full screen background image

“முத்து, ஆளவந்தானையெல்லாம் இப்போ திருப்பி ஓட்டணுமா..?” – இயக்குநர், நடிகர் பிரியன் ஆவேசம்!

“முத்து, ஆளவந்தானையெல்லாம் இப்போ திருப்பி ஓட்டணுமா..?” – இயக்குநர், நடிகர் பிரியன் ஆவேசம்!

தமிழ்த் திரைக்கூடம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய திரைப்படம் ‘அரணம்’.

பாடலாசிரியர் பிரியன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். லகுபரன், கீர்த்தனா உட்பட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

நித்தின் கே ராஜ், நௌசத் ஒளிப்பதிவு செய்துள்ளனர். பிகே படத்தொகுப்பு செய்துள்ளார். சாஜன் மாதவ் இசை அமைத்துள்ளார்.

ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக் குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. 

இவ்விழாவில் பாடலாசிரியர் பாலா பேசும்போது, “இது எனது முதல் திரைப்படப் பாடல், சிறு வயதிலிருந்து பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பது கனவு. எனது ஆசான் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் நானும் பாடலாசிரியராக அறிமுகமாவது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் நான் எழுதியிருக்கும் “காத்துல என்ன தூத்துது” எனும் பாடல் அனைவரையும் கவரும். இசையமைப்பாளர் ராஜன் மாதவிற்கு நன்றி. தமிழ் திரைப்படக் கூடத்திற்கு என் நன்றிகள். படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்..” என்றார்.

பாடலாசிரியர் சஹானா பேசும்போது, “இந்த அரணம் படத்தில் நான் எழுதியிருக்கும் “ஆரிராரோ” என்னும் பாடல்தான் இந்த தமிழ்த் திரையுலகத்தில் என்னுடைய முதல் பாடல். பிரியன் சாரின் தமிழ் திரைப்பா கோர்சில் படித்தபோது, எழுதிய பாடல் இது. ஆனால் எங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் எனும் நோக்கில், படத்தில்  என்னைப் பயன்படுத்த வைத்த பிரியன் சார், ராஜன் சாருக்கு நன்றி.  தற்போது மெல்லிசை பாடல் அதிகம் வருவதில்லை. இப்படம் அந்த ஏக்கத்தைப் போக்கும். இப்படத்தை அனைவரும் ரசிப்பீர்கள்..” என்றார். 

எடிட்டர் பி.கே. பேசும்போது, “பிரியன் சாரை எனக்கு ஆறேழு வருடங்களாகத் தெரியும். நானும் சாரும் இப்படம் பற்றி நிறைய முறை விவாதித்துள்ளோம், ஒரு புதுமையான முறையில் ஹாரர் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் இருக்கும், நீங்கள் மக்களுக்கு இப்படத்தைக் கொண்டு  சேர்க்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.

ஒளிப்பதிவாளர் நௌஷத் பேசும்போது, “அரணம்’ என்றால் ‘கவசம்’ என்பதுதான் அர்த்தம்.  பிரியன் சார் ஷாட் நன்றாக வரும்வரை விடவே மாட்டார். நான் நிறைய படங்கள் செய்துள்ளேன். ஆனால், இவர் பக்கத்தில் வந்தாலே பயந்துவிடுவேன். ஆனால், அவரோ சிரித்துக் கொண்டே தனக்குத் தேவையானதை வாங்கி விடுவார். கச்சிதமாகப் படத்தை உருவாக்கியிருக்கிறார். படத்திற்கு உங்கள்  ஆதரவைத் தாருங்கள்…” என்றார்.

நாயகி வர்ஷா பேசும்போது, “முதலில் பிரியன் சாருக்கு நன்றி. என்னை நம்பி இந்த வாய்ப்பைத் தந்தார். முதல் படம் நடிக்கும்போது நாயகியுடன் யாராவதுகூட வருவார்கள். ஆனால் இப்படத்தில் முழுப் படத்திலும் நான் தனியாக வந்துதான் நடித்தேன். இப்படத்தில் என்னை எல்லோரும் அவ்வளவு பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டார்கள்.

பிரியன் சார் ஒவ்வொன்றையும் சொல்லித் தந்தார். பிரியன் சார், தன் கூட இருக்கும் அனைவரும் வளர வேண்டும் என்று நினைப்பவர்.  தமிழைக் கொண்டாடுபவர்களுக்கு இப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. படத்தில் நானே டப்பிங் பேசியுள்ளேன். உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள்..” என்றார்.

