தமிழர்களை திருடர்களாக சித்தரித்து ஒரு புதிய மலையாளத் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
‘ஆபரேஷன் ஜாவா’ என்ற அந்த மலையாளத் திரைப்படத்தை தருண் மூர்த்தி என்பவர் இயக்கியிருக்கிறார்.
கதைப்படி சேலத்தில் பிடெக் முடித்த இரண்டு மலையாள இளைஞர்களுக்கு வேலை கிடைக்காமல் உள்ளது. அந்த நேரத்தில் அவர்கள் ‘பிரேமம்’ படத்தின் திருட்டு பிரிண்ட் வழக்கில் சைபர் கிரைம் காவலர்களுக்கு உதவுகிறார்கள். இவர்களின் உதவியினால் அந்த வழக்கில் அந்தக் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்கிறது.
இதையடுத்து அதே சைபர் கிரைமில் தற்காலிக பணியிடத்திற்கு அந்த இரண்டு இளைஞர்களும் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், மேலும் வழக்குகளில் துப்புத் துலக்குகிறார்கள். ஆனால் காவல் துறையில் இருக்கும் ஈகோ பிராப்ளத்தினால் இவர்களும் சிக்கிக் கொள்ள இவர்கள் நிலைமை கடைசியில் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
முதல் சைபர் கிரைம் கதையில் ‘பிரேமம்’ படத்தின் பைரஸி வீடியோவை நெட்டில் வெளியிட்டவர்களைத் தேடிக் கண்டறிய அலையும்போது அது தமிழ் ராக்கர்ஸில் வெளியாகி, சென்னையில் பர்மா பஜாரில் டிவிடியாகப் போடப்பட்டு அதுதான் பல மாநிலங்களுக்கு சப்ளையாகிறது என்று சொல்கிறார்கள். மேலும் இதில் சம்பந்தமில்லாமல் தமிழர்களையெல்லாம் சந்தேகப்பட்டு பேசுகிறார்கள்.
இதற்கடுத்த கதையில் டேட்டாபேஸை வைத்து இணையம் வாயிலாக பலரிடமிருந்தும் பணம் பறிக்கிறார்கள் சிலர். அந்த சிலரில் அனைவருமே தமிழர்களாக இருப்பதும், குற்றவாளிகளை கேரளா சைபர் கிரைம் போலீஸ் தமிழகம் வந்து கைது செய்து அழைத்துச் செல்வதும் நடக்கிறது.
மேலும் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் வழங்கப்பட்ட லேப்டாப்பை அவர்கள் கேரளத்தில் பயன்படுத்துவதாகவும் காட்டியிருக்கிறார்கள்.
இப்படி இந்த இரண்டு குற்றங்களைச் செய்தவர்கள், செய்பவர்கள் தமிழர்களாக காட்டியிருப்பதுதான் இப்போது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. “தமிழர்கள் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள்” என்பது போன்ற வசனங்களை வைத்திருப்பதும்..
ஏதோ, கேரளாவில் அனைத்து மலையாளத்து மக்களும் ஒழுக்கமானவர்கள் என்றும் அவர்களில் யாருமே இது போன்ற திருட்டுத்தனம் செய்ய மாட்டார்கள் என்பது போலவும் இந்தப் படம் காட்டியிருப்பதால், “தமிழர்கள் என்ன இளிச்சவாயர்களா..?” என்று இந்தப் படத்தைப் பார்த்த தமிழர்கள் கொதித்துப் போய் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.