அரண்மனை-2 – சினிமா விமர்சனம்

அரண்மனை-2 – சினிமா விமர்சனம்

‘அரண்மனை’யின் அதிரிபுதிரி வெற்றிக்குப் பின்பு தமிழ் சினிமாவின் வழக்கமான பார்முலாபடி அதன் இரண்டாம் பாகமும் இதோ வந்துவிட்டது.

‘அரண்மனை’யில் வந்த அதே அரண்மனைதான். ஆனால் ஆட்கள்தான் கொஞ்சம் வேறு வேறாக இருக்கிறார்கள். பேய்களும்தான்..!

அந்த ஊரின் புராதனமான கோவிலின் கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்டமான அந்த அம்மன் சிலையை எடுத்து கருவறைக்குள் வைக்க இருக்கிறார்கள். இந்த இடைப்பட்ட 12 மணி நேரத்தில் அந்த  அம்மனின் சக்தி ஊருக்குள் இல்லாமல் போகும் என்பது ஐதீகமாம்.

இதனைப் பயன்படுத்தி ஊருக்குள் பேயோட்டும் வல்லுநர்கள் ஊடுறுவுகிறார்கள். சுடுகாட்டில் அமர்ந்து மந்திரங்களை ஓதி, அமைதியாய் உறங்கிக் கிடக்கும் பேய்களை உயிர்த்தெழ வைக்கிறார்கள். அதில் சிலவற்றை தாங்கள் கொண்டு வந்திருக்கும் சொம்பில் அடைத்து வைத்து பில்லி, சூனியத்திற்கு பயன்படுத்த எண்ணுகிறார்கள்.

ஒரேயொரு பேய் மட்டும் இவர்களையும் தாண்டி ஊருக்குள் சென்று அந்த அரண்மனைக்குள் புகுந்து கொள்கிறது.

அந்த அரண்மனையில் வசிக்கும் ராதாரவியை அந்த இரவிலேயே கோமா நிலைக்குக் கொண்டு செல்கிறது பேய். அப்பாவின் நிலையை அறிந்து தாய்லாந்தில் இன்பச் சுற்றுலா சென்றிருக்கும் மகன் சித்தார்த் தனது காதலி த்ரிஷாவை அழைத்துக் கொண்டு தாயகம் திரும்புகிறார்.

வீட்டில் இருக்கும் அந்த ஆவி சித்தார்த்தின் அண்ணன் சுப்புவின் சின்ன பையனுக்கு மட்டுமே தெரிகிறது. ராதாரவியை கவனித்துக் கொள்ள மருத்துவமனையில் இருந்து கேரளத்து இளம் தாதியான பூனம் பாஜ்வா வருகிறார்.

த்ரிஷாவை மோசமாக கமெண்ட் அடித்த கார் டிரைவர் ராஜ்பிரபுவை சித்தார்த் அடித்து வீட்டைவிட்டு வெளியே துரத்துகிறார். அவமானப்பட்ட நிலையில் ராஜ்பிரபு மதுவருந்திவிட்டு நியாயம் கேட்டு அரண்மனைக்குள் இரவு நேரத்தில் நுழைய.. அவரை பேய் பதம் பார்த்து வைகுண்டத்துக்கு அனுப்புகிறது. இந்தப் பழி சித்தார்த் மேலே விழுக.. போலீஸ் சித்தார்த்தை கைது செய்கிறது.

அந்த வீட்டில் அடுத்தடுத்து பேய் இருப்பது போன்ற நிகழ்வுகள் அனைவரின் கண்களுக்கும் தெரிய வர வீடே பதட்டமாகிறது. இந்த நேரத்தில் குடும்ப உறவான சுந்தர்.சி. நுழைகிறார்.

அனைவரும் எதற்கோ பயப்படுகிறார்கள்..? வீடே களேபரமாகியிருக்கிறது என்பதை உணர்ந்து அந்த வீட்டில் பேய் இருக்கிறது என்பதை கன்பார்ம் செய்து கொள்கிறார். இந்த நேரத்தில் சித்தார்த்தின் அண்ணனான சுப்பு பஞ்சுவும் பேயால் ‘மேலே’ அனுப்பப்படுகிறார்.

சுப்பு பஞ்சுவை குடும்பத்தினர் தேடி வரும் வேளையில்.. கும்பாபிஷேக நாளும் வருகிறது.  சுப்பு பஞ்சுவுக்கு பதிலாக சித்தார்த் குடும்ப பாரம்பரிய முறைகளை செய்கிறார்.  பூனம் பாஜ்வாவின் சித்தப்பாவான மலையாள மாந்திரிகர் ஜெயபாலன் வீட்டிற்கு வந்து அந்தப் பேய் இப்போது அந்த வீட்டில் யார் உடம்பில் குடியேறியிருக்கிறது என்பதை மிகச் சரியாக கண்டறிந்து சொல்லிவிடுகிறார்.

அந்தப் பேய் யார்..? பேயை கடைசியில் விரட்டினார்களா இல்லையா..? என்பதெல்லாம் படம் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..!

பேய்ப் படம் என்று வந்தாகிவிட்டது.. வலுவான பின்னணி இசையும், மிரட்டலான இயக்கமும் இருந்தால் பயமுறுத்திவிடலாம். பயமுறுத்தல் அதிகமாக இருந்தால்தான் அது பேய்ப் படம். ‘அரண்மனை’யைக் காட்டிலும் கொஞ்சம் குறைவாக பயமுறுத்தினாலும் படத்தின் பிற்பாதியில் வரும் காமெடி காட்சிகளும், திரைக்கதையும் படத்தை போரடிக்காமல் பார்க்க வைக்கின்றன.

