full screen background image

தமிழ்ச் சினிமாவின் மூத்த இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

தமிழ்ச் சினிமாவின் மூத்த இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் காலமானார்

தமிழ்ச் சினிமாவின் மூத்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஜி.என்.ரங்கராஜன் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 90.

சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் இருந்த இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் இன்று காலை 8.45 மணிக்கு அவருடைய வீட்டிலேயே காலமானார்.

இயக்குநர் ஜி.என்.ரங்கராஜன் பிரபல படத் தொகுப்பாளரான துரை சிங்கத்திடம் உதவியாளராகப் பணியாற்றித்தான் தமிழ்த் திரையுலகத்தில் அடியெடுத்து வைத்தார். மூத்த இயக்குநரான பீம்சிங் இயக்கிய ‘களத்தூர் கண்ணம்மா’ படத்தில் உதவி எடிட்டராகப் பணியாற்றிய பெருமை கொண்டவர். இதன் பின்பு அவரிடத்திலேயே உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பீம்சிங்கின் மறைவுக்குப் பிறகு இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடம் 25 படங்களுக்கும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

ரங்கராஜன் முதலில் இயக்கிய திரைப்படம் 1979-ம் ஆண்டு வெளிவந்த கமல்-ஸ்ரீதேவி ஜோடியாக நடித்திருந்த ‘கல்யாண ராமன்’ திரைப்படம்தான்.

இதன் பின்பு 1981-ம் ஆண்டு ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்ப மயம்’, ’கடல் மீன்கள்’, ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ ஆகிய நான்கு படங்களை இயக்கியிருந்தார்.

1982-ம் ஆண்டு ‘ராணி தேனீ’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். 1983-ம் ஆண்டு ‘முத்து எங்கள் சொத்து’ படத்தை இயக்கியிருந்தார். 1985-ம் ஆண்டு ‘அடுத்தாத்து ஆல்பர்ட்’ படத்தை தயாரித்து, இயக்கினார். 1991-ம் ஆண்டு சிவக்குமார், லட்சுமி நடிப்பில்  சார் ஐ லவ் யூ’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

பின்பு 1993-ம் ஆண்டு கமல்ஹாசன்-பானுப்பிரியா நடிப்பில் மகாராசன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

இதற்கிடையில் 1980-ம் ஆண்டு ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா இயக்கிய ‘கல்லுக்குள் ஈரம்’ படத்திற்கு வசனம் எழுதியிருந்தார் ஜி.என்.ரங்கராஜன்.

இதன் பின்பு தொலைக்காட்சியிலும் அடியெடு்த்து வைத்த ஜி.என்.ரங்கராஜன் தமிழ்ச் சின்னத்திரையில் முதல் மெகா தொடரான ‘ரகுவம்சம்’ சீரியலை இயக்கிய பெருமை கொண்டவர். சிங்கப்பூர் தொலைக்காட்சிக்காக ஒரு டாக்குமெண்ட்ரி படத்தையும் இயக்கியிருக்கிறார்.

‘மகாராசன்’ படத்திற்கு எந்தப் படத்தையும் இயக்குநர் ரங்கராஜன் இயக்கவில்லை. அவருடைய மகனான ஜி.என்.ஆர்.குமாரவேலன் தற்போது தமிழ்த் திரையுலகத்தில் ஒரு முக்கிய இயக்குநராக உள்ளார். ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘யுவன் யுவதி’, ‘ஹரிதாஸ்’, ‘வாகா’. மற்றும் திரைக்கு வரவிருக்கும் ‘சினம்’ ஆகிய படங்களை குமாரவேலன் இயக்கியிருக்கிறார்.

Our Score