full screen background image

பாலு மகேந்திராவுக்கு சமர்ப்பணமாக உருவாகியிருக்கும் புதிய ‘அழியாத கோலங்கள்’ திரைப்படம்

பாலு மகேந்திராவுக்கு சமர்ப்பணமாக உருவாகியிருக்கும் புதிய ‘அழியாத கோலங்கள்’ திரைப்படம்

தமிழ்த் திரையுலக மேதை, ஒளி ஓவியர், அமரர் பாலு மகேந்திராவின் மாணவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து, அவருக்கு சமர்ப்பணமாக செய்திருக்கும் படம் ‘அழியாத கோலங்கள்’.

இதே தலைப்பில் பாலுமகேந்திரா 1979-ம் ஆண்டு இயக்கி வெளியிட்ட முந்தைய படம் இன்றுவரையிலும் தமிழ்ச் சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டர் படமாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் இயக்குநரான பத்திரிகையாளர் எம்.ஆர். பாரதி, இந்தப் புதிய ‘அழியாத கோலங்கள்’ படம் பற்றி நிறைய பேசினார்.

“நான் இயக்குநர் பாலு மகேந்திராவிடம் ஒரு உதவியாளராக  பணியாற்றவில்லையென்றாலும், ஒரு சினிமா பத்திரிகையாளனாக சுமார் 20 வருடங்களாக அவரோடு நட்பைத் தொடர்ந்தவன்.

பாலு மகேந்திராவின் படங்களைப் போலவே தரமான, மிக இயல்பான படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம். எனது முதல் படமான இந்த ‘அழியாத கோலங்கள்’ அப்படி அமைந்து விட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

படத்தின் கதைக்கு அவரது படமே மிகப் பொருத்தமான டைட்டிலாக இருக்கும் என்பதால் அதே தலைப்பையே இந்தப் படத்திற்கும் சூட்டிவிட்டோம். அதோடு எனது முதல்படம் எனது மானசீக குருவிற்கு அஞ்சலியாக சமர்பணம் செய்வதில் எனக்கு முழு திருப்தி.

நாங்கள் அனைவரும் ஒரு தயாரிப்பாளராகவும், ஒரு டீமாகவும் சேர்ந்து திட்டமிட்டு இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். நல்ல சினிமா எடுப்பது ஒன்றே எங்கள் நோக்கம். இந்த டீமில் சீனியர் ஆர்ட்டிஸ்ட்டான அர்ச்சனா எங்களோடு இணைந்திருப்பது எங்களுக்குப் பெருமை. படத்தில் அவர்தான் மெயின்  ரோல் பண்ணியிருக்கிறார்.

இந்தக் கதையை அவரிடம் சொன்னபோது, ‘இந்தப் படத்தை பாலுமகேந்திரா அவர்களுக்கு டெடிகேட் செய்வதாக இருந்தால் நான் இதில் நடிக்கிறேன் ‘ என்று சொல்லி உடனே ஒப்புக் கொண்டார். அவருடைய பாத்திரத்தை உணர்ந்து அதற்கு உயிரூட்டியும் இருக்கிறார் அர்ச்சனா.

பாலுமகேந்திராவின் கரங்களில் ஒரு குழந்தையாகத் தவழ்ந்த தேவா சின்கா என்பவர் இதன் இன்னொரு தயாரிப்பாளர். ‘சந்தியா ராகம்’ படத்தில், அர்ச்சனாவின் கைக் குழந்தையாக இவர் நடித்திருப்பார். அவரும் இந்த டீமில் இணைந்திருப்பது காலம் செய்த இனிய மாற்றம்.

இந்திய சினிமாவின் அனைத்து மொழிகளிலும் நடித்திருக்கும் ரேவதி இதில் இன்னொரு பெரிய கேரக்டரைச் செய்திருக்கிறார். இந்தப் படத்தில் ரேவதி   நடித்துக் கொடுத்ததோடு இல்லாமல் அவரது சொந்தப் படம் போல அதிக ஈடுபாட்டோடு  உரிமை எடுத்துக் கொண்டு தயாரிப்பு வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து முடித்தார். படத்தின் ஆரம்ப நிமிஷத்தில் இருந்து கடைசி நிமிஷம்வரை எங்கள் டீமோடு இருந்தார். இந்தப் படத்தில் அவர் ஒரு அங்கம் என்றே சொல்ல வேண்டும்.  

