மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்து இயக்குநர் விஜய் வழங்கும் ‘ஆர் யூ ஓகே பேபி’ திரைப்படம்.
சமுத்திரக்கனி, அபிராமி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், மிஷ்கின், ஆடுகளம் நரேன், பாவல் நவநீதன், முல்லையரசி, ரோபோ சங்கர், அசோக், அனுபமா குமார், வினோதினி வைத்தியநாதன்.
எழுத்து, இயக்கம் – லக்ஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பு – டாக்டர் ராமகிருஷ்ணன், இசை – ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா, ஒளிப்பதிவு – கிருஷ்ண சேகர் டி.எஸ்., படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம்குமார், ஆடியோகிராபி – தபஸ் நாயக், வண்ணம் – ராஜசேகரன் கே.எஸ்., தமிழ்நாடு திரையரங்கு வெளியீடு – ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் கே.விஜய் பாண்டி, பத்திரிக்கை தொடர்பு – டீம் AIM.
லஷ்மி ராமகிருஷ்ணனின் அனைத்துத் திரைப்படங்களுமே எளிமையான மனிதர்களின் கதையைப் பேசியிருக்கின்றன. இந்தப் படமும் அப்படித்தான்..!
வட சென்னையில் திருமணம் செய்து கொள்ளாமல் ‘லிவ் விங் டு கெதரில்’ வாழ்கிறார்கள் ‘ஷோபா’ என்ற முல்லையரசியும், அசோக்கும். அசோக் எந்த வேலைக்கும் போகாமல் வெட்டியாக ஊரைச் சுற்றிக் கொண்டிருக்க.. ஷோபா மட்டும் வேலைக்குப் போய் வருகிறார்.
ஷோபாவின் பெற்றோர் அவளைக் கைவிட்டதால் அசோக்குடனேயே அவள் இருக்க வேண்டிய நிலைமை. ஏற்கெனவே ஷோபா ஐந்து முறை அபார்ஷன் செய்திருக்கிறார். இப்போது மீண்டும் கரு உருவாக, மருத்துவமனைக்கு செல்கிறார். ஆனால் கரு நான்கு மாதமாகிவிட்டதால் கலைக்க முடியாது. முயன்றால் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவமனையில் சொல்லிவிட இந்தப் பிரச்சினையை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறுகிறாள் ஷோபா.
அப்போது அதே மருத்துவமனையில் வேலை பார்க்கும் நர்ஸான வினோதினி வைத்தியநாதன் ஷோபாவின் இப்போதைய குடும்பச் சூழலையும், வறுமையையும் அறிந்து கொண்டு, குழந்தையைப் பெற்ற பின்பு யாருக்காவது தத்து கொடுத்துவிடும்படி அறிவுறுத்துகிறாள்.
இதற்கு ஷோபா ஒத்துக் கொண்டால் தற்போதைக்கு அவளுக்கு தேவையானதை தான் செய்வதாகச் சொல்கிறார் வினோதினி. அசோக்கை நம்பி பயனில்லை என்பதால் இந்த டீலிங்கிற்கு ஷோபாவும் ஒத்துக் கொள்கிறாள்.
ஷோபா குழந்தை பெற்றவுடன் அவளிடம்கூட குழந்தையைக் காட்டாமல் வினோதினி குழந்தையை சமுத்திரக்கனி-அபிராமி தம்பதிகளிடம் கொடுத்துவிடுகிறார். இதற்காக பத்திரத்தில் தத்து கொடுப்பதாக எழுதியும் வாங்கிக் கொள்கிறார் வினோதினி. இந்தக் குழந்தைக்காக லட்சத்தில் பணம் கொடுக்க அதை அசோக் பிடுங்கிக் கொள்கிறான்.
சமுத்திரக்கனி-அபிராமி தம்பதியினர் கல்யாணமாகி நீண்ட வருடங்களாகியும் குழந்தை இல்லாமல் தவித்து வந்தனர். தத்தெடுக்க முடிவு செய்து அதற்காக அரசுப் பதிவேட்டில் பதிவும் செய்துள்ளனர். ஆனால் அங்கே கியூ நீளமாக இருப்பதால் சீக்கிரமாக குழந்தை பெற வேண்டி, இப்படியொரு குறுக்கு வழியில் குழந்தையைப் பெற்றுவிட்டனர்.
குழந்தையை கடந்த 1 ஆண்டாக கண்ணும், கருத்துமாக சமுத்திரக்கனி-அபிராமி தம்பதியினர் வளர்த்து வரும் சூழலில் ஷோபாவுக்கும், அசோக்கிற்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது. தன் குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று ஷோபா நினைக்கும்போது ஒரு இடைத் தரகர் மூலமாக தனியார் தொலைக்காட்சியில் நடக்கும் ‘சொல்லாததும் உண்மை’ நிகழ்ச்சிக்கு செல்கிறாள் ஷோபா.
