தண்ணீரில் தனுஷும், அவரது மகனும் கால் வைத்து நடக்கும்போது துவங்கும் பின்னணி இசை இறுதியில் கோர்ட் ஹாலுக்குள் தனுஷ் நுழையும்வரையிலும் ஒரு ராஜாங்கமே நடத்தியிருக்கிறது. அற்புதமான பின்னணி இசை. அவருடைய வாழ்நாளில் மிகக் குறிப்பிடத்தக்க திரைப்படம் இதுதான். இதனை வரவழைத்த இயக்குநருக்கும் நமது பாராட்டுக்கள்.
பாடல்களில் எந்தப் பாடலுமே 4 நிமிடத்தைத் தொடவில்லை. 2, 3 நிமிடங்களில் பாடல்களை முடித்துவிட்டு திரைக்கதை நகர்வதற்கு உதவியிருக்கிறார்.
கரிசல் பூமியின் கந்தக நெருப்பை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் காட்டுவார் என்றால் பெருத்த ஏமாற்றம். அதற்குப் பதிலாக விவசாய நிலங்கள்.. 1981-ம் காலத்திய ஊரின் அமைப்பு.. காடு, மலை, குளம், குட்டை என்று அத்தனையையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார்.
தலையில்லாத மகனைப் பார்க்க பெற்றவர்கள் ஓடி வரும் காட்சியில் நமது அடிவயிறை பிசையும் அளவுக்கு ஆக்சனையும் கேமிரா கோணத்தையும் வைத்து பிரமிக்க வைத்திருக்கிறார் வேல்ராஜ்.
நட்ட நடுக்காட்டில் நடக்கும் சண்டையின்போதும், பன்றி வேட்டையின்போதும் கேமிராவும் உடன் இருந்தே ஓடியது போன்ற பிரமிப்பு..! இதேபோல் நடிப்பிலும் ஒரு முக்கியமான நடுநிலை நாடகம் போடும் உயர்சாதிக்கார ஆளாகவும் நடித்திருக்கிறார்.
ராமரின் படத் தொகுப்பும் படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். காடு, நிலம், ஊர் என்று மாறி மாறி வரும் லொகேஷன்களில் கொஞ்சமும் பிசிறு தட்டாமல் தொகுத்திருக்கிறார். சண்டை காட்சிகளை இயக்கிய அதன் இயக்குநரைவிடவும் தொகுப்பாளர் ரொம்பவே பிரயத்தனப்பட்டிருக்கிறார் என்பது திரையில் நன்கு தெரிகிறது.
இப்படி ஒரு தலைமுறைக்கு முந்திய மனித குல வரலாற்றைச் சொல்லும் படத்தில் வசனங்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை இயக்குநரும் உணர்ந்துதான் இருக்கிறார். அதனால்தான் தமிழ் மண்ணின் சுவாசத்தை ஏந்தியிருக்கும் வசனகர்த்தா சுகாவை வசனம் எழுத வைத்து படத்தை மேலும், மேலும் அழகுபடுத்தியிருக்கிறார்.
நெல்லை சீமை வசனங்களை எழுதுவதற்கும் தனித் திறமையும், படிப்பறிவும் வேண்டும். அது ஒருங்கே அமைந்த நெல்லைச் சீமையின் மைந்தனான சுகாவின் பல வசனங்கள் படத்திற்கு மிகப் பெரிய தூணாக அமைந்திருக்கிறது.
காட்டில் உடன் நடந்து வர கஷ்டப்படும் சிதம்பரத்திடம் பார்த்து வாப்பு என்று சொல்லும் சிவசாமியிடம் “இது எனக்குத் தெரிஞ்ச பழைய காடுதானே..?” என்று சிதம்பரம் சொல்ல, “ஆனா… குத்தம் செஞ்சு பதுங்கிப் போறது புதுசாச்சேடா..?” என்று சிவசாமி திருப்பிச் சொல்வது மிக அழகான வசனம்.
“உனக்கு அவன் செய்றதெல்லாம், நீ அவனுக்குக் கீழ இருக்கன்னு அவன் நம்புற வரைக்கும்தான்…” என்று தனுஷூக்கு அவரது அண்ணன் அறிவுறுத்துவது மிகப் பெரிய உண்மை. இந்த உண்மையை தாழ்த்தப்பட்ட மக்கள் உணர்ந்தாலே அவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு கிடைக்கும்.
பஞ்சாயத்து பேசும்போது பவுசாக தங்களுடைய மேல் சாதி புத்தியை வெளிக்காட்டாமல் நயமாகச் சொல்லிக் காட்டி முடிக்கும் பக்குவத்தை வேல்ராஜ் கதாபாத்திரம் மூலமாகச் சொல்கிறார் இயக்குநர்.
கோர்ட், கேஸ் என்று போவதைவிடவும் ஊரார் காலில் விழ வைத்தாலே அது அவர்களுக்குப் பெரிய அவமானம் என்பதை மறைமுகமாகச் சொல்லிக் காட்டி நரேனை பஞ்சாயத்துக்கு சம்மதிக்க வைக்கும் வேல்ராஜின் தந்திரச் செயல்தான் இந்த நாட்டில் இன்னமும் நடுநிலை நாயகர்களின் தலையாய மக்கள் சேவையாக இருக்கிறது.