தம்ழித் திரைக்கூடம் தயாரிப்பாளர் ராஜாராம் பேசும்போது, “தமிழ்த் திரைப்பா கூடத்தில் பயின்றவர்களில் நான்தான் வயதில் மூத்தவன். பிரியன் அவர்கள் எப்போதும் யாரிடமும் கோபமாகப் பேச மாட்டார்.

அவரிடம் ஏன் பாடலாசிரியர்களை உருவாக்குகிறீர்கள் என்று கேட்டேன். சென்னைக்கு பாடலாசிரியர் ஆகும் கனவில்தான் வந்தேன். தமிழ் மொழிதான் எனக்கு வாழ்வு தந்தது. அதற்கான கைமாறுதான் இது எல்லாம் என்றார். அவர் தமிழ் மொழி மீது தீராத அன்பு கொண்டவர்.

இந்தப் படம் க்ரவுட் ஃபண்டிங் முறையில்தான் உருவானது. முதலில் இப்படத்தில் வேறொருவர் இயக்கி வேறொருவரைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தது. மாணவர்கள் சொல்லி சொல்லிதான் பிரியன் சார் இறுதியில் இயக்கி நடித்தார்.

இந்தப் படத்திற்காக அவர் பட்ட கஷ்டம் அனைவருக்கும் தெரியும். அவர் பெரிய நடிகராக வருவார். படத்தை மிகப் பெரிய உழைப்பில் உருவாக்கியுள்ளார். இந்தப் படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும்..” என்றார்.

விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசும்போது, “இந்த அரணம் படத்தை எங்கள் நிறுவனம் சார்பில் வெளியிடுவது மிகப் பெரிய மகிழ்ச்சி. மாணவர்கள் சேர்ந்து குருவுக்காகப் படம் எடுத்தது இதுதான் முதல் முறை.

பிரியன் சார் எனக்கு நண்பர். இந்தப் படத்தின் மூலம் நட்பு நெருக்கமாகிவிட்டது. அவர் இப்படத்தைப் பெரிய அளவில் கொண்டு வந்துவிட்டார். இனி எங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது.

ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் நிறையப் படங்களை ரிலீஸ் செய்கிறது. அந்த நம்பிக்கையில்தான் நாங்களும் படங்களை ரிலீஸ் செய்கிறோம். ஆனால் ரிலீஸ் பற்றி சில முன்னெடுப்புகளை உதயநிதி சார் எடுக்க வேண்டும். இங்கு சின்னப் படங்கள் வர முடிவதில்லை, வாரா வாரம் வேற்று மொழிப் படங்கள் நிறைய வருகின்றன. அவைகள் தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.  அதனால், சின்னப் படங்களுக்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது.

உதயநிதி சார் சின்னப் படங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு, நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்..” என்றார்.

இயக்குநர் மோகன் ஜி பேசும்போது, “அரணம் என்பது மிக அழகான தமிழ்ப் பெயர். இப்போது எல்லோரும் ஆங்கிலத்தில் பெயர் வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இப்படியான காலத்தில்  தமிழில் பெயர் வைத்த பிரியன் சாருக்கு வாழ்த்துக்கள்.

ஒரு கிரவுட் ஃபண்டிங் படம்  ரிலீஸுக்கு வந்துள்ளது எனக்கு மகிழ்ச்சி. இது இரண்டாவது கிரவுட் ஃபண்டிங் படம். என்னுடையது முதல் படம் என்பதில் பெருமை. பிரியன் சார் உருவாக்கிய பத்துப் பாடலாசிரியர்கள் சேர்ந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். அவர்களுக்காக இப்படம் ஓட வேண்டும்.

இப்படத்தை நான் பார்த்துவிட்டேன். மிக நல்ல கதை, திரைக்கதை. அருமையான சஸ்பென்ஸ், திரில்லர். திரையில் எல்லோரும் பார்த்து ஆதரவு தாருங்கள். நெகட்டிவ், பாஸிட்டிவ் என இரண்டிலும் பிரியன் சார் இப்படத்தில் வந்துள்ளார்.

ஒரு சினிமா ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். சமீபத்திய  வீரப்பன் சீரிஸ் ஏன் அவர் வீரப்பனாக ஆனார்? எதற்காக அவர் தப்பு செய்தார்? அங்குள்ள மக்களுக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்கிறது. வீரப்பனின்  நெகட்டிவ், பாஸிட்டிவ் இரண்டையும் காட்டி உண்மையை மக்களுக்குச் சொன்ன  குழுவிற்கு என் நன்றிகள். அதே போல் இந்த அரணம் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.