அங்கே நிகழ்ச்சியை நடத்தும் தொகுப்பாளரான லஷ்மி ராமகிருஷ்ணனிடம் தனது குழந்தையை தனக்குத் தெரியாமலேயே தன்னுடைய கணவனான அசோக் யாரிடமோ விற்றுவிட்டதாகச் சொல்கிறாள். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானவுடன் மீடியாவில் இது பரபரப்பாகி விஷயம் குழந்தைகள் நல ஆணையத்திற்கு புகாராகச் செல்கிறது.
குழந்தைகள் நல ஆணையம் இந்த வழக்கினை கையில் எடுத்து விசாரித்துவிட்டு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைக்கிறது. சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கேரளாவுக்குச் சென்று சமுத்திரக்கனி-அபிராமி தம்பதியினரிடம் இருக்கும் குழந்தையை வாங்கி வந்து சென்னையில் இருக்கும் ஒரு காப்பகத்தில் ஒப்படைக்கிறார்கள்.
போலீஸார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துவிட்டதால் சமுத்திரக்கனி-அபிராமி தம்பதியினர் கைதாகும் சூழல் ஏற்படுகிறது. அதே நேரம் இதை எதிர்த்து சமுத்திரக்கனி நீதிமன்றத்திற்குச் செல்கிறார்.
இப்போது அந்தக் குழந்தையைத் தன்னிடம் கொடுக்கும்படி ஷோபா கேட்கிறார். சமுத்திரக்கனி-அபிராமி தம்பதிகளும் கேட்கிறார்கள். தத்தெடுப்பு முறைப்படி நடக்கவில்லை. பணம் கொடுக்கல், வாங்கல் நடந்திருக்கிறது என்பதால் இது குழந்தை விற்பனை மற்றும் குழந்தை கடத்தல் என்ற குற்றத்தின் கீழ் வரும் என்று போலீஸ் தரப்பு வாதிடுகிறது.
இறுதியில் இதன் முடிவு என்ன..? குழந்தையை யாரிடம் கொடுத்தார்கள்..? நீதிமன்றத்தில் தீர்ப்புதான் என்ன? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
‘ஷோபா’ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் முல்லையரசி குழந்தையைத் தத்துக் கொடுத்துவிட்டு பின்பு தாய்மையுணர்வில் குழந்தைக்காக ஏங்கும் தனது உணர்வுபூர்வமான நடிப்பை சிறப்பாக வழங்கியுள்ளார். ஸ்டூடியோவில் அசோக்கின் காலைப் பிடித்துக் கொண்டு “என்னைவிட்டுப் போகாதே” என்று அழுது, புலம்பும் காட்சியில் கண் கலங்க வைத்திருக்கிறார். நீதிமன்றத்தில் முல்லையரசியின் நடிப்பும், பேச்சும் கண் கலங்க வைக்கிறது. நீதிமன்றத்தில் அவர் சொல்லும் அந்த ஒரு வார்த்தைதான் படத்தின் மிகப் பெரிய டிவிஸ்ட்.
குழந்தையை வளர்த்த ஆசையால் தவிக்கும் பெற்றோர்களாக சமுத்திரக்கனியும், அபிராமியும் தங்களது நடிப்பை மிக இயல்பாகவும், அற்புதமாகவும் திரையில் காட்டியுள்ளனர். அபிராமி முல்லையரசியிடம் ஆவேசப்படும் காட்சியில் நெகிழ வைக்கிறார்.
இயக்குநரான லஷ்மி ராமகிருஷ்ணன் ஜீ தொலைக்காட்சியில் தான் நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை அப்படியே இந்தப் படத்தில் ‘சொல்லாததும் உண்மை’ என்கிற பெயரில் மாற்றி அமைத்திருக்கிறார்.
ஷோபா பணம் வாங்கிக் கொண்டுதான் குழந்தையைத் தெரிந்தே கொடுத்திருக்கிறார் என்ற உண்மை தெரிய வந்தவுடன் இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று நிகழ்ச்சி இயக்குநரிடம் சீறுமிடத்திலும், சேனலில் வேலை செய்யும் கடை நிலை ஊழியர் பெண்ணைக் காட்டி “இந்தப் பொண்ணை வைச்சுக்கூட நான் நிகழ்ச்சியை நடத்திருவேன்..” என்று பாவல் நவநீதன் சொல்லும்போது அவமரியாதையில் திகைத்துப் போய் நிற்கும் காட்சியிலும் சிறப்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார் லஷ்மி ராமகிருஷ்ணன்.