தனுஷின் இளைய மகன் சிதம்பரத்தை அடித்து நொறுக்கும்போது மாடியில் இருந்து பேசி சமாளிக்கும் வேல்ராஜ்.. பசுபதி தனது ஆட்களுடன் வந்த உடன் கீழே இறங்கி வந்து “இரண்டு குடும்பத்தோட பிரச்சினையை ஊர்ப் பிரச்சினையை மாத்தாதீங்கப்பு” என்று எச்சரிக்கும்விதமாகப் பேசுவதுகூட ஆண்ட சாதிக்காரர்களின் ஒரு கள்ளத்தனமான சமரசம்தான். இதையும் மறைமுகமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
தனுஷ் வடக்கூர் கிராம மக்களின் வீடுகள் முன்பாக விழுந்து கும்பிடும்போது கருப்புச் சட்டையணிந்த ஒருவர் மட்டுமே அதைத் தடுத்து “தண்ணி கொண்டு வாம்மா” என்று தண்ணீர் வரழைத்துக் கொடுப்பது கருப்புச் சட்டைக்காரர்களுக்கு மட்டுமே இருக்கும் கொள்கைப் பிடிப்பையும், சாதியற்ற அவர்களது தன்னிலையையும் சொல்கிறது. இந்த ஒரு காட்சியிலேயே கருப்புச் சட்டைக்காரர்களின் தனித்துவத்தை அடையாளப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இறுதிக் காட்சியில் தனது குடும்பத்திற்காக அனைத்துக் குற்றங்களையும் தான் ஏற்றுக் கொண்டு ஜெயிலுக்குப் போவதாக சிவசாமி சொல்வது நாசமான போன சட்டத்தின் பிடியில் தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் ஒரு படிக்காத பாமரனின் பெரிய மனதைக் காட்டுகிறது.
போகும்போது மகனுக்கு அறிவுரையாக சிவசாமி சொல்லும் “நம்மகிட்ட காசிருந்தா புடுங்கிக்குவானுவ.. நிலமிருந்தா எடுத்துக்குவானுவ.. படிப்ப மட்டும் அவனுகளால ஒண்ணும் செய்ய முடியாது. படிச்சு அதிகாரத்துக்கு வா. அதிகாரத்துக்கு வந்து அவன் உனக்கு செஞ்சத.. நீ யாருக்கும் நடக்கவிடாம பாத்துக்க” என்று சொல்வதுதான் இந்தப் படம் சொல்லும் உயர் நீதி. அற்புதமான விளக்கம்.
எத்தனை, எத்தனை துன்பப்பட்டாலும் தனக்கு நேர்ந்தது அடுத்தவருக்கும் நேரக் கூடாது என்று நினைக்கும் அந்த எளியவர்களின் வாழ்க்கையை இந்த ஒரு வசனத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இப்படியொரு படத்தை உருவாக்க நினைத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவுக்கு நமது நன்றிகள். அவருடைய தயாரிப்பில் மெச்சத் தகுந்த படமாக இது இருக்கும்.
பஞ்சமி நில மீட்பு காலத்தில் தொடங்கும் கதை அது பற்றிய பிரக்ஞையே இல்லாத ஒரு தலைமுறை வாழுகின்ற காலக்கட்டத்தில் முடிகிறது.
எந்த ஜாதியின் பெயரையும் சொல்லாமல், ஆண்டான்-அடிமை கலாச்சாரத்தில் வாழ்ந்து வந்த நமது முந்தைய தலைமுறையின் அலங்கோல வாழ்க்கையையும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
செருப்பு அணிந்து நடமாடக் கூடாது என்ற நிலையிலேயே தமிழகத்தில் ஒரு மக்கள் கூட்டம் வாழ்ந்து கொண்டிருந்தது என்பதே இப்போதைய மக்களுக்குத் தெரியாது. அந்தத் தெரிய வேண்டிய வரலாற்றை, தெரிய வேண்டிய நேரத்தில் தெரிய வேண்டிய விதத்தில், தெரிய வைத்திருக்கிறார் இயக்குநர்.
அதேபோல் பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கொடுத்துவிட்டுச் சென்ற பஞ்சமி நிலங்களை ஆசை வார்த்தைகளைச் சொல்லி.. படிப்பறிவில்லாத அந்த மக்களை ஏமாற்றிச் சுரண்டி பறித்துக் கொண்ட ஆண்ட சாதியினர் இன்றுவரையிலும் அதையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பது கேவலமானது. இதையும்தான் இத்திரைப்படம் சுட்டிக் காட்டுகிறது.
கல்வி மட்டுமே இவர்களது வாழ்க்கையை மேம்படுத்தும் என்பதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதனை இன்றைய தலைமுறையினர் உணர்ந்து படித்து முன்னேறி ஜாதி ஏற்றத்தாழ்வுகளை களைந்தால் நமது தமிழ்ச் சமூகம் சிறப்பாக இருக்கும்.
ஒரு சாதாரண நிலத் தகராறில் துவங்கும் கதை, அக்காலத்திய சாதீயக் கட்டுப்பாடுகள், ஆண்டான்-அடிமை எண்ணவோட்டம்.. படித்தவன் நாலும் செய்வான் என்னும் கீழ்மைத்தனம்.. பழிக்குப் பழிவுணர்வு, அடக்க வைக்கப்பட்ட உணர்வு வெளிப்படுதல்.. அடிமைத் தளை உடைத்தல்.. என்று பல்வேறு பரிணாமங்களுக்குள் நுழைந்து இறுதியில் அனைத்திற்கும் தேவை கல்வியால் ஆன விழிப்புணர்வுதான் என்று முடித்திருப்பது அற்புதமான கிளைமாக்ஸ்..!
தயாரிப்பாளர் தாணு, இயக்குநர் வெற்றி மாறன், நடிகர் தனுஷ் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்குமே மிகச் சிறந்த படைப்பாக்கமாக இத்திரைப்படம் அமைந்திருக்கிறது.
அனைவருக்கும் வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!