இயக்குநர், நடிகர், பாடலாசிரியர் பிரியன் பேசும்போது, “இந்த அரணம் திரைப்படம் ஒரு பெரும் தவம். இந்தப் படம் எனக்கு மிகப்பெரும் அனுபவம், 20 வருடங்கள் சினிமாவில் இருப்பவனையே இந்த அளவு அடிக்கிறார்கள் என்றால் புதிதாக சினிமாவுக்கு வருபவர்களை என்ன செய்வீர்கள்?

ஒரு கலையை அந்த துறையிலிருந்து கொண்டே அழிப்பது சினிமாவில்தான். இந்த அரணம் படம் எனக்கு நிறையக் கற்றுத் தந்துள்ளது. தன்னுடைய படத்தின் விழாவிற்கே வராமல் இருக்கிறார்கள் நாயகிகள். ஆனால், எங்களுடைய நாயகி வர்ஷா இந்தப் படத்தில் ஒரு உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். இப்போதுவரை படத்திற்காக பணியாற்றி வருகிறார். அவருக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் நௌஷத் என்ன சொன்னாலும் உடனே செய்துவிடுவார். அவருக்கு நன்றி. பிகே சம்பளமே வேண்டாம். இந்தக் கதைக்காக நான் வேலை செய்கிறேன் என்று வந்து எடிட் செய்தார்  அவருக்கு நன்றி. இசையமைப்பாளர் உடல் நிலை காரணமாக வர முடியவில்லை. நல்ல பாடல்களை தந்துள்ளார். அவருக்கும் நன்றி.

இப்படத்தில் பணியாற்றிய எல்லோரும் தங்கள் படமாக நினைத்துத்தான் இதில் உழைத்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. பாடலாசிரியர்கள், நான் பாடமெடுத்தவர்கள் இப்போது மேடையில் இருப்பது பெருமையாக உள்ளது. என்னை நம்பி  இப்படத்தை முழுதாக இறங்கித் தயாரித்த என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி.

என் முயற்சியில்  250 பாடலாசிரியர் உருவாகியிருப்பதே பெருமைதான், நீங்கள் எதிரிகளை உருவாக்குகிறீர்கள் என்றார்கள் சிலர். ஆனால் எனக்குப்பெருமைதான் ஏனெனில் தோற்றாலும், ஜெயித்தாலும் அதுவும் நான்தான் என்பதில் எனக்குப் பெருமைதான்.

படம் எடுப்பது இப்போது மிகக் கஷ்டமாகிவிட்டது. படம் படைப்பாளிகள் கையில் இல்லை. கார்பரேட்டுகளின் கைகளில் இருக்கிறது. நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை. ஒரு பெரிய படம் வந்தால் நன்றாக ஓடும் சின்னப் படங்களை எடுத்து விடுகிறார்கள். ஆயிரம் தியேட்டரிலும் ஓரே படம்தான் ஓடுகிறது. நான் இப்படிப்பட்ட இடத்தில் வந்து தோற்றாலும் நான் நிமிர்ந்து நிற்பேன். நான் இருக்கிறேன் என்பதைப் பதிவு செய்வேன்.

இப்போது எடுக்கும் 300 கோடி, 400 கோடி படங்கள் எல்லாம் குப்பையாக இருக்கிறது. படம் எடுத்தா அடி, வெட்டு, இரத்தம் மட்டும்தான். கலைஞனுக்கு அறம் வேண்டாமா? காசு மட்டும் இருந்தால் போதும்.. என்ன வேண்டாலும் செய்யலாமா?. 

வெளிப் படங்கள் வருவதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், 10, 20 வருடங்களான ‘முத்து’, ‘ஆளவந்தான்’ எல்லாம் இப்போது வந்து தியேட்டரில் ஓடுகிறது. அதெல்லாம் டிவியில் 300 தடவை போட்ட படம். யூடுப்பில் ரஜினி ஜப்பானில் பேசும் ‘முத்து’ படமே இருக்கிறது. எதற்கு மீண்டும், மீண்டும் இப்படி சம்பாதிக்க நினைக்கிறீர்கள். புதுப் படங்களுக்கு கொஞ்சமாவது வழி விடுங்கள். 

ஒரு தரமான படைப்பை நாங்கள் தந்துள்ளோம். இது ஒரு எழுத்தாளனின் படைப்பு  இந்தப் படத்தின் முதல் பாதியைப் பார்த்து இரண்டாம் பாதியைக் கணிக்கவே முடியாது. முழுப் படமும் உங்களை ஆச்சரியப்படுத்தும். படத்தைப்  பார்த்து ரசியுங்கள் அனைவருக்கும் நன்றி..” என்றார். 

Our Score