சித்தார்த்துக்கு அதிகம் நடிப்புக்கென்று தனிப்பட்ட வாய்ப்பில்லை. பேய்ப் படங்களில் இதையெல்லாம் பார்க்கவே முடியாது. த்ரிஷாவின் பேய் வேடம்தான் வலுவில்லாமல் இருக்கிறது. இதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிட்டார் ஹன்ஸிகா. பாசமுள்ள மகளாகவும், மனைவியாகவும், கோபமான பேயாகவும் மிக சரியான செலக்சன் என்று சொல்ல வைத்திருக்கிறார்.

ஹன்ஸிகா, ராதாரவி, சுப்பு சம்பந்தப்பட்ட காதல், ஓட்டம், கவுரவக் கொலை விஷயங்கள்தான் படத்தின் அழுத்தமான காட்சிகளாக இருக்கின்றன. சுந்தர்.சி.யின் இத்தனை வருட இயக்க அனுபவத்தில் இதுவொரு முத்தான காட்சிகள்..!

ராதாரவியின் பண்பட்ட நடிப்பில் கோரமான காட்சிகள்கூட சோகத்தை வரவழைத்துவிட்டன. மனிதரை கோமாவில் படுக்க வைத்து பஞ்சராக்கிவிட்டிருக்கிறார்கள். முதுகில் எண்ணெய் தேய்த்து.. பவுடரை கொட்டி.. புரட்டியெடுத்து.. எப்படி தாங்கினார் என்று தெரியவில்லை.. இவ்வளவு செய்து கொடுத்தும் நடிகர் சங்கத் தேர்தலில் ராதாரவியை எதிர்த்து சுந்தர்.சி. நின்றிருக்கிறார் என்றால் என்னத்த சொல்றது போங்க..?

வடிவேலு இல்லாத குறையை இரண்டு படங்களில் சந்தானம் தீர்த்து வைத்தார். இப்போது சந்தானம் இல்லாத குறையை சூரி கொஞ்சமாவது தீர்த்து வைத்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பஞ்ச் டயலாக்குகளை காமெடி மாடுலேஷனில் அள்ளி வீசி புன்னகைக்க வைத்திருக்கிறார் சூரி. பூனம் பாஜ்வாவை சூரி டாவடிக்க.. சூரியை கோவை சரளா லுக்குவிட இந்த முக்கோண காதல் காட்சிகள் கலகலப்பை கூட்டியிருக்கின்றன. பேய் வினோதினிதான் என்று நினைத்து கோவை சரளா செய்யும் அலம்பல்களும், அந்த வேன் காட்சிகளும் பேயையும் மறந்து சிரிக்க வைத்திருக்கின்றன.

ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யு.கே.செந்தில்குமாரின் கேமிராவுக்கு இதுவரையில் காட்டாத கவர்ச்சி என்று சொல்லி த்ரிஷா எதையோ காட்டியிருக்கிறார். அப்படியா தெரியுது..? பூனம் பாஜ்வாவின் இலை மறைவு காய் மறைவு கிளாமரையும் அப்படியே லேசுபாசாகத் தொட்டிருக்கிறார்கள். என்ன இருந்தாலும் ‘அரண்மனை’யில் வந்த ராய் லட்சுமியை கிளாமர் விஷயத்தில் த்ரிஷாவால் இதில் ‘டச்’ கூட செய்ய முடியவில்லை என்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். (கொளுத்திப் போடுவோமே..?!)

அம்மன் சிலை முன்பு ஆடும் அந்த பாடலும், பாடல் காட்சியில் திடீர் சஸ்பென்ஸாக ரங்க ராட்டினம் ஆடியிருக்கும் தயாரிப்பாளர் குஷ்புவும் ரசிக்கத்தான் வைத்திருக்கிறார்கள்.  பக்தியை அழுத்தமாகக் கொடுக்க வேண்டிய அந்த பாடல் காட்சியில் கிளைமாக்ஸை திணித்திருப்பதால், பாடல் காட்சியின் பிரமாண்டம் பின்னுக்குப் போய்விட்டது என்பது சோகம்தான்..!

திடீரென்று வரும் சுந்தர்.சி. அனைத்துவித செட்டப்புகளோடு பேயை தடாலடியாக கண்டறிவது, பஞ்சு சுப்புவின் கதியறியாமல் வினோதினி செட்டப் வீட்டுக்கு போயிருக்கார் என்று நினைத்துக் கொண்டேயிருப்பது.. பையனின் கண்ணுக்கு மட்டும் பேய் தெரிவது.. என்று அடுக்கடுக்காய் திரைக்கதை வசதிக்காக காட்சிகளை வைத்து அதையும் முரண்நகை தெரியாமல் தனது சிறப்பான இயக்கத்தினால் படத்தை நகர்த்தியிருக்கிறார் சுந்தர்.சி.

இன்னும் எதையாவது செய்து கூடுதலாக பயமுறுத்தியிருக்கலாமே என்று மட்டுமே தோன்றுகிறது. அதனை அடுத்து வரக் கூடிய அரண்மனை-3-ல் குஷ்புவின் மணாளன் செய்து காட்டுவார் என்று நம்புவோமாக..!

வெற்றிகரமான பேய்ப் படங்களின் வரிசையில் இந்த ‘அரண்மனை-2’-வும் இடம் பிடித்துவிட்டது என்று கடந்த 3 நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்டுகள் சொல்கின்றன..!

வெற்றிக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்..?