குழந்தைகள் நல ஆணையராக நடித்திருக்கும் மிஷ்கின் சில காட்சிகள் என்றாலும் தனது இருப்பை நிலைநாட்டியிருக்கிறார். நிகழ்ச்சி இயக்குநரான பாவல் நவகீதன் ஷோ டைரக்டர் என்ற திமிரைப் படம் முழுவதும் காட்டுகிறார். புரோக்கர் நர்ஸாக வினோதினி வைத்தியநாதன் ‘சொல்லாததும் உண்மை’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அலங்காரம் செய்து கொண்டு வந்திறங்கும் காட்சியில் சூழல் மறந்து சிரிக்க வைத்திருக்கிறார்.
சமுத்திரக்கனியின் வழக்கறிஞராக வழக்கை தீர்க்கமான குரலில், நயமான வார்த்தைகளில் எடுத்துரைத்து வாதாடும் அனுபமா குமார், “நீதிமன்றத்தில் யாரையும் கேரக்டர் அஸாஸினேஷன் செய்யக் கூடாது” என்று கடுமை காட்டும் நீதிபதியாக ஆடுகளம் நரேன், முல்லையரசியின் காதலனாக அசோக், ரவுடியிஸத்தை அலட்சியமாகச் சொல்லும் ரோபோ சங்கர் என்று படத்தில் நடித்த அனைத்துக் கதாப்பாத்திரங்களுமே சிறப்பாக தங்களது பங்களிப்பை செய்திருக்கிறார்கள்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் சுகமில்லை. ஆனால் பின்னணி இசை கதையோடு நம்மை ஒன்ற வைக்கிறது.
ஒளிப்பதிவாளர் கிருஷ்ண சேகரின் ஒளிப்பதிவு பிரமாதமில்லை. ஆனால் குறையுமில்லை. சி.எஸ்.பிரேம்குமார் படத் தொகுப்பில் இன்னமும் விறுவிறுப்பை கூட்டியிருக்க வேண்டும். நீதிமன்றக் காட்சிகளில் காட்சிகளின் இடைவெளி தெரிகிறது.
முறையற்ற வாழ்க்கையை வாழ்ந்த பெண் அதனால் விளைந்த குழந்தையைக்கூட வளர்க்கத் தெரியாமல் அல்லாடும்விதத்தையும், இந்த அவலத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பணக்காரத் தம்பதிகள்.. யார் செத்தாலும் பரவாயில்லை.. அந்த விஷயத்தைக் காசாக்க வேண்டும் என்று துடிக்கும் தொலைக்காட்சிகள்.. அனைத்தையும் சட்டப்படிதான் அணுகுவோம் என்று சொல்லும் அதிகார அமைப்புகள்.. மக்களின் உணர்வுகளை மதிக்காக சட்டங்கள்.. என்று இந்த தத்தெடுப்பு பிரச்சினையில் இருக்கும் சகலவிதமான இரும்புச் சட்டங்களையும், குறுகலான விதிமுறைகளையும் இந்தப் படத்தில் தெளிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
குழந்தைகளை தத்தெடுக்கும் முறை, அதற்கான வழிமுறைகள், குழந்தைகளை சரியான முறையில் தத்தெடுத்தாலும் அதனால் பிற்காலத்தில் ஏற்படும் சட்ட ரீதியிலான பிரச்சனைகள்.. இவற்றையெல்லாம் இந்தப் படத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
கண்ணுக்குத் தெரியாத டி.ஆர்.பி. ரேட்டிங் என்ற நம்பருக்காக அப்பாவிகளின் அறியா நிலைமையை பயன்படுத்தி, அவர்களின் உணர்வுகளை தவறுதலாகக் கையாண்டு ஊடக நெறிகளை மீறும் தனியார் தொலைக்காட்சிகளின் அறமற்ற செயலையும் சுட்டிக் காட்டியுள்ளார் இயக்குநர்.
தத்தெடுக்கும் நினைப்பில் உள்ள தம்பதிகள் அனைவரும் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய படமாக இருந்தபோதிலும், இன்றைய இளைய சமுதாயத்தினர் முறை தவறிப் போவது அவர்களை எத்தனை ஆபத்தில் கொண்டுபோய் விடும் என்பதை அழுத்தமாகச் சொல்லியவிதத்தில் இந்தப் படம் இந்தாண்டுக்கான மிக முக்கிய படங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது.
இளைய சமூகத்தினர் அவசியம் பார்க்க வேண்டிய படம்..!
RATING : 4.5 / 5