24 வருடங்கள் கழித்து ஒரே கல்லூரியில் படித்த இரண்டு நண்பர்கள் – ஒரு ஆண், ஒரு பெண் – சமீபத்தில் பெய்த ஒரு பெருமழை நாளில் சந்திக்கிறார்கள். அந்த சந்திப்பும் அதன் பிறகான நிகழ்வுகளும்தான் கதை.

இந்தக் கதைக்கு யார் தேவைப்பட்டார்களோ அவர்கள் மட்டுமே நடித்திருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் பிசியான நடிகர் பிரகாஷ்ராஜ். ரேவதி மூலமாக கதை கேட்டதுமே எங்களுக்கு தேதிகள் ஒதுக்கிக் கொடுத்து முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர்தான் கதையின் நாயகன். ஒரு எழுத்தாளர் கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார். அவரது கல்லூரிச் சினேகிதியாக அர்ச்சனா.

நாசர் ஒரு போலீஸ் அதிகாரி வேடத்தில் மிரட்டி இருக்கிறார். அவரும் அர்ச்சனாவும் திரைப்படக் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். அந்தக் கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று அர்ச்சனா கேட்டுக் கொண்டதுமே மறுவார்த்தை பேசாமல் உடனே ஒப்புக் கொண்டார். கதையைப் பற்றியோ சம்பளத்தைப் பற்றியோ பேசவே இல்லை. ’இதில் நடித்துக் கொடுப்பது என் கடமை’  என்று உடனே வந்து நடித்துக் கொடுத்து யூனிட்டின் பாராட்டை தட்டிச் சென்றார். அவர் ஒரு திறமையான நடிகர் என்பது உலகத்திற்கே தெரியும். ஒரு சிறந்த மனிதர் என்பதையும் இதில் நிரூபித்துச் சென்றார்.

இந்தப் படத்தில் ஒரு பாடல் மற்றும் ஒரு கவிதை இடம் பெற்றிருக்கிறது. கவியரசு வைரமுத்து பாடல் எழுதியதோடு ஒரு காட்சியின் சூழ்நிலைக்கேற்ப அந்தக் கவிதையை அற்புதமாக எழுதிக் கொடுத்தார். கவிஞரின் பாடல்களை சினிமாவில் கேட்டிருக்கிறோம். அவரது கவிதையை திரையில் கெளரவித்த பெருமை எங்களுக்கு உண்டு. அரவிந்த் சித்தாத்தா இசையமைத்திருக்கிறார். தரமான பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியிருக்கும் காசி. விசுவ நாதன்தான் இந்தப் படத்தின் படத் தொகுப்பாளர்.

தேசிய விருதுகளை வென்ற, இந்திய சினிமாவில் மிக முக்கியமான கலைஞரான ஷாஜி என். கருண் இந்தப் படத்தின் வடிவமைப்பில் எங்களோடு ஒரு முக்கிய ஆலோசராக இருந்தார். ஒரு இளைஞர் பட்டாளத்திற்கு அவரது அட்வைஸ் மிகப் பெரிய பலம்…” என்றார்.

எழுத்து, இயக்கம்      –       எம்.ஆர்.பாரதி

தயாரிப்பு                       –        ஈஸ்வரி ராவ், தேவ சின்ஹா

ஒளிப்பதிவு                  –        ராஜேஷ் கே.நாயர்

படத்தொகுப்பு             –        மு.காசிவிஸ்வநாதன்

இசை                                –        அரவிந்த் சித்தார்த்தா

பாடல்கள்                      –        கவிப்பேரரசு வைரமுத்து

தயாரிப்பு நிர்வாகம் –        விஜய் மாருதி ரெட்டி 

Our Score